முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி!

பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ், புத்தாடை பேக்கிங்குகள் என, கைகொள்ளாமல் வந்து இறங்கிய கழுகார் ‘‘அப்பப்பா… என்ன கூட்டம், தீபாவளி பர்சேஸ் எல்லாம் இப்போதுதான் முடிந்தது. இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் சூடான செய்திகளுடன் வந்துள்ளேன்” என்று ‘பிகு’காட்டினார்.

“பிறகு… கழுகார் என்றால் சும்மாவா!” என்று நாமும் விளையாட்டாக வாரிவிட்டு “இரண்டு தொகுதிகளின் வெற்றி முடிவுகளை, இனிப்பு கொடுத்துக் கொண்டாடியுள்ளாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?”

“வாக்கு எண்ணப்பட்ட அக்டோபர் 24-ம் தேதி காலை, வீட்டிலிருந்து நிலவரங்களைப் பார்த்துள்ளார் முதல்வர். விக்கிரவாண்டியில் ஆரம்பம் முதலே அ.தி.மு.க முன்னணியில் இருந்தது, அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. சிறிது நேரத்தில் நாங்குநேரியிலும் அ.தி.மு.க-வின் வாக்குவிகிதம் எகிறத் தொடங்கியது. உடனே காரை எடுக்கச் சொல்லியுள்ளார். அதற்குள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத் தில் தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஓர் உற்சாகம் இருக்குமோ, அப்படியோர் உற்சாகத்தைப் பூண்டிருந்தது அ.தி.மு.க தலைமை அலுவலகம். தலைமைக் கழகத்துக்கு வந்த முதல்வர், அங்கு இருந்த நிர்வாகிகளுக்கு இனிப்புகளை எடுத்துக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.”

“யோகக்காரர் என்று சொல்லும்!”

“தேர்தல் பிரசாரம் நடந்தபோது ஒரு ரிப்போர்ட், தேர்தலுக்கு முந்தைய நாள் ஒரு ரிப்போர்ட், ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஒரு ரிப்போர்ட் என, மாநில உளவுத்துறையினர் மூன்று ரிப்போர்ட்டுகளை முதல்வரிடம் கொடுத் துள்ளனர். முதல் இரண்டு ரிப்போர்ட்டுகளில் ‘விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி. நாங்குநேரியில் இழுபறியாகும்’ என குறிப்பு எழுதியிருந்தார்களாம். ஓட்டுப்பதிவுக்குப் பிந்தைய கடைசி ரிப்போர்ட்டில் மட்டும், ‘இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிபெறும்’ எனக் குறிப்பிட்டிருந்தார் களாம். ஆனால், ‘சஸ்பென்ஸாக இருக்கட்டும்’ என்று இதைப் பற்றி யாரிடமும் எடப்பாடி பகிர்ந்துகொள்ளவில்லையாம். அதேசமயம், இரண்டு தொகுதிகளிலும் வேலைபார்த்த அமைச்சர்களின் செயல்பாடுகளை மட்டும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார்.”

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

“அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தனவாம்?”

“ஜெயலலிதா இருக்கும்போது எப்படிப் பணியாற்றுவார்களோ அப்படிப் பணியாற்றி யிருக்கிறார்கள் எனத் தகவல் வந்திருக்கிறது. குறிப்பாக, விக்கிரவாண்டியில் சி.வி.சண்முகம் யாரையும் எதிர்பார்க்காமல் களத்தில் பம்பரமாகப் பணியாற்றினார். ஒரே ரவுண்டில் ‘கவனித்தால்’ மக்கள் மறந்து விடுவார்கள் என்று மூன்று ரவுண்டுகளாகப் பிரித்து கவனித்துள்ளார். இதனால் அ.தி.மு.க-வினர் அடிக்கடி மக்களைச் சந்திக்க முடிந்தது. இறுதியாக, உள்ளுர் வேட்பாளரைக் களமிறக்கியபோதே வெற்றியும் உறுதி என்ற பேச்சு எழுந்தது. கடைசி நேரத்தில் பா.ம.க-வும் கைகொடுக்க, விக்கிரவாண்டியில் வெற்றி கனிந்துவிட்டது.”

“பா.ம.க வேறு வெற்றியில் பங்கு கேட்குமே!”

“கேட்காமலா இருப்பார்கள். அவர்களும் வேலை பார்த்திருக்கி றார்கள்தானே! ‘அமைதியாக இருந்த பா.ம.க-வை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உசுப்பேற்றியதுதான் தவறு’ என்கிறார்கள். `ராமதாஸின் பஞ்சமி நிலம் விமர்சனத்தை ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், ராமதாஸ் தேர்தல் பிரசாரத்துக்கே வந்திருக்க மாட்டார்’ என்கிறார்கள் பா.ம.க தரப்பில். ஸ்டாலின் உசுப்பிவிட்டதால்தான் வீறுகொண்டு பிரசாரக் களத்துக்கு வந்தாராம் ராமதாஸ். குறிப்பாக, ஸ்டாலினின் பேச்சுகளால் கோபம் அடைந்த டாக்டர் ‘விக்கிரவாண்டியில் தி.மு.க தோற்றால்தான் அவர்களுக்கு நம்முடைய பலம் புரியும்’ என்றாராம்.”

“அ.தி.மு.க-வின் வெற்றியை பா.ஜ.க எப்படிப் பார்க்கிறது?”

“பா.ஜ.க தரப்பில், ‘எங்கள் உறவால்தான் அ.தி.மு.க-வுக்கு இந்த வெற்றி’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், ‘அந்தக் கட்சியிடம் பெயரளவுக்குத்தான் ஆதரவு கேட்டோம். அந்தக் கட்சிப் பிரமுகர்களை பிரசாரக் களத்துக்குக்கூட அழைக்கவில்லை. அவர்களை அழைத்துச் சென்றிருந்தால் என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியாதா?’ என்று நக்கல் அடிக்கிறதாம் அ.தி.மு.க தரப்பு!”

“எல்லாம் சரி… நாங்குநேரியில் காங்கிரஸ் தோல்விக்கு என்னதான் காரணம்?”

“வெளியூர் வேட்பாளர் என பொத்தாம் பொதுவாகச் சொல்லப்பட்டாலும், `காங்கிரஸில் சத்தமில்லாமல் நடந்த உள்குத்து வேலைகளே தோல்விக்குக் காரணம்’ என்கிறார்கள். வசந்தகுமார் கையிலிருந்த இந்தத் தொகுதியில், அவர் தன் அண்ணன் குமரி அனந்தனை வேட்பாளராக்க நினைத்தார். தலைமை ஒத்துழைக் கவில்லை. ‘எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார்’ என்று ரூபி மனோகரன் தரப்பில் சொன்னதால் அவரை நிறுத்தினார்கள். ‘ரூபி மனோகரன் ஜெயித்துவிட்டால், தொகுதி தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து போய்விடும்’ என்று வசந்தகுமார் தரப்பு கருதியதாம். இதில் ஏற்பட்ட உள்குத்து விவகாரங்களில் காங்கிரஸின் தொகுதி கைநழுவிப் போய்விட்டது.”

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

“இது காங்கிரஸுக்கே உரிய கோஷ்டிப் பூசல்தான். அடுத்து சொல்லும்!”

“தி.மு.க-வும் நாங்குநேரியில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள். பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் ஸ்டாலின் மனு வாங்கி வந்தார். ‘வாங்கிய மனுக்கள்மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார், அவரால் என்ன செய்ய முடியும்?’ என்று எடப்பாடி பழனிசாமி கூட்டத் துக்குக் கூட்டம் பற்றவைக்க… அதுவும் வேலை செய்துள்ளது. விக்கிரவாண்டியில் பொன்முடியின் மெத்தனப்போக்கும் இந்தத் தோல்விக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.”

“ஓஹோ!”

“தோல்விக்குக் காரணமாக, மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டை தி.மு.க-வினரே சொல்கிறார்கள். ‘இடைத்தேர்தல் பிரசாரங்களில், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாதனைகளை முன்னிறுத்தி ஸ்டாலின் தரப்பு பேசவில்லை. நாடார் சமூகத்து ஓட்டுகளைக் கவரும்வகையில் கனிமொழியையும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. உதயநிதியை மட்டுமே முன்னிறுத்தினார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் பலமாக இருக்கும் வி.சி-க்களைக்கூட கட்சித் தலைமை அரவணைக்கத் தவறிவிட்டது. இவையெல்லாம்தான் தோல்விக்குக் காரணம்’ என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசுகிறார்களாம்!”

“தி.மு.க தலைமையின் ரியாக்‌ஷன் என்னவாம்?”

“நாங்குநேரி தோல்வியைப் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், விக்கிரவாண்டியில் இத்தனை பொறுப்பாளர் களைக் களத்தில் இறக்கியும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றதை அதிர்ச்சியுடன்தான் பார்க்கிறது கட்சித் தலைமை. வேட்பாளர் தேர்வில் சொதப்பலா என்று விசாரணையும் நடக்கிறதாம்.”

கொண்டுவந்திருந்த ஸ்வீட் பாக்ஸில் ஒன்றைப் பிரித்து, மைசூர்பாகுவை நம்மிடம் நீட்டினார் கழுகார். உடைத்து ஒரு விள்ளலை வாயில் போட்டுக்கொண்டே, “இரண்டு மாநிலத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன?” என்று கேட்டோம்.

“அமித் ஷா அப்செட் எனத் தகவல். ஹரியானாவில் பா.ஜ.க தனித்து நின்றது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. ஹரியானாவில் நிலைமை இழுபறியாகும் என பா.ஜ.க தரப்பு நினைத்துப் பார்க்கவே இல்லையாம். ‘மகாராஷ்டிர வெற்றியைக்கூட சிவசேனாவின் வெற்றியாகத் தான் பார்க்க முடியும். தனிப்பட்ட நமது வெற்றி எனச் சொல்ல முடியாது’ என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறதாம். ‘இரண்டு மாநிலங் களிலும் அசுர வெற்றியைப் பெற்றிருந்தால் மோடியும் அமித் ஷாவும் பா.ஜ.க அலுவலகத்துக்கே வந்து வெற்றியைக் கொண்டாடியிருப்பார்கள்’ என்கிறார்கள்.”

“சிவசேனா தரப்பு என்ன சொல்கிறது?”

‘‘ஆரம்பத்தில் ‘துணை முதல்வர் பதவி போதும்’ என்றுதான் சொல்லியிருந்தனர் சிவசேனா தலைவர்கள். ஆனால், கடந்த முறையைவிட தற்போது 15-க்கும் மேற்பட்ட இடங்கள் பி.ஜே.பி-க்குக் குறைந்துவிட்டன. அதனால், ‘அமைச்சரவையில் பாதிக்குப் பாதி இடம் வேண்டும்’ எனச் சொல்லத் தொடங்கியிருக் கிறார்களாம் அந்தத் தலைவர்கள். கடந்த முறைபோல் சிவசேனாவை அடக்கிவைக்க முடியாது என்ற நிலையில், அங்கும் பா.ஜ.க-வுக்குத் தலைவலிதான் என்கிறார்கள்.”

“அக்டோபர் 23-ம் தேதி ராதாபுரம் தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லையே?”

“அன்று காலையே அப்பாவு ஆர்வத்துடன் காத்திருந்தார். ஆனால், பட்டியலில் இருந்தாலும் கடைசிவரை வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அருண் மிஸ்ரா, ரவீந்தர பட் உள்ளிட்ட மூவர் அமர்வில்தான் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ‘சட்டத்துறை ஆய்வு நடைபெற்றதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை’ என்று சொல்லப்பட்டதாம். அப்பாவு தரப்பில் கபில்சிபில், அபிசேக்மனு சிங்வி ஆஜராக இருக்கிறார்கள்” என்ற கழுகார், நமக்கொரு ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்து விடைபெற்றார்.

%d bloggers like this: