பண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள்? – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முழுதாக முடிவதற்கு முன்பே அடுத்த ஆண்டில் அவர்

விடுதலையாகிவிடுவார் என்று தகவல்கள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் மீண்டும் ஒரு மெகா சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

ஏற்கெனவே சிறையைவிட்டு அவர் வெளியே சென்றதாக வந்த புகாரின்பேரில் நடந்த விசாரணையின் அறிக்கை அவருக்கு எதிராக இருப்பதால் அவருக்குத் தண்டனைக்காலம் குறைக்கப்படாது என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியுமா என்பதே சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அந்தளவுக்கு அவர் மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. 52 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிறைவாசத்தில் இருக்கும் சசிகலாவின் கணக்கில் சுமார் 1,500 கோடி ரூபாய் புதிதாகச் சேர்ந்திருக்கிறது.

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், சுமார் 1,500 கோடி ரூபாய் அளவில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வாங்கிய சொத்துகளுக்கு முறையாக ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யாமல் பணம் மட்டும் கைமாறியிருக்கிறது. தற்போது வருமானவரித்துறையினர் இதுபற்றி அறிந்து, அந்த சொத்துகளின் ஆவணங்களை முடக்கியிருக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அந்தச் சொத்துகளின் அதிகாரவரம்பில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் (Sub Registrars Office), நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகங்களுக்கும் (Registrar of Companies), பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், சசிகலா தரப்புக்கும் தற்போது அச்சொத்துக்களுக்கு பெயரளவில் இருக்கும் உரிமையாளர்களுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், சசிகலா குடும்பத்தாரால் வாங்கப்பட்ட சொத்துகளில் சிலவற்றின் பெயர்களும் வெளியாகியுள்ளன. கோவையில் செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனம், ஸ்ரீலக்ஷ்மி ஜுவல்லர்ஸ், பாண்டிச்சேரியில் ஸ்ரீலக்ஷ்மி ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு விடுதி, சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்டவை அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின், பிரிவு 24-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு வேளை இந்த வழக்கும் அவர் மீது பதியப்பட்டால், சிறையிலிருந்து அவர் வெளியே வருவதற்குள்ளாகவே மீண்டும் ஒரு தண்டனையை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இவை ஒருபுறமிருக்க, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கே.எல்.பி நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறித்தும் வருமானவரித்துறை விசாரித்து வருவதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த சில நாள்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: