அமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்?

சிதம்பரத்திடம் சில ஆவணங்களைக் காட்டி வாக்குமூலம் வாங்க இருக்கிறது அமலாக்கத் துறை. அது நடந்துவிட்டால், சிதம்பரத்தின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும் என்கிறார்கள்.

”கவலைதோய்ந்த முகத்துடன் கம்பிக்குப் பின்னால் சிதம்பரம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீரா?” – கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் கேள்வியை வீசினோம்.

 

”இந்தியா முழுவதும் வைரலான படம் பற்றித்தானே கேட்கிறீர்… பார்க்காமலா இருப்பேன்!” என்ற கழுகார், ”சிறைக்கைதியாகி கிட்டத்தட்ட 50 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இப்போது புதிதாக மீண்டும் அமலாக்கத் துறை அவரைக் கைதுசெய்துள்ளது. அமித் ஷாவை 80 நாள்கள் சிறையில் வைத்திருந்த கணக்கை நேர்செய்யாமல் விடமாட்டார்கள் என்கிறார்கள்.

 

சி.பி.ஐ வழக்கில் சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்து, அது விசாரணையில் இருக்கிறது. இத்தனை நாள்கள் சிறையில் இருப்போம் என்பதை சிதம்பரமே எதிர்பார்க்கவில்லையாம். ‘அவருக்கு உடல்நிலையில் பல்வேறு உபாதைகள் இருக்கின்றன. ஏ.சி இல்லாமல் டெல்லியில் இருப்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வேதனைகளைதான் அந்தப் புகைப்படம் வெளிப்படுத்தியுள்ளது’ என்று கவலை பொங்கச் சொல்கிறார்கள் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்” என்றார்.

”அமலாக்கத் துறையின் திட்டம் என்னவாம்?”

”இப்போது சிதம்பரத்தை அமலாக்கத் துறை அவசரமாகக் கைதுசெய்ததே சி.பி.ஐ வழக்கில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிடக் கூடாது என்பதால்தான். சி.பி.ஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் பெற்றால்தான் வெளியே வர முடியும். அதேநேரம், சிதம்பரத்திடம் சில ஆவணங்களைக் காட்டி வாக்குமூலம் வாங்க இருக்கிறது அமலாக்கத் துறை. அது நடந்துவிட்டால், சிதம்பரத்தின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும் என்கிறார்கள். இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, சிதம்பரம், கார்த்தி இருவரின் எம்.பி பதவிக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு இப்போதே கிளம்பிவிட்டது.”

ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ்

“சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ்., ‘சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி, கட்சித் தலைமை நிர்வாகக் குழு ஆலோசித்து முடிவெடுக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். சசிகலாவை விடுவிக்க, டெல்லி ஒருபுறம் முட்டுக்கட்டைப் போட்டுவரும் நிலையில், சசிகலா விடுதலை பற்றி இங்கு உள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையாகக் கருத்து தெரிவித்து வருவதைக் கவனிக்க வேண்டும். சசிகலாவின் விடுதலைக்கு வேறு ஏதோ ரூட்டில் வேலை நடப்பது தெரிந்துதான், அவரைப் பற்றிய பேச்சுகள் இப்போது அ.தி.மு.க-வில் அதிகமாக அலையடிக்கின்றன என்கின்றனர்.”

%d bloggers like this: