எடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்!

ம்முடைய குடலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ அளவுக்கு பாக்டீரியா இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்… நம்முடைய குடலில் கோடிக்கணக்கில் பாக்டீரியா இருக்கும். அவற்றின் மரபணுக்கள், நம் மரபணுக்களைவிட நூறு மடங்கு அதிகம். நம் குடலிலுள்ள பாக்டீரியா நாம் உண்ணும் உணவைச் செரிக்கச்செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை. அது மட்டுமல்ல…

வைட்டமின் கே போன்ற சில சத்துகளை உற்பத்தி செய்வது, ஹார்மோன்களை முறைப்படுத்துவது, கழிவுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களுக்கும் துணைபுரிபவை. உடலின் எதிர்ப்பு சக்தியுடன் இணைப்பிலிருந்து தொற்றுகளுக்கு எதிராகப் போராடுவதிலும் இவற்றின் பங்கு முக்கியமானது.

எடையைக் கட்டுப்படுத்துவதில் குடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குடலை நம் உடலின் இரண்டாவது மூளை என்று சொல்லலாம். ‘கிளீவ்லாண்டு கிளினிக் ஃபார் பங்ஷனல் மெடிசின்’ இயக்குநர் டாக்டர் மார்க் ஹைமேன், நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் மையமானது குடல் என்றும், உடலில் நடக்கிற எல்லாச் செயல்களுக்கும் குடலுடன் தொடர்புண்டு என்றும் சொல்கிறார்.

நாம் உண்ணும் உணவானது முறையாகச் செரிக்கப்பட்டு, உணவிலுள்ள சத்துகள் ரத்தத்துடன் முழுமையாகக் கலந்து நமக்குத் தேவையான ஊட்டத்தை அளிக்கும்பட்சத்தில் நம் குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நம் குடலிலுள்ள நுண்ணுயிரிகள் குடலிலுள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியா அளவுகளைப் பொறுத்தே அந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும். ஈஸ்ட், கெட்ட பாக்டீரியா, பாராசைட்ஸ், பைஃபோடாபாக்டீரியா போன்றவற்றின் தாக்கத்தாலும் லாக்டோபேசிலஸ் போன்ற நல்ல நுண்ணுயிரிகள் குறைவாக உள்ள உணவுகளை உண்பதாலும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். குடலிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படும்போது அதன் பிரதிபலிப்பு வளர்சிதை மாற்றத்தில் தெரியும். அதன் விளைவாகத் தீவிர வீக்கம் ஏற்படும்.

குடலில் கெட்ட பாக்டீரியா அதிகரிக்கும் போது சருமம், மூட்டுகள் மற்றும் மூளைப் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது கெட்ட பாக்டீரியாவை வெளித்தள்ள உடலின் எதிர்ப்புத் திறனை அதிகமாகத் தூண்டும்.

குடலில் உள்ள கெட்ட நுண்ணுயிரிகள், உடலில் உள்ள மூட்டுகள், சருமம் மற்றும் மூளை போன்ற பல்வேறு பகுதிகளில் வீக்கம், புண் போன்றவற்றுக்குக் காரணமாகின்றன. இது, உங்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்கு உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கத்தைத் தொடர்ந்து தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உயரும்போது, அது இன்சுலின் தடை அல்லது ப்ரீடயாபட்டிஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை, அதிக பசி போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது இறுதியில் எடை அதிகரிப்பில் வந்து நிற்கும்.

குடல்

நீங்கள் யார் என்பதை உங்கள் உணவு தீர்மானிக் கிறது. நம் முடைய இன்றைய உணவுகள் பெரும்பாலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட், சர்க்கரைச்சத்து மற்றும் பொரித்த, வறுத்த உணவுகளாகவே இருக்கின்றன நார்ச்சத்து, ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் சத்துகள்கொண்ட உணவுகள் இடம்பெறுவதில்லை. தவறான கொழுப்பு வகைகள்… உதாரணத்துக்கு, ரீபைண்டு சன்ஃபிளவர் ஆயில், கார்ன் எண்ணெய் மற்றும் கனோலா ஆயில் போன்றவற்றில் சேர்க்கப்படும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தூண்டி உடல் வீக்கத்தை அதிகரித்து, எடைக்குறைப்பு முயற்சியைக் கடினமாக்கும் அதன் விளைவாக எடை அதிகரிக்கும் இந்த ஒமேகா 6 கொழுப்பு இதயநோய்கள், நீரிழிவு, பருமன் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கும் காரணமாகிறது. `ரீஃபைண்டு செய்யப்பட்ட வெஜிடபிள் ஆயில் வகைகள் ஆரோக்கியமானவை, இதய நலம் காப்பவை’ என்ற கருத்துகளைப் பரப்பும் விளம்பரங்களை ஒதுக்கிவைப்போம். ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்போம்.

ஸ்ட்ரெஸ் மற்றும் தூக்கமின்மை

மனது சரியில்லாதபோது, வயிறும் சரியில்லாததுபோல எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஆமாம்… எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை குடலுக்கு உண்டு. அதீதமான ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு குடலிலுள்ள பாக்டீரியாவின் தன்மையையும் பாதிக்கும். குடலும் உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் இயங்கக் கூடியது. தூக்கமின்மை, நைட் ஷிஃப்ட் வேலை, இரவில் தாமதமாக உண்பது அல்லது உணவைத் தவிர்ப்பது போன்றவை குடல் ஆரோக்கியத்தைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடியவை.

எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபடுவோர் தைராய்டு அளவுகளையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆன்டிபயாட்டிக் பயன்பாடு

தொண்டை கரகரப்பு, சிறுநீர்ப்பாதைத் தொற்று போன்ற தொற்றுகள் ஏற்படும் போது ஆன்டிபயாட்டிக் பரிந்துரைக்கப் படுவதில்லை. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கெட்ட பாக்டீரியாவை மட்டுமன்றி நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து அழிக்கக்கூடியவை. அப்படி அளிக்கப்பட்ட நல்ல பாக்டீரியா மீண்டும் பழைய எண்ணிக்கைக்குத் திரும்ப, அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஒருமுறை எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்வரை அதன் தாக்கத்தை குடலில் நீட்டிக்கச் செய்யும். இவை தவிர, புகைப்பழக்கமும் மதுப் பழக்கமும் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாவை அழிக்கக்கூடியவை.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எடைக்குறைப்பை வேகப்படுத்தும் வழிகள்…

சரிவிகித உணவுகளை உண்பது மற்றும் குடலில் நல்ல நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் முதல் வழி. இந்த இரண்டும் முறைப்படுத்தப்பட்டாலே எடைக்குறைப்பு முயற்சி எளிதாகும். அதற்குச் சில ஆலோசனைகள்…

1. பதப்படுத்தப்படாத சுத்திகரிக்கப்படாத முழுமையான உணவுகளை உண்பது…

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரைச்சத்து மிக அதிகமாக இருக்கும். அவை குடலிலுள்ள நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைந்து கெட்ட பாக்டீரியா அதிகரிக்கும்போது இனிப்புகளின் மீதான தேடல் அதிகரிக்கும். அது ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும்.

2. நார்ச்சத்தும் ப்ரீபயாட்டிக்கும் அதிகமுள்ள உணவுகளை உண்பது…

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் கொலஸ்ட்ராலையும் நீரிழிவையும் கட்டுப்படுத்தி எடைக்குறைப்புக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன, நார்ச்சத்துள்ள உணவுகள், செரிமானமாகி செரிமானப் பாதை வழியே வெளியேறக் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். உணவிலுள்ள சத்துகள் ரத்தத்தில் மெதுவாகக் கிரகிக்கப்படும். ப்ரீபயாட்டிக் என்பதும் நார்ச்சத்தின் ஒரு வகையே. இவை நன்மை செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தூண்டுபவை.

வெங்காயம், பூண்டு, ஆளி விதை, லீக்ஸ், சியா சீட்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை, வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் ப்ரீபயாடிக் இருக்கும். உங்களுடைய சாப்பாட்டுத் தட்டில் முக்கால் பங்கு காய்கறிகளும் தாவர உணவுகளும் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. உணவில் புரோபயாடிக் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

நோயிலிருந்து மீளும்போது அல்லது ஆன்டிபயாட்டிக் சிகிச்சை மேற்கொண்ட பிறகு உங்கள் குடல் இழந்த நல்ல பாக்டீரியாவை மீண்டும் கொண்டுவருவதில் புரோபயாடிக் உணவுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. யோகர்ட் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய், கொம்புச்சா போன்றவை நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரித்து, எடைக்குறைப்புக்கு உதவும்.

4. நல்ல கொழுப்பு வகையைத் தேர்ந்தெடுப்பதில் கவனம்

சிலவகை மீன்கள், எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், அவகாடோ, பாதாம், வால்நட், ஆளி விதைகள் மற்றும் சியா சீட்ஸ் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு மற்றும் MUFA எனப்படும் monounsaturated fatty acids போன்ற நல்ல கொழுப்புகள் அதிகம். இவை நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரிப்பவை. ஒமேகா 6 உள்ளதாகச் சொல்லப்படும் ரீஃபைண்டு வெஜிடபிள் ஆயில்களைத் தவிர்க்கவும்.

5. தேங்காய் சேர்த்துக் கொள்ளத் தயங்க வேண்டாம்

தேங்காயில் குறிப்பாக, தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய்ப் பாலில் ‘மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு’ இருப்பதாக சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு உடல் வீக்கத்தைக் குறைத்து எடைக்குறைப்புக்கு உதவுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தேங்காய் சேர்த்துக்கொள்வதில் தயக்கம் வேண்டாம்.

6 சப்ளிமென்ட்டுகளும் உதவும்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிறைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. மீன் எண்ணெய், ஆல்கே ஆயில் (சைவ உணவுக்காரர்களுக்கு) போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு உள்ளது லாக்டோபேசில்லஸ் மற்றும் பைஃபோடாபாக்டீரியா உள்ள புரோபயாடிக் சப்ளிமென்ட்டுகளும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகத் தெரியவந்துள்ளன

7. தைராய்டு அளவைச் சரிபார்க்கவும்.

ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் தைராய்டு ஹார்மோன்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபடுவோர் தைராய்டு அளவுகளையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு செய்தி!

ங்கள் குடலுக்குள் உள்ள நுண்ணிய பாக்டீரியா கிருமிகள் உங்களையே கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆற்றல் மிகுந்தவை. குடலுக்கு உகந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் தேவையற்ற உணவுத் தேடல்களைத் தவிர்க்க முடியும். கூடவே எடைக்குறைப்பு முயற்சியில் உங்கள் இலக்கை எளிதில் எட்டவும் முடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: