தி.மு.க மகளிரணியை ஓரம்கட்டுகிறதா கட்சித் தலைமை?

‘கவலைதோய்ந்த முகத்துடன் கம்பிக்குப் பின்னால் சிதம்பரம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீரா?’’ – கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் கேள்வியை வீசினோம்.

‘‘இந்தியா முழுவதும் வைரலான படம் பற்றித்தானே கேட்கிறீர்… பார்க்காமலா இருப்பேன்!’’ என்ற கழுகார், ‘‘சிறைக்கைதியாகி கிட்டத்தட்ட 50 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இப்போது புதிதாக மீண்டும் அமலாக்கத் துறை அவரைக் கைதுசெய்துள்ளது. அமித் ஷாவை 80 நாள்கள் சிறையில் வைத்திருந்த கணக்கை நேர்செய்யாமல் விடமாட்டார்கள் என்கிறார்கள். சி.பி.ஐ வழக்கில் சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்து, அது விசாரணையில் இருக்கிறது. இத்தனை நாள்கள் சிறையில் இருப்போம் என்பதை சிதம்பரமே எதிர்பார்க்க வில்லையாம். ‘அவருக்கு உடல்நிலையில் பல்வேறு உபாதைகள் இருக்கின்றன. ஏ.சி இல்லாமல் டெல்லியில் இருப்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வேதனைகளைதான் அந்தப் புகைப்படம் வெளிப்படுத்தியுள்ளது’ என்று கவலை பொங்கச் சொல்கிறார்கள் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்’’ என்றார்.

‘‘அமலாக்கத் துறையின் திட்டம் என்னவாம்?’’

‘‘இப்போது சிதம்பரத்தை அமலாக்கத் துறை அவசரமாகக் கைதுசெய்ததே சி.பி.ஐ வழக்கில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிடக் கூடாது என்பதால்தான். சி.பி.ஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் பெற்றால்தான் வெளியே வர முடியும். அதேநேரம், சிதம்பரத்திடம் சில ஆவணங்களைக் காட்டி வாக்குமூலம் வாங்க இருக்கிறது அமலாக்கத் துறை. அது நடந்துவிட்டால், சிதம்பரத்தின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும் என்கிறார்கள். இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, சிதம்பரம், கார்த்தி இருவரின் எம்.பி பதவிக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு இப்போதே கிளம்பிவிட்டது.’’

‘‘சசிகலா விவகாரத்தில் என்ன ஃபாலோ-அப்?’’

‘‘சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ்., ‘சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி, கட்சித் தலைமை நிர்வாகக் குழு ஆலோசித்து முடிவெடுக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். சசிகலாவை விடுவிக்க, டெல்லி ஒருபுறம் முட்டுக்கட்டைப் போட்டுவரும் நிலையில், சசிகலா விடுதலை பற்றி இங்கு உள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையாகக் கருத்து தெரிவித்து வருவதைக் கவனிக்க வேண்டும். சசிகலாவின் விடுதலைக்கு வேறு ஏதோ ரூட்டில் வேலை நடப்பது தெரிந்துதான், அவரைப் பற்றிய பேச்சுகள் இப்போது அ.தி.மு.க-வில் அதிகமாக அலையடிக்கின்றன என்கின்றனர்.’’

‘‘அப்படியா?’’

‘‘சசிகலா விவகாரத்தில் முட்டுக்கட்டை போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பன்னீரே, ‘கட்சித் தலைமை முடிவெடுக்கும்’ என்று சொன்ன பிறகு, ‘இனி எதிர்ப்பு என்பது சசிகலாவுக்கு பெரியளவில் இருக்காது’ என்று எடப்பாடி தரப்பு கணக்குபோடுகிறதாம். சில நாள்களுக்கு முன்பு சசிகலாவை எடப்பாடி தரப்பிலிருந்து ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது, ‘சுப்பிரமணியன் சுவாமி நமக்காக மேலிடத்தில் பேசிவருகிறார். குருபெயர்ச்சி முடிந்து நல்ல தகவல் வரலாம். பி.ஜே.பி விஷயத்தில் நாம் கொஞ்சம் அடக்கியேவாசிக்க வேண்டும்’ என்று சசிகலாவிடம் சொல்லப் பட்டதாம். இந்தத் தகவல் கசிந்த பிறகுதான், அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தைச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.’’

கனிமொழி

‘‘கனிமொழி தரப்பு அப்செட்டில் இருக்கிறதாமே?’’

‘‘ஆம், மனரீதியாக கனிமொழி மிகவும் வருத்ததில் இருக்கிறார் என்கிறார்கள். ‘அண்ணனுடன் எந்த விஷயத்திலும் நான் முரண் படுவதில்லை. எதற்கு என்னைப் புறக்கணிக் கிறார்கள் எனப் புரியவில்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.’’

‘‘ஓஹோ!’’

‘‘பொதுக்கூட்டத்துக்குக்கூட கனிமொழியை அழைக்க, மாவட்டச் செயலாளர் களுக்குத் தடை போடப் பட்டிருக்கிறதாம். இதனால், மா.செ-க்கள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ‘அக்காவே அமைதியாக ஒதுங்கியிருக்கும் போது தலைவர் ஸ்டாலின் எதற்காக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்கி றார்?’ என்பதே பலரது கேள்வி. இதுதொடர்ந்தால், கட்சியில் திரும்பவும் ஒரு பிளவு ஏற்படும் என்றும் இருவருக்கும் பொதுவான நபர்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இளைஞரணியில் புதிதாக இளம்பெண்கள் அணியைக் கொண்டுவர உதயநிதி தரப்பு திட்டமிடுவதும் கனிமொழியின் ஆதரவாளர்களைச் சோர்வடையச் செய்துள்ளது.”

“அ.தி.மு.க-வின் இளம்பெண்கள் பாசறை போலவா?”

“அங்கு அது தனியாக இருக்கிறது; இளைஞர் அணியுடன் இல்லை. ஆனால், தி.மு.க-வில் இளைஞரணிதான் அதை கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது. ‘தி.மு.க-வில் மகளிரணியின் செயலாளராக கனிமொழி இருக்கும்போது, இளம்பெண்கள் அணியைக் கொண்டுவர முயற்சிப்பது, மகளிர் அணியை காலிசெய்யும் திட்டம்தானே?’ என்று கனிமொழியின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.”

சிதம்பரம்

‘‘மு.க.செல்வியின் மருமகன் ஜோதிமணி, போலீஸ் வில்லங்க விவகாரத்தில் சிக்கி விட்டாராமே?’’

“சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவரிடம், குடியாத்தத்தைச் சேர்ந்த ஜாகீர் அகமத் தமான் என்பவர் அணுகி, தன்னிடம் ஒரு கோடி ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், 80 லட்சம் ரூபாய்க்கு 500, 2000 ரூபாய் நோட்டுகளைத் தந்தால், ஒரு கோடி ரூபாயைத் தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய தினேஷ், ஜாகீர் கூறியபடி கடந்த அக்டோபர் 15-ம் தேதி நீலாங்கரையில் உள்ள பங்களாவுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500, 2000 ரூபாய் நோட்டுகளுடன் சென்றுள்ளார். பங்களாவில் தினேஷிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜாகீர் தரப்பு, சத்தமில்லாமல் பங்களாவிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது. பணத்தைப் பறிகொடுத்த வர்கள், பங்களாவில் இருந்த ஜாகீரின் நண்பர்களைப் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர். காவல்நிலையத் தில் வைத்துதான் சிக்கிய நபர்களில் ஒருவர் செல்வியின் மருமகன் ஜோதிமணி என்பது தெரிய வந்துள்ளது. இரவோடு இரவாக பேச்சுவார்த்தை நடந்தும், விவகாரம் முடிவுக்கு வரவில்லை.’’

‘‘அப்புறம்?’’

‘‘இதற்குள்ளாக விஷயம் முதல்வர் வரை சென்றுவிட, ஜோதிமணிமீது எஃப்.ஐ.ஆர் பதியும் படி உத்தரவு வந்துள்ளது. இறுதியாக

80 லட்சம் ரூபாய் செட்டில் செய்துவிட்டு, ஜோதி மணியை மீட்டார்களாம். முதல்வர் தரப்பிடம் தி.மு.க முக்கியஸ்தர்கள் பேசி சரிகட்டிவிட்டதால், பெரிய வம்புவழக்கு இல்லை என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வின் மற்றொரு முக்கிய பிரமுகரையும் போலீஸ் தேடுகிறதாமே?’’

‘‘கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பிரார்த்தனா திரையரங்குக்கு அருகே உள்ள தமிழகத்தின் வி.ஐ.பி குடும்பத்துக்குச் சொந்தமான 130 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்க முடிவெடுத்துள்ளனர். சிவக்குமார் என்கிற ஏஜென்ட் மூலமாக சில பார்ட்டிகள் இந்தச் சொத்தை வாங்க முன்வந்துள்ளனர். இடையில் புகுந்த தி.மு.க இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜோயல், ‘இந்தச் சொத்து விற்பனைக்கு இருப்பதாக நான்தான் உங்களுக்குச் சொன்னேன். அதனால், பத்து சதவிகித கமிஷன் வேண்டும்’ என்று கேட்டதுடன், சிவக்குமாருக்குக் கொலைமிரட்டலும்விடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்தத் தகவல் அந்த வி.ஐ.பி குடும்பத்துக்குத் தெரியவந்ததும், சிவக்குமாரை போலீஸில் புகார் கொடுக்கவைத்திருக்கிறார்கள். இப்போது ஜோயல் தலைமறைவாக இருக்கிறாராம்’’ என்றபடி சிறகை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: