டம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக! சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.

பன்னீர் இல்லாத அதிமுகவை உருவாக்கி, முதல்வர் பதவியில் அமரத்துடித்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா இல்லாத அதிமுகவை உருவாக்கி, அதை தமது கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவர முயன்ற பன்னீர், அது முடியாமல் போனதாலும், தனியாக இயங்க முடியாத நிலையிலும், ஒரு கட்டத்தில் சில நிபந்தனைகளை முன்வைத்து அதிமுகவில் ஐக்கியம் ஆனார்.

ஏற்கனவே சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீண்ட அதிமுகவில், தலைமை ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என்ற இரு முக்கிய பதவிகளும் பன்னீருக்கு வழங்கப்பட்டன. காலப்போக்கில், முதல்வர் எடப்பாடியே, கட்சி, ஆட்சி என இரண்டிலும் முக்கியத்தும் பெற்றவர் என்பதை பல நிகழ்வுகள் மூலம் நிரூபித்தார்.

தியானத்தை முடித்து, தனி அணியாக செயல்பட்டவரை, பன்னீர் ஒரு மக்கள் தலைவர் என்ற ரேஞ்சுக்கு இருந்தார். ஊடகங்களும், பொதுமக்களும் அவரை போற்றி புகழ்ந்தனர். என்றைக்கு மீண்டும் அதிமுகவில் இணைந்தாரோ, அன்றே அவருடைய செல்வாக்குகள் எல்லாம் சரிந்து போனது. போகப்போக, கட்சி, ஆட்சி என இரண்டிலுமே அவருடைய பிடிப்புகள் தகர்க்கப்பட்டன.

எனினும், தொடர்ந்து தன்னுடைய செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள, எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டாலும், பன்னீரின் அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி அவரை டம்மியாக்கினார் எடப்பாடி. ஒரு கட்டத்தில், விரக்தியின் விளிம்பில், சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தால், கட்சியின் பொதுக்குழு கூடி, ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்றுகூட ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சில நெருக்கடிகளையும் கொடுத்துப் பார்த்தார் பன்னீர்.

ஆனால், அதையெல்லாம், முன்கூட்டியே முறியடிக்கும் வகையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கவிதை நடையில் பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது., அதோடு சேர்ந்தே நடந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

அதனால், எடப்பாடியின் தலைமை நிரூபிக்கப்படாத தலைமையாகவே இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக அமோக வெற்றதுடன், திமுக, காங்கிரஸ் கைவசம் இருந்த அந்த இரு தொகுதிகளையும் அதிமுக தன்வசப்படுத்தியது.

இதன்மூலம், அதிமுகவில் எடப்படியின் தலைமை, வலிமையான தலைமை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வாயிலாகவே வெளிப்படவும் வைத்து விட்டார் எடப்பாடி. இனி அடுத்து வரப்போகும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியின் தலைமையை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் பன்னீருக்கு உருவாகி உள்ளது.

பன்னீரை முடிந்தவரை பவர் இழக்க செய்த எடப்பாடிக்கு, சசிகலா குடும்பம் மீண்டும் கட்சிக்கு வந்தால், எப்படியும் கட்சியை கபளீகரம் செய்து விடும் என்ற அச்சமும் உள்ளது. அதனால், அவர் எளிதில் சிறையில் இருந்து வெளிவரமுடியாத நடவைக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மறுபக்கம், தினகரனின் அமமுக பலவீனப்படுத்தப்பட்டு விட்டது. தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பெங்களூரு புகழேந்தியே, எடப்பாடியை சந்தித்து பேசும் நிலையம் உருவாக்கப்பட்டு விட்டது.

அத்துடன், சசிகலாவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் தென்மாவட்ட முக்கியத்துவம், கட்சியில் வெகுவாகக் குறைக்கப்பட்டு, மேற்கு மற்றும் வடமாவட்டங்களின் முக்கியத்துவம் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எடப்பாடியின் இந்த திட்டத்திற்கு, வடமாவட்டங்களில் செல்வாக்கோடு இருக்கும் பாமகவையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

தியானத்தின் மூலம் செல்வாக்கு பெற்றவராக இருந்த பன்னீரை, அதிமுகவில் ஐக்கியம் ஆகச்செய்து பலவீனப்படுத்திய எடப்பாடி, சசிகலா குடும்பம் அதிமுகவில் தலையிட முடியாத அனைத்து செக்குகளையும் வைத்து விட்டார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மூலம், தமது தலைமையையும் உறுதிப்படுத்தி விட்ட எடப்பாடி, சசிகலா, பன்னீர் இல்லாத வலுவான அதிமுகவையும், தமது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் என்கிறது அதிமுக வட்டாரம்.

%d bloggers like this: