ஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க!’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்

ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர்.

நவகிரகங்கள்

ந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஏழு கிரகங்களும், வாயு மண்டலத்தைக் கடந்திருக்கிற அண்டவெளியில், `பிரவஹம்’ எனும் சிறப்புக் காற்றினால், ஒன்றுக்கு மேல் அகண்ட இடைவெளியுடன் இணைந்த தனித்தனி வழித்தடங்களில் சுற்றி வருகின்றன என்கிறது சூர்ய சித்தாந்தம். காலம் என்பது அருவமானது; அதற்கு உருவம் அளிப்பவர்களே இந்தக் கிரகங்கள்தான்! அதுமட்டுமா, கிழமைகளின் வரிசைகளை வரையறுத்ததும் இவர்கள்தான்.

 

 

ஞாயிற்றுக்கிழமை எனில், சூரியன் தோன்றும் வேளையில் அன்றைய தினம் சூரிய ஹோரை. அன்று முழுவதும் ஞாயிற்றுக்கிழமை. கிரக வரிசையில், சூரியனிலிருந்து 4-வதாக இருப்பது சந்திரன். ஆகவே, மறுநாள் திங்கள்கிழமை. சந்திரனிலிருந்து 4-வது, செவ்வாய்; எனவே, மறுநாள் செவ்வாய்க்கிழமை என விளக்கம் அளிக்கிறது சூர்ய சித்தாந்தம். அவர்களின் சுழற்சி, உலக இயக்கத்துக்கு உதவுவதால், அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர். உடலுடன் நிற்காமல், உள்ளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிந்தனையிலும் மாற்றமுறச் செய்து, செயல்பாட்டில் ஏற்ற-இறக்கத்தையும் நிகழ்த்துகின்றனர் என்று, கிரகங்கள் குறித்து ஜோதிட நூல்ககள் விவரிக்கின்றன.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். கால புருஷனின் தேகத்தில் தலை, மேஷம்; முகம், ரிஷபம்; கழுத்து, மிதுனம்… எனத் தொடங்கி கால்கள், மீனம் என முழுமையுறும். இந்த ராசிகளில் பற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள், அந்தந்த உடற்கூறுகளுடன் இணைந்து, மொத்த உடலையும் பராமரிக்கின்றன.

 

பஞ்சபூதங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த உலகம். பூதங்களில், ஆகாயமும் அடங்கும்; அதில் கிரகங்களும் இணைந்துள்ளன. ஐம்பெரும் பூதாம்சங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த மனித உடல் என்கிறது ஆயுர்வேதம் (இதிபூத மயோ தேஹ:). நம் உடலிலும் ஆகாயத்தின் பங்கு உண்டு; அதில், கிரகங்களின் சாந்நித்தியமும் கலந்திருக்கும். வெளியிலுள்ள ஆகாயம், உடலுக்குள்ளும் பரவியிருக்கிறது எனத் தெரிவிக்கிறது உபநிடதம். வெளியில் தென்படும் கிரகங்களின் சுழற்சியில் ஏற்பட்ட விளைவு, உடலுக்குள் உறைந்துள்ள கிரகாம்சத்திலும் பரவியிருக்கும்.

ஆக, நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. அவர்களை வணங்கிச் சிறப்பிப்பதால் நம் தேகம் நலமாகும்; சிந்தனை வளமாகும்; செயல்கள் சிறப்படையும். ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

நவகிரகங்கள்

நவகிரகங்கள்

நாளும் கோளும் நன்மை அளித்திட…

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. ஆக, தினமும் அதிகாலையில், விநாயகரையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதோடு, அந்த நாளுக்குரிய கிரகத்தையும் வழிபட வேண்டும். ராகு-கேதுக்களை அவர்களுக்கான சிறப்பு வேளைகளில் வழிபடலாம். நவகிரகங்களை வழிபடுவதுடன் அவர்களுக்கு உரிய கிரக தேவதை, அதிதேவதை மற்றும் பிரத்யதிதேவதையையும் தியானித்து வழிபடுவது விசேஷம். இதனால், ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்பால் உண்டாகும் கெடுபலன்கள் விலகி, நன்மைகள் உண்டாகும். (கிரகங்கள் – கிரகதேவதை – அதிதேவதை – பிரத்யதிதேவதை விவரம் தனியே தரப்பட்டுள்ளது).

அதேபோல், தேவைக்கேற்ப கிரகங்களுக்கான சாந்தி பரிகார பூஜைகள் செய்தும் வழிபடுவது அவசியம். ஜாதகருக்கு பகைபெற்று தீமை அளிக்கக் காத்திருக்கும் கிரகங்கள், தங்களின் தசாபுக்தி, கோச்சார காலங்களில் பாதிப்பை உண்டாக்கலாம். ஆகவே, ஜாதகத்தில் பலம் குறைந்து பாதிப்பை உண்டாகும் வகையில் அமைந்துள்ள கிரகங்களுக்கு உரிய பரிகார பூஜைகளைச் செய்யவேண்டும்.

நவகிரகங்கள்

நவகிரகங்கள்

இதுபோன்ற விரிவான பரிகார பூஜைகள், ஹோமங்கள் மட்டுமன்றி, எளிய வழிமுறைகளையும் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். அவற்றைச் செய்வதால், ஒன்பதுகோள்களும் உன்னத பலன்களை அருளும்.

எளிய பரிகார வழிமுறைகள்

 • காய்ச்சாத பசும்பாலை 15 நாள்கள் தொடர்ந்து அருகிலுள்ள ஆலயங் களுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். அதேபோல், தொடர்ந்து 45 நாள்களுக்கு, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று நீர் நிரம்பிய தேங்காயைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

 • தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால், மங்கலம் உண்டாகும்.

 • பயணம் செய்யத் தொடங்குமுன் கைப்பிடி அரிசி அல்லது கோதுமையை ஆற்று நீரில் விடுவதால் நலம் உண்டாகும்.

 • அதேபோல், கிரக பாதிப்புகள் நீங்குவதற்கு, உரிக்காத தேங்காயையும் ஓடு நீக்காத பாதாம் பருப்பையும் ஆற்று நீரில் இடுதலையும் பரிகாரமாகச் சொல்வார்கள்.

 • இரவு படுக்கப் போகும்போது ஒரு குவளையில் நீரெடுத்து தலையணை அருகே வைத்துக்கொண்டு, அதை காலையில் ஒரு செடியில் ஊற்றிவிட வேண்டும். இதை 43 நாள்கள் செய்யவேண்டும்.

 • உறவுகள் அனைவரையும் அழைத்து சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதால் நன்மைகள் உண்டாகும். இயலாதவர்கள், தினமும் சூரிய வணக்கம் செய்வதுடன் சூரியனுக்கு நீர் அளிக்கவும் வேண்டும்.

 • வியாழனன்று பூண்டு, வெங்காயம் உண்பதைத் தவிர்க்கவும். அந்த நாளில் கோயில்களில் இனிப்பு நைவேத்தியம் சமர்ப்பித்து, பிரசாதமாக வழங்கலாம்.

 • அனுதினமும் விநாயகர் மற்றும் அனுமனை வழிபடு வதால், கிரக தோஷங்கள் நம்மைவிட்டு விலகியோடும்.

 • மாதப்பிறப்பு நாள்களில் சர்க்கரை, கடலைப் பருப்பு, உப்பு, நெய், மாவு போன்றவற்றை தானம் அளிக்கலாம்.

 • குரங்குகளுக்கு வாழைப்பழம் அளித்தல், நாய்க்கு உணவிடுதல் போன்ற காரியங்கள் புண்ணியம் சேர்க்கும்; தோஷம் நீக்கும். அதேபோல், இரவில் ஒரு பிடி பச்சைப் பயிரை ஊறவைத்து மறுநாள் புறாக்களுக்கு அளிக்கவும்.

 • ‘வெள்ளிக்கிழமைகளில் 100 பசுக்களுக்கு புல் அளிக்கவும். செவ்வாய்க் கிழமை இரவுகளில் தலையருகே கீரைகளை வைத்துக்கொண்டு உறங்கி, அதை மறுநாள் பசுக்களுக்கு தானம் அளிக்கவும். இப்படி மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்வது நல்லது.

 • விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில், ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷம். அதேபோல் ஏழை மாணவர்களின் படிப்புக்கும், முதியோரின் ஜீவாதாரத்துக்கும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் இயன்ற உதவிகளைச் செய்வதன்மூலம், நம் முன்வினைகள் நீங்கும்; கிரக பாதிப்புகளும் விலகி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும்.

தினமும் படிக்க…

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

நவகிரக ஸ்லோகம்

ஆரோக்யம் பிரததாது நோ தினகர;

சந்த்ரோ யசோ நிர்மலம்

பூதிம் பூமிசுதோ சுதாம்சு தநயஹ

பிரக்னம் குரு; கௌரவம்

காவ்ய கோமள வாக் விலாஸம் அதுலம்

மந்தோ முதம் சர்வதா

ராஹீர் பாஹிபலம் விரோத சமனம்

கேது; குலஸ் யோனதிம்.

கருத்து: ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் அருளும்படி சூரியனையும், மதிப்பும் மென்மையும் பெற சந்திரனையும், வளமும் செல்வம் அருளும்படி செவ்வாயையும், புத்திக்கூர்மையையும் சுறுசுறுப்பையையும் தரும்படி புதனையும், ஞானத்தையும் நடுநிலைமையும் அருளும்படி குருபகவானையும், வசீகரம் மற்றும் முன்னேற்றம் தரும்படி சுக்கிரனையும், ஒற்றுமையையும் நிம்மதியையும் அருளும்படி சனியையும், வலிமை, வீரம், வீரியம் அருளும்படி ராகுவையும், குழந்தைச் செல்வமும் உற்றார் உறவினருடன் இணைந்து நல் வாழ்வு வாழ அருளும்படி கேதுவையும் வணங்கி வரம்பெறுவோம்.

%d bloggers like this: