தமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..!

தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எப்படியாவது அமைச்சர் பதவியை பிடித்துவிட வேண்டும் என கனவில் மிதக்க துவங்கி உள்ளனர்.

ஆர்.கே.நகர் படுதோல்வி, மக்களவை தேர்தல் அவமானம், வேலூரில் வெற்றி வாய்ப்பை இழந்தது போன்ற காரணங்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸின் தலைமை மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி அவர்கள் இருவருக்கும் மட்டும் அல்லாமல் அதிமுக எனும் கட்சிக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைத்தது போன்ற எளிதான வெற்றியை சட்டமன்ற தேர்தலில் கொடுத்துவிடாது என்பதை கூறும் வகையில் இருக்கிறது.

இந்நிலையில், சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போதும், அவர்களை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை, தங்கள் வசம் வைத்துள்ளனர். முதல்வரிடம், பொதுத்துறை, நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை; துணை முதல்வரிடம், நிதித்துறை, வீட்டு வசதித்துறைகள் உள்ளன. அமைச்சர் செங்கோட்டையனிடம், பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அமைச்சர் உதயகுமாரிடம், வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளன. எனவே, கூடுதல் துறையை கவனிப்போரிடமிருந்து, துறைகளை பெற்று, புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, எம்.எல்.ஏ.க்களிடம் எழுந்தது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தேர்தலில், வெற்றி பெற்றதை தொடர்ந்து, அமைச்சரவையை மாற்றி அமைக்க, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை கைப்பற்ற, எம்.எல்.ஏ.,க்கள் இடையே, கடும் போட்டி நிலவுகிறது. அமைச்சர் பாண்டியராஜனும், வேறு துறை ஒதுக்கி தரும்படி கோரியுள்ளார். நாங்குநேரியில் வெற்றி பெற்றதால், நாடார் சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ளார். அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், அதே மாவட்டத்தை சேர்ந்த, சதன் பிரபாகர், அமைச்சர் பதவி பெற முயற்சித்து வருகிறார். எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, செம்மலை, தமிழ்செல்வன், வெங்கடாசலம் என ஏராளமானோர் அமைச்சராக விரும்புகின்றனர்.

இவர்களில் பலர் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆதரவை பெற முயற்சித்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் விரும்பியபடி, அமைச்சரவையை மாற்றி அமைப்பாரா அல்லது பிரச்சனை வேண்டாம் என அப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவாரா என்பது, இன்னும் சில தினங்களில் தெரியவரும். எப்படி இருந்தாலும் அமைச்சர் கனவில் எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர்.

%d bloggers like this: