திரை விலகட்டும்!

கேமரா 576 மெகாபிக்ஸல்

வானத்தையும் பயணத்தில் ஜன்னல் வழியாக ஓடும் ஊர்களையும் மனித முகங்களையும் பார்த்து வளர்ந்த நாம், இன்று அனைத்தையும் திரைகள் வழியாகவே காண்கிறோம். என்றோ ஒரு நாள் கிளம்பி குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் அமர்ந்து இரண்டரை மணி நேரம் ஒரு சினிமா பார்த்த காலம் மாறி, நேரம் பார்ப்பதற்கே அலைபேசி திரையைப் பார்க்கிறோம். சமையல் குறிப்பு முதல் வீட்டுப் பாடம் வரை தேடுவதற்கு யூடியூபை நாடுகிறோம்…
குடும்பத்தினரிடம் உரையாடவும் வீடியோ கால் தேவைப்படுகிறது. வழி தெரியாத இடங்களில் பயணிக்க சாலையோரம் நிற்கும் ஆட்டோக்காரரையோ அருகில் இருப்பவரையோ தேடுவதில்லை. மாறாக வழிநெடுக கூகுள் மேப்பில் ஒரு கண் வைத்துக் கொண்டே பயணிக்கிறோம். நம்மைப் பார்த்து வளரும் நம் குழந்தைகளும் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சியையோ அலைபேசியையோ அதிகம் நாடுகின்றனர். பதிவேடுகள் காகிதங்களில் எழுதிய காலத்தையும் பணியிடங்களில் கணினி எடுத்துக் கொண்டு விட்டது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு நம் மனம் பழகிவிட்டாலும் கண்கள் இந்த அதிகப்படியான புது வேலையை ஏற்றுக் கொள்கின்றனவா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த திரை பயன்பாட்டில் கண்களுக்கு என்ன சிரமம் உள்ளது?கண்ணின் மேற்பரப்புக்கு ஊட்டம் தரும் கண்ணீர் படலத்தைப் பற்றி அறிந்தோம். கணினி திரைகளின் அதிகப்படியான வெளிச்சத்தினால் கண்ணீர் உலர்ந்து விடுகிறது. இதனால் கண்களின் இமைகள் சிக்குவதைப் போன்ற உணர்வு தோன்றுகிறது. கண்களில் எரிச்சல், அயர்ச்சி ஏற்படுவதால் தேய்க்க வேண்டும் போன்ற உணர்வு தோன்றுகிறது. அரை அல்லது ஒரு அடி தூரத்தில் வைத்துப் பார்க்கும் அலைபேசியும் சரி, நான்கைந்து அடி தூரத்தில் மேஜையில் அமர்ந்திருக்கும் கணினியும் சரி… நமது கிட்டப்பார்வை வட்டத்திற்குள்தான் வருகின்றன.

இந்தக் கருவிகளில் காட்சியைக் காண நம் கண்களின் தசைகள் தொடர்ச்சியாகச் சுருங்கியே இருக்க வேண்டிய அவசியம் நேர்கிறது. இத்தகைய அதிகப்படி உழைப்பினால் கண் தசைகளில் அயற்சி(Fatigue) ஏற்படுகிறது. கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பதால் சிறிய நீர்க் கட்டிகள் தோன்றலாம். 8 மணி நேரப் பணி முடியும் தருவாயில் தலை வலியும் வரலாம். மூளையைச் சென்றடையும் தொடர்ச்சியான காட்சிப் படிமங்களால் மனம் எப்போதும் ஒரு பரபரப்புடன் இருக்கிறது. இதனால் ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் கிட்டுவதில்லை. கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டாமா? பின்தங்கியே இருக்கச் சொல்கிறீர்களா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

கணினி, தொலைக்காட்சி, அலைபேசி இவற்றை ஒதுக்கத் தேவையில்லை. கண்களுக்கு பாதிப்பற்ற வகையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினாலே போதும். அவசியமான நேரங்களிலும் நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகளாலும் கண் பிரச்னையை முற்றிலும் தவிர்க்கலாம். கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்(Computer vision syndrome) எனப்படும் தொடர்ச்சியாக கணினியில் வேலை பார்ப்போருக்கு ஏற்படும் பிரச்னையை எளிய வழி முறைகள் மூலம் தடுக்க முடியும்.25 ஆண்டுகளுக்கு முன் கணினிகள் பிரபலமாக ஆரம்பித்த கால கட்டத்தில் கணினி இருக்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து இருந்தது.

இருட்டு அறையில் கணினி மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருப்பது கண்களுக்கு நல்லதல்ல. அறை நல்ல வெளிச்சத்தில் இருக்க வேண்டியது அவசியம். இன்றைய கணினி திரைகளில் அலைபேசியைப் போலவே திரையின் வெளிச்சத்தைக் குறைக்கவோ கூட்டவோ செய்து கொள்ள வசதி இருக்கிறது. நம் கண்களுக்கு மிகச்சரியாக காட்சி தெரியும் அளவுக்கு திரையின் ஒளியை வைத்துக் கொள்ள வேண்டும். அதிக ஒளியும் வேண்டாம், கண்களை இடுக்கிப் பார்க்கும் அளவிற்கு மிகக் குறைந்த ஒளியும் வேண்டாம்.  அலைபேசிக்கும் இந்த விதி பொருந்தும்.

கண்களால் பார்க்கக் கூடிய குறைந்தபட்ச அளவில் இருந்து மூன்று மடங்காவது எழுத்தின் அளவு(Font) இருக்க வேண்டியது முக்கியம்
கணினி திரையை நம் கண்களுக்கு மிக நேராக வைக்காமல் சிறிது நேரத்திற்கு வலது புறமாகவும், சிறிது நேரத்திற்கு இடது புறமாகவும் பக்கவாட்டில் ஒரு பத்து டிகிரி அளவிற்கு மாற்றி மாற்றி வைத்துக் கொள்ளலாம். மின்விசிறி மற்றும் குளிர் சாதனத்திலிருந்து முகத்திற்கு நேரே காற்று வருவது போல இருக்கக் கூடாது. இதனால் கண்கள் விரைவில் உலர்ந்துவிடும். தலைக்குமேல் அல்லது பின்புறத்திலிருந்து காற்று வருமாறு கருவிகள் இருக்கலாம்.

இதன் மூலம் கண்களில் நேராகக் காற்று பட்டு கண் உலர்வது தவிர்க்கப்படும். சிறிய அளவுக்கு குறைபாடு (Refractive error) இருந்தாலும் அதற்குரிய கண்ணாடியை அவசியம் அணிய வேண்டும். கண்ணாடியில் Anti glare coating உடைய ஒளி அதிகம் உட்புகாத தன்மையிலான லென்சுகள் இருப்பது கண்களுக்கு நல்லது. 15 நிமிடத்திற்கு மேல் கணினி, அலைபேசி, தொலைக்காட்சித் திரைகளைப் பார்ப்பவர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய விதி ஒன்று உள்ளது. அதற்குப் பெயர் 20- 20 விதி(Twenty Twenty rule). சரியாகச் சொல்லப்போனால் 20- 20- 20- 20 என்று இதைக் கொள்ளலாம்.

20- 20 விதி என்ன சொல்கிறது?

திரையைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை இடைவெளி தேவை. அந்த இடைவெளி 20 வினாடி அளவுக்கு இருக்க வேண்டும். அந்த 20 வினாடிகளில் 20 அடி தூரத்தில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். இதனால் சுருங்கியே இருக்கும் கண்களின் வெளிப்புறத் தசைகள் விரிந்து ரிலாக்ஸ் ஆகின்றன. அதுபோக வேலை மும்முரத்தில் அல்லது திரைப்படத்தின் ஓட்டத்தில் மூழ்கி கண்களை இமைக்க பலரும் மறந்து விடுகிறோம் அத்தகைய நபர்கள் ஒரு நிமிடத்திற்கு சரியாக 20 முறை என்ற கணக்கில் கண்களை இமைத்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் அறையில் 20 அடி தூரம் இல்லையெனில் மொட்டை மாடி வரை ஒரு சிறிய நடை மேற்கொண்டு வானத்தையோ அல்லது ஜன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகளையோ பார்க்கலாம். இதனால் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும், கால்களுக்கும் நல்லது. சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் கண்களை அவ்வப்போது ஓய்வு கொடுக்க பயன்படுத்தலாம்.இனிமேல் விளம்பர இடைவேளையின்போது சேனலை திருப்பாமல் தலையைத் திருப்பி சுற்றுப்புறத்தையும் பார்ப்போம். இந்தப் பழக்கங்களைக் காரணங்களுடன் விளக்கி நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.

உங்களுக்குத் தெரியுமா?!

* வெள்ளை அல்லது இள மஞ்சள் பின்புலத்தில் கருப்பு எழுத்துக்கள் இருப்பதையே கண்கள் அதிகம் விரும்புகின்றன.

* Protect your vision போன்ற சில செயலிகள் நீங்கள் கணினியை இயக்க ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் கண்களை கணினி திரையை விட்டு அகற்றி தூரமாகப் பார்ப்பதற்கு உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

* கணினியின் திரையை பார்க்கும்போது உங்களது கண்கள் கணினித் திரையின் மேற்புறத்திற்கு நேர் கோட்டில் இருந்தால் நல்லது. தலையை 10 முதல் 15 டிகிரி வரை லேசாக முன் நோக்கி சாய்த்து கணினித்திரையை பார்ப்பதே சிறந்தது.

* அதிகமாக கண்கள் உலர்ந்து போகும் வாய்ப்பு இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையுடன் தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கும் சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம்.

* சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு கணினியின் தட்ப வெப்பத்தையும் மாற்றிக்கொள்ள செயலிகள் இப்போது வந்து விட்டன. அவற்றையும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

%d bloggers like this: