மோடி தர்மர்

பட்டுப்பாதை விரிக்கும் இந்தியா… வழிக்கு வருமா சீனா?

மோடி -  ஜி ஜின்பிங்

இந்தியச் சமுத்திரத்துடன் கிழக்கு ஆசிய நாடுகளையும் ஆளுமை செய்த பல்லவ மண்ணில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா – சீனா தலைவர்களின் சந்திப்பு அக்டோபர் 11, 12-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இருதரப்புக்கும் இடையே கசப்பான பல சம்பவங்கள் இருந்தாலும்,

அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தெற்கு ஆசியாவின் நிரந்தர சக்தி இந்தியாதான் என்பதை சீனாவுக்கு மோடி புரியவைக்க முயலும் சர்வதேச ராஜதந்திரமே இந்தச் சந்திப்பு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நல்லுறவு இருந்தால்தான், இதுபோன்ற உச்சி மாநாடு நிகழ்வுகள் நடைபெறும். 2014-ல் மோடி பிரதமரான பிறகு, அவரது அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அகமதாபாத் வந்தார். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் அவ்வளவு இனிப்பானதாக இல்லை.

சீனாவுடனான பிரச்னைகள் என்னென்ன?

2017-ம் ஆண்டு சிக்கிம் மாநிலம் டோக்லாமில் இந்தியா – சீனா ராணுவங்களுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. 73 நாள்கள் நீடித்த இந்தப் பிரச்னை, பிறகு சுமுகமானது. இதன் பிறகு, சீனாவின் வூ ஹானில் நடைபெற்ற முதலாவது உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்டனர். இதுபோன்ற மாநாடுகளில் பெரிய வர்த்தக, ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாது. நீண்டநாள்களாக நீடிக்கும் பிரச்னைகளை மட்டுமே பேசி தீர்வு காண முற்படுவார்கள்” என்றவர்களிடம், “அப்படி சீனாவுடன் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?” என்று கேட்டோம்.

“1959-ல் சீன ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய்லாமா தலைமையில் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். உலகிலேயே மிக உயரமான ரயில்பாதையை திபெத்தில் அமைத்து, பொருளாதார முன்னேற்றங்களை சீனா அங்கு கொண்டு வந்தாலும், இன்று வரை திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக திபெத்தியர்கள் ஏற்கவில்லை. இவர்களுக்கான நாடுகடந்த அரசாங்கம், இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் மத்திய திபெத்திய அரசாங்கத் தலைவர் லோப்சங் சாங்கே தலைமையில் நடைபெறுகிறது. இந்த நாடுகடந்த அரசாங்கம் செயல்படுவதற்கு இடமளித்து, ஊக்கமளிப்பது இந்திய அரசுதான் என்பது சீனாவின் நீண்டகாலக் குற்றச்சாட்டு. திபெத்தியர்களின் மத உணர்வுகளுக்கு சீன அரசு மதிப்பளிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

தலாய்லாமாவுக்கு அடைக்கலம் அளித்த பிறகு, 1962-ல் நமது அருணாசலப்பிரதேசம், லடாக் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மாதம் நடைபெற்ற போரில், எல்லைகள் மாறின. இதுவரை 20-க்கும் அதிகமான முறை பேச்சுவார்த்தை நடந்தும், இந்தப் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக, சீனாவின் சியான் நகரிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல், ரஷ்யாவின் மாஸ்கோ வழியே ஜெர்மனி வரை வர்த்தகப் போக்குவரத்துத் திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது.

பழைய ‘சில்க் ரோடு’ வழித்தடத்தில், அமையவுள்ள இந்தத் திட்டத்துக்கு, ‘பெல்ட் அண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் சாலைகள், ரயில் வழித்தடங்கள் மூலம் இணைக்கும் இந்த மெகா திட்டத்தில் 126 நாடுகளும், உலகவங்கி உட்பட 29 சர்வதேச அமைப்புகளும் இணைந் துள்ளன. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார மேம்பாடு’ என்ற துணைத்திட்டமும் செயல்படுத்தப் படவுள்ளது. இதன்படி, சீனாவின் கஷ்கர் நகரிலிருந்து பாகிஸ்தானின் குவடார் துறைமுகம் வரையில் நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன. இந்த வழித்தடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்வதுதான் இந்தியாவை கொதிப்படையவைத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (shanghai Co-Operation Organisation) ஆதரவு தெரிவித்ததால், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சியானில் நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

ஏற்கெனவே, 2015, ஜூன் மாதம் பிஜீங்கில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில், ‘இந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக் காமல் சீனா-பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது’ என மோடி நேரடியாகவே குற்றம்சாட்டினார். ‘தெற்கு ஆசியாவின் அமைதியைக் குலைக்கும்விதமாக, பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துவதை தடுக்க வேண்டும்’ என சர்வதேச நாடுகளுக்கு இந்தியா கடும் அழுத்தம் கொடுக்கிறது. இதுவரையில் சீனா நமது நிலைப்பாட்டை ஏற்கவில்லை. காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோதுகூட, ‘காஷ்மீரில் ஏற்கெனவே உள்ள நடைமுறை நீடிக்க வேண்டும்’ என்றே கூறியது சீனா” என்றவர்கள் மோடியின் ராஜதந்திர முயற்சிகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

‘‘இப்படி, இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு எதிராகவே செயல்படும் சீனாவை, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற மோடியின் ஒரு திட்டம்தான் மாமல்லபுரம் சந்திப்பு. சீனாவின் பொருளாதாரத் தேவைகளுக்கும் ராணுவ ஒத்துழைப்புக்கும் இந்தியா அவசியம் என்பதை சீன அதிபருக்கு மோடி புரியவைக்க முனைகிறார். இந்திய நிறுவனங்களுக்கு சீனச் சந்தையைத் திறந்துவிடுவதால் 87 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 6.18 லட்சம் கோடி ரூபாய்) இருக்கும் இருநாட்டு வர்த்தகம், மேலும் வளர்ச்சியடையும். பிரதிபலனாக, சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மாமல்லபுரம் சந்திப்பு முடிந்த பிறகு, அக்டோபர் 31-ம் தேதி பாங்காக்கில் 35-வது ஆசியான் பொருளாதார உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் மோடி, ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மாமல்லபுரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆசியான் மாநாட்டில் பிரதிபலிக்கும்” என்றனர்.

மோடியின் ராஜதந்திரம்!

“இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் சீனாவுக்கு ஏன் இந்தியா முக்கியத்துமளிக்க வேண்டும்?” என்று முன்னாள் ‘ரா’ உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

‘‘1980-களில் தெற்கு ஆசியாவின் அரசியலை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கனவுடன் ராஜீவ் காந்தி செயல்பட்டார். இந்தியப் பெருங்கடலின் நிகரில்லாத ஆளுமையாக இந்தியா இருக்க வேண்டும் என்பது ராஜீவ் காந்தியின் கனவு. இதற்காக பல சர்வதேச நாடுகளையும் பகைத்துக்கொண்டார். மோடியின் திட்டமும் அதேதான். ஆனால், வழிமுறைதான் மாறியுள்ளது.

பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பு என இரண்டு வழிகளில் சீனாவின் ஆசிய ஆதிக்கத்தை இந்தியா கட்டுப்படுத்தப் பார்க்கிறது. உலகவங்கியின் தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மிகப்பெரிய சந்தையை வைத்துள்ள இந்தியா, வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அத்தியாவசியமாகிறது. இஸ்ரேலின் மிகப்பெரிய ராணுவத் தளவாட இறக்குமதியாளரே இந்தியாதான். தெற்கு சீனக் கடலில் அபரிமிதமாக உள்ள ஹைட்ரோகார்பன் வளம் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சீனாவின் எதிர்ப்பை யும் மீறி, வியட்நாமின் கடல் எல்லைக்குள் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயுவை எடுக்கிறது. கடந்த வாரம்கூட ஓ.என்.ஜி.சி நிலையத்தின் அருகே சீன கடற்படைக் கப்பல்கள் வந்ததால் பதற்றம் நிலவியது.

ஐ.நா-வில் நிரந்தர உறுப்பினராகுமா இந்தியா?

தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தவும் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வர்த்தக, ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வியட்நாமில் இந்தியக் கடற்படைத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் – சென்னை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதும் இதன் ஒரு பகுதிதான். ஒருபக்கம் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் இந்தியா முயற்சி செய்கிறது. இதற்கு இன்று வரை தடைக்கல்லாக இருப்பது சீனாதான். இந்தத் தடையை உடைப்பதற்காகவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்தவும்தான் சீன அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி மாமல்லபுரத்தைத் தேர்வுசெய்துள்ளார்” என்றார்.

இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மர், சன் புத்த வழிபாட்டை சீனாவில் தோற்றுவித்தவராக அறியப்படுகிறார். அவர், புகழ்பெற்ற ஷாவ்லின் மடாலய குங்பூவின் தந்தையாகவும் போற்றப்படுகிறார். கி.பி.2 முதல் 9-ம் நூற்றாண்டு வரை வங்களா விரிகுடாவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பல்லவ சாம்ராஜ்ஜியம், கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகக் கலாசாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. மாமல்லபுரம் கடற்கரை நகரில் இருந்துதான், தெற்கு ஆசிய நாடுகளை பல்லவர்கள் கட்டுப் படுத்தினர். இன்று போதிதர்மர், பல்லவ மன்னர் கள் வழியில் மோடியும் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்ட முயற்சி செய்கிறார். இதில் மோடி அடையும் வெற்றி, இந்தியாவின் வெற்றி!

சீனாவின் தேர்வே மாமல்லபுரம்!

சீன அதிபர் இந்தியா வருவது, மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அப்போது புராதன நகரங்களில் சந்திப்பை நடத்தலாம் என்று புத்தகயா, மாமல்லபுரம், அகமதாபாத் என மூன்று இடங்களை அதிகாரிகள் தேர்வுசெய்துள்ளனர். மூன்று இடங்களையும் நேரில் வந்து பார்த்த சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள், மாமல்லபுரத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

சீன மார்க்கெட்டைப் பிடிக்கவே சந்திப்பு!

இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு குறித்து, சென்னைப் பல்கலைக்கழக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மையத்தின் துறைப் பேராசிரியரும் இயக்குநருமான எஸ்.மணிவாசகனிடம் பேசினோம்.

“120 கோடி மக்கள்தொகைகொண்ட சந்தை இந்தியா. அதைத் தக்கவைத்துக்கொள்ள நடக்கும் வியாபாரரீதியான நடவடிக்கையே இந்தச் சந்திப்பு. விலை குறைந்த பொருள்களுக்கான சந்தை, இந்தியாவில் திறந்தே இருக்கிறது. அதைப் பிடிக்க சீனா முயல்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தற்போது வர்த்தகப்போர் நடத்துவருகிறது. அதன் ஒருகட்டம்தான் இந்தியாவை நோக்கி சீனா வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையே வான்வழி, தரைவழி, கடல்வழி வகைகளில் இணைப்பு நடவடிக்கை நடைபெற்றுவருகிறது. தரைவழி இன்னும் முடியவில்லை. இதுவும் முடிந்துவிட்டால், வர்த்தகரீதியில் ஆசியா பெரிய வியாபாரக் கேந்திரமாக ஆகிவிடும். கி.பி. 2-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சீனாவுக்கு வியாபாரிகள் சென்றதாக பான் கூ என்கிற வரலாற்று ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். அதைப் புதுப்பித்துக்கொள்ளத்தான் சீனப் பிரதமர் மாமல்லபுரம் வருகிறார்.

2015-ம் ஆண்டு மோடி சீனாவுக்குச் சென்றார். 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2016-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சீனாவுக்குச் சென்றார். இருநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2017-ம் ஆண்டு சீனாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து சுமார் 35,000 மாணவர்கள் சீனாவில் படித்துவருகிறார்கள். சீனா, மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதல் இடம் வகிக்கும் சீனாவின் மார்க்கெட்டை இந்தியா பிடிக்கவேண்டும். மோடியின் நோக்கம் இதுதான்” என்றார்.

%d bloggers like this: