விடுதலைக்கு விலை… சொத்தில் பாதி! – பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி!

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்தது. உடனடியாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் விஜய் படத்தின் டிரெய்லரைப் பார்த்த குஷியில், ‘‘பிகிலேஏஏஏ…’’ என்று இமிடேட் செய்துகொண்டே வந்தார் கழுகார். நாமும் பதிலுக்கு ‘‘ஜெயிலேஏஏஏ…’’ என்று குரல்கொடுக்க, அதிர்ச்சியுடன் பார்த்தார் கழுகார்.

“வேறொன்றுமில்லை. பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் பற்றி, கடந்த இதழில் கூறியிருந்தீர். மேற்கொண்டு ஃபாலோஅப் இருக்கிறதா?’’

“நீர் கேட்காவிட்டாலும் அதிலிருந்துதான் ஆரம்பிக்கப்போகிறேன். ஃபாலோஅப்புக்கு முன்பாக ஒரு ஃப்ளாஷ்பேக்.

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்தது. உடனடியாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது டெல்லியில் முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவர், சென்னைக்கு வந்து சிகிச்சைகளைப் பார்வையிட்டார். அவர், நம் மாநிலத்தோடு நெருக்கமான நபரும்கூட. ஒருகட்டத்தில், ஜெயலலிதாவின் மரணம் உறுதியானது. அதுகுறித்த அறிவிப்பை வெளியிட, சசிகலா தரப்பு முடிவுசெய்தது. ஆனால், அதற்கு அந்தப் பிரமுகர் தரப்பிலிருந்து தடை போடப்பட்டது. ‘முதல்வர் யார், கட்சி யாரிடம் இருக்கும் என்பதையெல்லாம் முடிவுசெய்துவிடுங்கள்’ என்று டெல்லியின் அறிவுரைப்படி நிபந்தனைகளை விதித்தனர்.”

சசிகலா, இரண்டரை ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்கு முதலில் சம்மதித்தவர்கள் எல்லோரும் இப்போது ஒதுங்கிப் போகிறார்களாம். காரணம், சமீபத்தில் டெல்லி தரப்புடன் நடத்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை பேரத்தில் மன்னார்குடி தரப்பு பிடிகொடுக்கவில்லை என்ற புதிய தகவல் இப்போது கசிந்துள்ளது!’’

‘‘அப்படியா?’’

‘‘இந்தமுறை பெங்களூரில் வைத்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திய பக்கத்து மாநிலத்துக்காரர்மீது சில குற்றச்சாட்டுகள் இருந்ததால், இந்தமுறை பேச்சுவார்த்தைக்கு வேறு ஒருவர் வந்துள்ளார். அவர், ஒரு வி.வி.ஐ.பி-யின் மகன்.’’

‘‘என்னது… வி.வி.ஐ.பி-யின் மகனா?’’

‘‘எதற்காக இப்படி ‘ஷாக்’ ஆகிறீர்? அந்த மகனின் அரசியல் ஆட்டங்கள் தற்போது சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்காகவே அவர் இரண்டு முறை பெங்களூரு வந்து சென்றுள்ளாராம். இந்த முறை டிமாண்ட்கூட ஏக ‘ஷாக்’ அடிக்கும் வகையில் பெரிதாக இருந்ததாம். சசிகலாவின் விடுதலைக்கு விலையாக, அவரின் சொத்துமதிப்பில் பாதியை தட்சணையாகக் கேட்கப்பட்டதாம். சம்மதம் என்றால், விடுதலை வேலைகளுக்கு எந்தத் தடையும் இருக்காது. அது விறுவிறுவென நடந்தேறும் என்றும் பேசப்பட்டிருக்கிறது.’’

‘‘சசிகலா தரப்பு ரியாக்‌ஷன் என்னவோ?’’

‘‘ஏற்கெனவே உடல்நிலை மோசமாகிவிட்ட சூழலில், என்ன செய்வது எனப் புரியாமல் பதறிக் கிடக்கிறது சசிகலா தரப்பு. இந்த நிலையில், இப்படிப் பாதிக்கும் மேலான சொத்தையே விலையாகக் கேட்கிறார்களே என வருத்தம் பொங்கிக்கொண்டுள்ளனர். ‘ஏற்கெனவே காசை வாங்கிக்கொண்டு கழுத்தறுத்துவிட்டார்கள். காசையும் கொடுத்து சிறையிலும் வாடுகிறார் சசிகலா. இப்போது அவர் உடல்நிலை சரியில்லாததைத் தெரிந்துகொண்டு, விடுதலை ஆசையைக் காட்டுகிறார்கள்… விலையையும் கூட்டுகிறார்கள்’ என்று சசிகலா தரப்பினர் அழுகைப் பொங்கச் சொன்னதாகப் பேசிக்கொள்கிறார்கள்.’’

‘‘சரி, என்ன முடிவு எடுத்தார்கள்?’’

‘‘இப்படிப்பட்ட முயற்சிகளில் மீண்டும் மீண்டும் இறங்கி ஏதாவது சுழலில் சிக்கிக்கொள்வதைவிட, மிச்சம் இருக்கும் காலத்தையும் சிறையிலேயே கழித்துவிடலாம் என நினைத்து, அந்த பேரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம் சசிகலா தரப்பு. அதனால்தான் பெங்களூரு சிறை அதிகாரி ரூபா ஏற்கெனவே கொடுத்த புகாரை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட வினய்குமாரின் விசாரணை அறிக்கையைக் கசியவிட்டது, சிறையில் ரெய்டு நடத்தப்பட்டது என அடுத்தடுத்த காட்சிகளை டெல்லி ஆசியோடு அரங்கேற்றினார்களாம். மனரீதியாகவும் அழுத்தம் கொடுத்து சசிகலாவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு கட்டம்தானாம் இது.”

“எடப்பாடி என்ன நினைக்கிறார்?”

“சசிகலா வெளியே வந்தால், அவர் பின்னால் எந்த எம்.எல்.ஏ-வும் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர் கறாராக இருக்கிறாராம். இதற்கான பொறுப்பை இரு அமைச்சர்களிடம் ஒப்படைத்துள்ளாராம். ஏற்கெனவே

எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் செம கவனிப்பில்தான் உள்ளனர். இப்போது, மூன்று மடங்கு கூடுதலாகக் கவனிக்கவிருக்கிறார்களாம்!’’

‘‘இன்கிரிமென்ட் என்று சொல்லும். இருக்கட்டும், பிரதமர் – சீன அதிபர் சந்திப்பைவைத்து டெல்லியில் சர்ச்சை ஒன்று கிளம்பியதாமே?’’

“சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் வெள்ளி அன்று அசைவ உணவுடன்கூடிய இரவு விருந்தை அளித்தார் பிரதமர் மோடி. கடற்கரைக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட குடிலில், இந்த உபசரிப்பு நடந்துள்ளது. கோயில் வளாகத்தில் எப்படி அசைவம் பரிமாறலாம் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

அரசு தரப்பிலோ, ‘அது கடற்கரைக் கோயில். அங்கு பூஜையோ ஆகமவிதிமுறைகளோ கிடையாது. செருப்பு அணிந்துகொண்டே அங்கு வலம்வரலாம். அந்த இடத்தில் அசைவம் சாப்பிடுவது தவறல்ல’ என்கிறார்களாம்.’’

‘‘நீட் விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறதே?’’

‘‘முதலில் மாணவர்கள் சிக்கினார்கள். இப்போது ஒரு நிறுவனம் சிக்கியுள்ளது. நாமக்கல்லின் கிரீன்பார்க் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான 17 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இதில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 150 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக் கின்றன. இதையடுத்து இந்தக் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான பயிற்சி நிலையங்களில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை ஆய்வுசெய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.’’

‘‘ராதாபுரம் விவகாரம் என்னவானது?’’

‘‘அக்டோபர் 23-ம் தேதி வரை வாக்கு எண்ணிக்கை வெளியிடத் தடை என்று உச்ச நீதிமன்றம் சொன்ன நிலையில், அக்டோபர் 14-ம் தேதியன்று அப்பாவு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கைவைத்துள்ளார். அதற்கு நீதிபதி தரப்பில், ‘23-ம் தேதி வரை பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா, என்ன அவசரம்?’ என்று எகிற, சிங்வி தரப்பு அமைதியாகிவிட்டதாம்.’’

‘‘அப்பாவு தரப்பு எதற்காக அவசரப்படுகிறது?’’

‘‘இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நாங்குநேரி தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வந்துவிட்டால், தி.மு.க-வுக்குச் சாதகமாக நாங்குநேரி தேர்தல் களம் மாறிவிடும் என காங்கிரஸ் தரப்பு கணக்குப்போடுகிறது. அப்பாவு மகனின் திருமணம் வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழில் தன் பெயருக்குப் பின்னால் `எம்.எல்.ஏ’ எனப் போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறார் அப்பாவு.’’

‘‘அமித் ஷா மகன் பற்றிய செய்திகள் பரபரக்கின்றனவே?’’

‘‘அமித் ஷா மகன் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதிகாரம்மிக்க இந்தப் பதவிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்காத நிலையில், இவரே தேர்வுசெய்யப்படுவார் என்கிறார்கள்’’ என்ற கழுகார், ‘‘இடைத்தேர்தல் விஷயங்களைக் கவனிக்க வேண்டும்… அடுத்த இதழில் கூடுதல் பக்கங்களை ஒதுக்கும்’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

%d bloggers like this: