மக்கட் செல்வம் அருளும் சிவகாமி அம்மன் பூர சலங்கை உற்சவம்… களைகட்டும் சிதம்பரம்!

 

மக்கட் செல்வம் அருளும் சிவகாமி அம்மன் பூர சலங்கை உற்சவம்... களைகட்டும் சிதம்பரம்! மக்கட் செல்வம் அருளும் சிவகாமி அம்மன் பூர சலங்கை உற்சவம்… களைகட்டும் சிதம்பரம்!

பஞ்சபூதத்தலங்களுள் ஆகாயத் தலமாகத் திகழ்வது சிதம்பரம். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். ஐப்பசிமாதம் சிவபெருமானையும் அம்பிகையையும் வழிபட உகந்த மாதம். குறிப்பாக, ஐப்பசி பூர நட்சத்திரம் அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சிதம்பரம் நடராஜ சுவாமி திருக்கோயிலில் பூர சலங்கை உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

சிதம்பரம் நடராஜப் பெருமான்

சிதம்பரம் நடராஜப் பெருமான்

உலகநாயகியாக விளங்கும் சிவகாம சுந்தரி அம்பாளைப் போற்றும் இந்த உற்சவம் அக்டோபர் 15 அன்று, கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா (23.10.2019) அன்று காலைத் தேர்த்திருவிழாவும் மாலை லட்சார்ச்சனையும் நடைபெறும். 24.10.2019 அன்று பூரம் சலங்கை உற்சவம் நடைபெறும். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் முளைப்பயறு கட்டி வழிபாடு செய்வர். இந்த நாளில் பக்தர்களுக்கு முளைப்பயறு பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும் என்பது ஐதிகம்.

சிதம்பரம்

சிதம்பரம்

மேலும் இந்த நாளில் நடராஜப்பெருமானின் ஆசிகளைப் பெற்று பட்டு வாங்கும் வைபவமும் நடைபெறும். ஆலய பிராகாரங்களிலும் வீதிகளிலும் பக்தர்கள் அம்பாளுக்குப் பட்டுப்பாவாடை சாத்துவதும் நடைபெறும்.

ஐப்பசி உத்திர நட்சத்திரத் தினமான 25.10.2019 அன்று மாலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியின் உருவமாக ஸ்ரீ சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண நாளன்று காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கடசிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.

இந்த உற்சவத்தைத் தொடர்ந்து ஆறு நாள்கள் கந்த சஷ்டி உற்சவமும் நடைபெறும். இந்த விழாக்களில் கலந்துகொண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

%d bloggers like this: