எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி?

இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றியை அக்கட்சியின் வெற்றியாக மட்டும் சுருக்கிக்கொள்ள முடியாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை ஜெயித்துத்தான்

ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற நெருக்கடி இல்லாத நிலையிலும், இரு தொகுதிகளையும் வென்றெடுத்து, தி.மு.க-வின் வாய்க்கு பூட்டு போட்டுள்ளார், எடப்பாடி பழனிசாமி. இந்த வெற்றியை எடப்பாடி கொண்டாடுவதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

முதலாவது, விக்கிரவாண்டி தேர்தல் களம். தி.மு.க – பா.ம.க கருத்து மோதலாக உருவானவுடன், சி.வி.சண்முகத்தை வைத்து வன்னியர் வாக்குகளை ஓரணியில் திரட்டியது வாக்குச்சாவடியில் பிரதிபலித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்ததை பட்டியலின சமூகத்தினர் பெரிதாக ரசிக்கவில்லை. ‘அசுரன்’ படம் மூலமாக பஞ்சமி நில மீட்பு கருத்துகளை ஸ்டாலின் முன்வைத்தாலும், அதற்குள்ளாக பட்டியலின வாக்குகள் அவரை விட்டு வெகுதூரம் போயிருந்தன.தவிர, விக்கிரவாண்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தி.மு.க பயன்படுத்திக்கொள்ளாததையும் தனக்கு சாதகமாக எடப்பாடி மாற்றிக்கொண்டார். தி.மு.க-வின் பாராமுகத்தால் ஓரங்கட்டப்பட்டிருந்த வி.சி.க-வினரை சி.வி.சண்முகத்தின் ஆட்கள் சந்தித்து நட்பு பாராட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியில், 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றதற்கு, பட்டியலின வாக்குகள் கணிசமாக அக்கட்சிக்கு விழுந்தது முக்கியக் காரணம்.

இரண்டாவது, நாங்குநேரி தொகுதியில் கணிசமாக உள்ள நாடார்களின் வாக்குகளைக் கவர, கனிமொழியை களமிறக்காமல் தன் மகன் உதயநிதியை புரமோட் செய்தார் ஸ்டாலின். ஸ்டாலின் சறுக்கிய இந்த இடத்தை, சரத்குமாரை வைத்து எடப்பாடியார் நிரப்பிக்கொண்டார். நாங்குநேரியில் வைகோ, திருமாவளவன் போன்ற தலைவர்கள் செய்த பிரசாரத்தைவிட, சரத்குமார் அதிகப் பிரசாரம் செய்தார். தேர்தல் போட்டியில் இருந்து அ.ம.மு.க விலகியிருந்தாலும், அக்கட்சிக்கு செல்லக்கூடிய முக்குலத்தோர் வாக்குகளை நடிகர் கார்த்திக்கை பிரசாரத்தில் பயன்படுத்தி வளைத்ததும் நல்ல வியூகம்.

மூன்றாவது, தேர்தல் வெற்றிக்குப் பிறகு ‘இது கூட்டணிக் கட்சிகளின் உழைப்பினால் கிடைத்த வெற்றி’ என அறிவித்து, விக்கிரவாண்டி வெற்றியை பா.ம.க பங்கு போடவிடாமல் தடுத்தது, எடப்பாடியாரின் பலே ராஜதந்திரம். இது, பணம் கொடுத்து பெற்ற வெற்றியாக தி.மு.க கூறினாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளதால், இக்கருத்து அவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.சரி, இந்த வெற்றியால் அ.தி.மு.க-வுக்கு என்ன லாபம்?

தங்களுடன் பயணிப்பதுதான் லாபம் என கூட்டணிக் கட்சிகளுக்குக் காட்டிவிட்டதால், எதிர்வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணி உடையாமல் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க மீது எதிர்ப்பலை வீசுவதால், யாரும் கூட்டணி சேர மாட்டார்கள் என்கிற கருத்து பலமாக நிலவியது. அனைத்தையும் தகர்த்தெறிந்து, தி.மு.க-வுக்கு முன்னதாகவே மெகா கூட்டணியும் அமைத்து சீட் ஒதுக்கீட்டை முடித்தது அ.தி.மு.க தலைமை. இனியும் அது தொடரும்.

விக்கிரவாண்டியில் சுமார் 35 பூத்துகளில் பா.ம.க நிறுவனர் ராமதாஸே நேரடி பார்வையில் தேர்தல் பணியாற்றினார். இத்தொகுதியில் அ.தி.மு.க வென்றால், தன்னுடைய சீட் பேரத்துக்கு பயன்படும் என்பது அவர் கணக்கு. இக்கணக்கை, ‘இது கூட்டணிக் கட்சிகளின் வெற்றி’ என எடப்பாடியார் உடைத்துவிட்டதால், ராமதாஸால் எதுவும் பேச முடியவில்லை. எதிர்த்து குரல் கொடுத்தால், மற்ற கூட்டணிக் கட்சிகளையும் அவர் பகைத்துக்கொள்ள நேரிடும். இதன் மூலமாக, சீட் பேரத்தில் பா.ம.க முன்னிலைபெறுவதை எடப்பாடியார் தடுத்துவிட்டார்.

இப்போதிருந்தே தன் அணியை உற்சாகமாக வைத்துக்கொண்டு, இந்த ராஜதந்திர வியூகங்களையெல்லாம் 2021 சட்டமன்றத் தேர்தல் வரை காப்பாற்றிக்கொள்ளத் திட்டமிட்டிருக்கார் எடப்பாடி பழனிசாமி. அது மட்டும் நிகழ்ந்துவிட்டால், தேர்தல் அரசியலில் தானும் ஒரு சாணக்கியன் என்பதை எடப்பாடியார் அழுத்தம்திருத்தமாகச் சொல்லிக்கொள்வார்!

%d bloggers like this: