வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் பதறுவது சரியா?

கடந்த 2016-ம் ஆண்டில் வங்கி மற்றும் நிதி நிறுவனத் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு எஃப்.ஆர்.டி.ஐ என்ற ஒரு புதிய சட்ட வடிவத்தை அரசு

முன்மொழிந்தது. அந்தச் சட்டவடிவின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய அம்சம் என்னவென்றால், நிதி நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கத் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு, சிக்கலான நிறுவனங்களின் நிர்வாகம் அந்த பிரத்யேக நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பிரச்னையைத் தீர்க்க வழிவகை செய்யப்படும்.

மேலும், நிதி நிறுவனங்களின் ரிஸ்க் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு நிறுவனங்களின் உண்மைத் தன்மையை எடுத்துரைக்க அந்த பிரத்யேக நிறுவனம் பயன்படும். தற்போதைய சூழலில், டி.ஹெச்.எஃப்.எல் போன்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, சின்னாபின்னமாகி வருகின்றன. இது ஒரு நிறுவனம் சார்ந்த பிரச்னை என்றாலும், ஒட்டுமொத்த நிதிச் சந்தைகளிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. மேலும், பி.எம்.சி., யெஸ் பேங்க் போன்ற வங்கிகளின் பிரச்னைகளால் இந்தத் துறை கடும் நெருக்கடியில் இருந்துவருகிறது

இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்கத்தான் எஃப்.ஆர்.டி.ஐ எனும் சட்ட வடிவத்தை அரசு முன்மொழிந்தது. ஆனால், சிலபல காரணங்களுக்காக அந்தச் சட்ட வடிவம் முழுமை பெறவில்லை. முக்கியமாக ‘பெயில் இன்’ என்ற ஒரு வழிமுறை அதில் பரிந்துரைக்கப்பட்டது. அதாவது, ஒரு நிதி நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கும்போது, அதன் முதலீட்டாளர்களும் அந்தச் சிக்கலைத் தீர்க்க தங்கள் நிதிக் கோரிக்கையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றரீதியில் அந்தப் பரிந்துரை அமைந்திருந்தது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பலரின் எதிர்ப்பால் அந்தச் சட்ட வடிவம் கிடப்பில் போடப்பட்டது. இந்த ‘பெயில் இன்’ முறை என்பது மிக மிக அரிதாகப் பயன்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு கொடுத்தாலும், அதன் மீதான எதிர்ப்பு காரணமாக அது முன்னெடுக்கப்படவில்லை.ஆனால், இப்போது இந்த ‘பெயில் இன்’ ஷரத்தை நீக்கிவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ‘இந்த ஷரத்தை நீக்கிய பிறகு, அது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பிறகே நாடாளுமன்றத்தில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சொல்லப்படுகிறது. தவிர, ‘வங்கி முதலீட்டாளர்களுக்கான இன்ஷூரன்ஸ் தொகை உயர்த்தப்பட வேண்டும்’ என இந்தச் சட்ட வடிவில் மிக முக்கியப் பரிந்துரை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தற்போதைய சூழலில், அரசு அந்தச் சட்ட வடிவத்தை மேலும் சில மாற்றங்களுடன் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது. நம் நாட்டில் வங்கித் துறை வலுவாக இருக்கிறது. என்றாலும், தற்போதைய மாறிவரும் நிதிச் சந்தைச் சூழல், வாராக்கடன் போன்ற பிரச்னைகள் தலைக்குமேல் கத்தி என்பதுபோலத்தான் வங்கிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைக் கட்டிக்காத்து வழிநடத்த இந்தச் சட்டம் மிக அவசியமானதாக இருக்கும். மேலும், சிறு முதலீட்டாளர்களுக்கும் வங்கிகளின் மீதான நம்பிக்கை சிதைந்து போகாமலிருக்க, இன்ஷூரன்ஸ் தொகை அதிகப்படுத்தப்பட்டால் அது வங்கித் துறை மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும்.

எனவே, எஃப்.ஆர்.டி.ஐ சட்டமாகிவிட்டால், வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தை எல்லாம் அரசே எடுத்துக்கொண்டுவிடும் என்று பயந்து, அந்தப் பணத்தை உடனே எடுக்கத் தேவையில்லை. இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு நடவடிக்கை எடுப்பது நல்லது!

%d bloggers like this: