தினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி! – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி-திவாகரன்-புகழேந்தி என மூவர் கூட்டணி ஒன்று, தினகரனுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்கியிருப்பதாகக் கூறுகின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். “ இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொல்வதற்காக சேலத்தில் முதல்வரைச் சந்தித்தார், பெங்களூரு புகழேந்தி. அதன் தொடர்ச்சியாக சில திரைமறைவு வியூகங்கள்

வகுக்கப்பட்டுள்ளன” என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் வலம்வருகிறது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 15 நாள்களுக்கு ஒருமுறை சசிகலாவை சந்தித்துப் பேசுகின்றனர் மன்னார்குடி உறவுகள். `முன்பெல்லாம், சிறையில் உள்ள குறைகள் குறித்தும் அ.தி.மு.க குறித்தும் வேதனையான கருத்துகளைக் கூறிவந்த சசிகலா, கடந்த சில சந்திப்புகளில் அப்படியான வேதனைக் கருத்துகளை வெளியிடுவதில்லை. இதனால் அவர் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதையே கணிக்க முடியவில்லை’ என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். இதற்குக் காரணம், ` நான் சொல்லாத கருத்துகளை எல்லாம் வெளியில் வேறுவிதமாகத் திரித்துக் கூறுகின்றனர்’ என ஆதங்கப்பட்டுள்ளார் சசிகலா.தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு, சசிகலாவை மட்டும் அ.தி.மு.க-வில் முன்னிலைப்படுத்தும் வேலைகளை திவாகரன் தரப்பில் செய்துவருகின்றனர். அ.ம.மு.க பொதுச் செயலாளராக இருக்கும் தினகரனுக்கு சொந்தக் கட்சியினர், மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லாமல் தடுப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. தவிர, ஜெயா டி.வி-க்குள் நடக்கும் அதிகாரப்போட்டி, கட்சியைப் பதிவுசெய்வதற்கான வேலைகள் எனத் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். தினகரன் பெயரைக் கேட்டாலே கொதிக்கும் சில கொங்கு அமைச்சர்களுக்கு, சசிகலா மீது எந்தவிதக் கோபமும் இல்லை.

அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு அ.ம.மு.க தடையாக இருப்பதால், அதற்கு எந்த வகையில் எல்லாம் இடையூறு கொடுக்க முடியும் என்பதைப் பற்றித்தான் யோசித்துவருகின்றனர். இதற்காக டெல்லி தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க-வுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன. அதற்காக பெங்களூரு புகழேந்தியைப் பல வகையிலும் பயன்படுத்தி வருகின்றனர்” என விவரித்த சசிகலா ஆதரவாளர்கள், தொடர்ந்து சில தகவல்களையும் நம்முன் பட்டியலிட்டனர்.

“ அ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவு செய்வதற்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 100 பேர் உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். அப்படிக் கொடுப்பவர்கள், `வேறு எந்தக் கட்சியிலும் பொறுப்பிலும் இல்லை’ எனக் குறிப்பிட வேண்டும். தினகரன் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். இவர்கள் கொடுத்த உறுதிமொழிப் பத்திரம் செல்லுபடியாவதற்கான வாய்ப்புகள் இல்லை. தேர்தல் ஆணையத்தில் எதிர்ப்பாளர்கள் திரண்டு மனுக் கொடுத்தால் போதும், கட்சியைப் பதிவுசெய்வதில் கூடுதல் சிக்கல் ஏற்படும். இப்படியொரு ஆபரேஷன் நடப்பதே எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்பேரில்தான். இதையொட்டியே சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார் புகழேந்தி” என்கின்றனர் விரிவாக.

`அ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவுசெய்வதில் உங்களால் சிக்கல் ஏற்படும் என்கிறார்களே?’ என்றோம். அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம்.

தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவு செய்யும்போது, நான் எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், அ.ம.மு.க என்ற கட்சிக்கு இடத்தைக் கொடுத்த இசக்கி சுப்பையா மூலமாகவும் எதிர்ப்புகள் வரலாம். அ.ம.மு.க-வை ஒரு கட்சியாகப் பதிவுசெய்து தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தாலும், நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குத் தடை கேட்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சிக்கல்கள் வரும் என்பதை யோசிக்காதவரா தினகரன்?

அப்படி யோசிக்கக்கூடிய தலைவராக இருந்திருந்தால், இதுவரையில் சட்டரீதியாக அவரால் எந்த வழக்கிலும் வெற்றிபெற முடியவில்லையே… ஒரு கட்சியின் பதிவும் சின்னமும் எவ்வளவு வேகமாகப் பெற முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக கமல்ஹாசன் இருக்கிறார். கடைக்குப் போய் 50 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டிய ஒரு விஷயத்தை, ஆராய்ச்சிக் கூடத்துக்குப் போய் தாமதமாகப் பெறும் வேலையைத்தான் அவர் செய்துவருகிறார். கமல்ஹாசன் பதிவுசெய்து பெற்ற கட்சியையும் சின்னத்தையும்கூட தினகரனால் பெற முடியவில்லை. மக்கள் நீதி மய்யம், குறுகிய காலத்தில் சரியான வேலையைச் செய்துவிட்டது. ஆனால் தினகரனோ, இரண்டு வருடகாலமாகக் கட்சியும் இல்லாமல் பதிவும் இல்லாமல் திணறி வருகிறார். அவருடைய எண்ணமெல்லாம் கட்சியைப் பதிவு செய்வதில் இல்லை. இதை குழப்பத்திலேயே வைத்திருக்கும் வகையில் ஏதோ ஒரு திட்டத்தைக் கையில் வைத்திருக்கிறார்.

உங்களை இயக்குவதே திவாகரன்தான் என்கிறார்களே?

அவரை நான் பார்க்கவும் இல்லை; பேசவும் இல்லை. இதுதான் உண்மை. ஏதாவது ஒரு சூழலில் பார்த்துப் பேசியிருந்தால்கூட, அவர்களுடைய உதவியால்தான் செய்கிறோம் என கிளப்பி விடுவார்கள். இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெற்றது சாதாரணமான வெற்றி இல்லை. விக்கிரவாண்டியில் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் அ.தி.மு.க வேட்பாளர். அதற்கு முன்னதாக, இதே தொகுதியில் தி.மு.க 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வித்தியாசத்தையும் அ.தி.மு.க வெற்றியோடு பொருத்திப் பார்த்தால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்குநேரியிலும் இதே அளவு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது. அப்படியானால், எடப்பாடி அரசை இந்த மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்

தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு, சசிகலா அ.தி.மு.க-வில் இணைவார் என்கிறார்களே?

அவர் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார். அ.தி.மு.க-வைத்தான் அவர் ஆதரிப்பார். அ.ம.மு.க என்ற கட்சியைப் பற்றி அவர் பேசவே மாட்டார். இன்னும் 2 வார காலங்களில் 2 மண்டலங்களில் கூட்டம் நடத்த இருக்கிறேன். அதன்பிறகு நாங்கள் இணைவது உறுதி. அது எங்கே என்பதைப் பொறுத்திருந்து சொல்கிறேன்.

உங்களை ஏன் இன்னும் கட்சியிலிருந்து தினகரன் கட்டம் கட்டாமல் இருக்கிறார்?

அவரை நான் கட்டம் கட்டுவதா… அவர் என்னைக் கட்டம் கட்டுவதா என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. யார் யாரை கட்டம் கட்டப்போகிறார்கள் என்பதைப் பாருங்கள். இன்னும் 4, 5 நாள்களில் பெரிய பிரச்னை ஒன்று வெடிக்கப்போகிறது. அது என்ன என்பதும் சஸ்பென்ஸ்” என்றார் சிரித்தபடியே.

%d bloggers like this: