ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களையும் தாக்கும்

ஆஸ்டியோபோரோசிஸ் என்ற பெயரை கேட்டதும், அது பெண்களை தாக்கும் எலும்பு தொடர்பான பிரச்னை என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால், ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ஆண்களையும் பாதிக்கும் என்பது தெரியுமா?! ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களில் 20 சதவிகிதத்தினர் ஆண்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களைத் தாக்குவதற்கான காரணங்கள் என்ன?

டெஸ்டோஸ்டீரான் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புள்ள ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் குறைபாடு இருப்பது தெரிய வந்திருக்கிறது. டெஸ்டோஸ்டீரான் குறைபாடு உள்ள ஆண்களுக்கு எலும்புகளின் அடர்த்தி பாதிக்கப்படும் என்பதால் அதை குணமாக்க வெளிநாடுகளில் டெஸ்டோஸ்டீரான் ரீ பிளேஸ்மென்ட் தெரபி வழங்கப்படுகிறது. ஆண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சிறிது தேவை. ஈஸ்ட்ரோஜன் என்பது எலும்புகளின் அடர்த்தியை பாதுகாக்கும் ஒரு ஹார்மோன்.

பெண்களுக்கு பிரதானமாக இருக்க வேண்டிய இந்த ஹார்மோன் ஆண்களுக்கும் கொஞ்சம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆண்களின் உடல் அமைப்பு டெஸ்டோஸ்டீரானை ஈஸ்ட்ரோஜனாக மாற்றி எலும்புகளின் அடர்த்திக்கு உதவும் வகையில் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு காரணமான நொதி குறைவாக இருக்கும் ஆண்களுக்குத்தான் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு அதிகம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு

பழைய எலும்புகளின் செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகி ரீ மாடலிங் செய்துகொள்ளும் செயல்பாடு மனித வாழ்க்கையில் கடைசி வரை நடைபெறும். புதிய எலும்புகள் உருவாக உடலுக்கு போதுமான அளவு கால்சியமும் வைட்டமின் டியும் தேவை. இந்த  இரண்டும் போதிய அளவு கிடைக்காதவர்களுக்கு பழைய எலும்பு செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும் செயல்பாடு சரியாக நடக்காமல் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து ஏற்படலாம்.

உடற்பயிற்சியின்மை

உடற்பயிற்சி செய்யாத ஆண்களுக்கு எலும்புகளும், தசைகளும் வலுவிழக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். வாக்கிங் மற்றும் ஜாகிங் பயிற்சிகள் இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.

மருத்துவ சிகிச்சைகள்

* கார்டிகோ ஸ்டீராய்டு

ஆஸ்துமா முதல் அலர்ஜி வரை பல நோய்களுக்கும் அளிக்கப்படும் சிகிச்சைகளில் இடம்பெறும் ஸ்டீராய்டு வகை மருந்துகள் இவை. இந்த மருந்துகள் எலும்புகளை பாதிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பிட்ட அளவையும் காலத்தையும் தாண்டி எடுத்துக் கொள்ளப்படும் இந்த வகை ஸ்டீராய்டுகளால் எலும்பு இழப்பும், ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் ஏற்படலாம்.

* ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான மருந்துகள், வலிப்புக்கான மருந்துகள்

இவை இரண்டையும் நீண்டகாலத்துக்கு அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வரலாம். மேலே குறிப்பிட்ட மருந்துகளை எடுத்து கொள்ளும் ஆண்கள் அவற்றின் விளைவாக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு பாதிப்புகள் வரும் அபாயத்தை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம்.

* மருத்துவ காரணங்கள்

நீரிழிவு, ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் செரிமான கோளாறு, ரத்தம் தொடர்பான குறைபாடுகள் போன்றவை இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக நீண்ட காலத்துக்கு இவ்வகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது இந்த பாதிப்பின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும்.

* புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் எலும்புகளை எப்படி தாக்கும் என்பதை முந்தைய அத்தியாயங்களில் விரிவாக பார்த்திருக்கிறோம். புகைப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் பலமடங்கு அதிகம். ஏனெனில், எலும்பு செல்களை நேரடியாக தாக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது புகையிலை பொருட்களில் உள்ள நிக்கோட்டின்.

சமாளிப்பது எப்படி?

ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட ஆண்கள் சில வாழ்வியல் மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

* உடற்பயிற்சி

பெரும்பாலான ஆண்களுக்கு இளவயதில் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருந்த அனுபவம் இருக்கும். எனவே, நடுத்தர வயதை எட்டியதும் ஏதோ ஒரு உடற்பயிற்சியை தொடர்வது இவர்களுக்கு அத்தனை சிரமமாக இருக்காது. கால்சியம் சேமிப்பும், எலும்பு அடர்த்தி அதிகரிப்பதும் விடலைப்பருவத்தில் உச்சத்தில் என்பதால் அந்த வயதில் உள்ள ஆண் பிள்ளைகள் விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளில் அவசியம் ஈடுபட வேண்டும்.

அதன் மூலம் எலும்புகளின் அடர்த்தியை பாதுகாக்கலாம். எடை தூக்கும் பயிற்சி, கூடைப்பந்து விளையாடுவது கயிறு தாண்டும் பயிற்சி போன்றவை எலும்புகளுக்கு நல்லது. தினமும் அரை மணி நேரம் நடப்பது அருமையான பயிற்சி. வாரத்தில் இரண்டு முறை எடை தூக்கும் பயிற்சிகளை செய்வது அடர்த்தியை காக்கும்.

* கால்சியம் சப்ளிமென்ட்

கால்சியம் பற்றாக்குறை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் அதற்கேற்ப கால்சியம் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். 19 முதல் 50 வயது வரை நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் அளவும், 50 வயதை கடந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 1200 மில்லி கிராம் அளவும் கால்சியம் தேவை. கால்சியம் மட்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை முழுமையாக காப்பாற்றாது அதற்கு வைட்டமின் டி சத்தும் அவசியம். வைட்டமின்டி குறைபாடும் உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் சப்ளிமென்டரி பரிந்துரைப்பார். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இளம்வெயில் உடலில் படுமாறு சிறிது நேரம் இருப்பதன் மூலம் இயற்கையாக வைட்டமின் டி சத்தை உடல் கிரகித்து கொள்ளும்.

* ஹார்மோன் குறைபாடு

ஹார்மோன் குறைபாடுகளின் காரணமாகவும் எலும்புகள் பலவீனமாகலாம். எனவே அதையும் மருத்துவரிடம் காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டியது
அவசியம்.

%d bloggers like this: