தொற்றா நோய்களுக்கு காரணமாகும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் தெருவோர கடைகளுக்கு விற்பனை: மீண்டும் உபயோகிப்பதை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் வருவதற்கு காரணமான பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், தெருவோர கடைக ளுக்கு விற்கப்படுவதைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும்போது, அவற் றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து ஃபிரீ ஃபேட்டி ஆசிட், ஆல்கஹால், சைக்லிக் காம்பவுண்ட், டைமர், பாலிமர் போன்ற உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொரு ளாக மாறுகிறது. பெரிய உணவகங் களில் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெய், சிறு உண வகங்களுக்கும் தெருவோர கடைகளுக்கும் மலிவு விலையில் விற்கப்படுகிறது.

எனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

டிசிபி அளவீடு

பயன்படுத்தப்பட்ட எண்ணெய், தொடர்ந்து பயன்படுத்த உகந்ததா என்பதை ‘டோட்டல் போலார் காம்பவுண்ட்’ (டிபிசி) என்ற அளவீடு மூலம் அளவிடப்படுகிறது. இது 25 சதவீதத்தை விட குறைவாக இருந்தால் மட்டுமே சமைக்க அனு மதிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது. அதற்கான 500 சோதனை கருவிகளை மாநில அரசுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வரு கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே பயன் படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ப தால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படுகின் றன. பெரிய உணவகங்களில் சமைக்கப்பட்டு மீதமான எண் ணெய், சிறு கடைகளுக்கு விற்கப் படுகிறது.

இதைத் தடுக்க, தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் தினமும் 50 லிட்டருக்கு மேல் எண்ணெயைப் பயன்படுத் தும் பெரிய உணவகங்கள் குறித்த விவரங்களை சேகரித்து வரு கிறோம்.

அந்த எண்ணெய் மறுசுழற்சி முறையில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். பயன்படுத் திய எண்ணெய் தெருவோர கடை களுக்கு விற்கக் கூடாது. இதுதொடர்பாக பெரிய உணவ கங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாவட்டத்தில், தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெயை பயன்படுத் தும் சுமார் 20 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வாரம் 22 டன் பயன் படுத்தப்பட்ட எண்ணெய், உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங் களுக்கு அனுப்பப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தினமும் 50 லிட் டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் நிறுவ னங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகை வெளியேறாத அளவுக்கு குறைந்த வெப்பநிலையில் எண் ணெயை சூடேற்றி உணவைப் பொரிக்க வேண்டும். அப்போது எண்ணெயில் தங்கும் உணவு துகள்களை, கருப்பாக மாறுவதற்கு முன்பாக தொடர்ந்து அகற்ற வேண்டும். உணவு பொரிக்கப்பட்ட எண்ணெயில், மீண்டும் உணவைப் பொரிக்கக் கூடாது. வடிகட்டிய பின், குழம்பு போன்றவற்று பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த எண்ணெயை 2 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இந்த வழிமுறைகளை கடைபிடித்தால், இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க லாம்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

%d bloggers like this: