மெகா சிக்கலில் சசிகலா!

ன்றைக்கு ஐயா செம பிஸி. அதனால் அனைத்து தகவல்களும் வாட்ஸப்பில்தான்’ என்று கழுகாரிடமிருந்து வந்து விழுந்த வாட்ஸப் தகவலைப் பார்த்ததுமே பதற ஆரம்பித்துவிட்டோம். அதேநேரம், கழுகாரிடமிருந்து போன்… “என்ன உதறல் ஆரம்பித்துவிட்டதா? நாடே ஆடிப்போய் கிடக்கிறது, நீர் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? அதுதான் டீஸர்விட்டுப் பார்த்தேன்” என்று சொல்லிச் சிரித்த கழுகார்,

“வாட்ஸப் ஒட்டுக்கேட்பு விவகாரம், பி.ஜே.பி-க்கு பெரிய தலைவலியாக மாறும் என்றே தோன்றுகிறது. வாட்ஸப் சங்காத்தமே வேண்டாம். நீர், எக்ஸ்பிரஸ் அவென்யூ வந்து சேரும். நேரில் பேசிக்கொள்வோம்” என்று போனைத் துண்டித்தார்.

மாலை மங்கிய நேரத்தில் சென்னை, அண்ணாசாலையைக் கடந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குச் சென்றோம். நமக்கும் காபி ஆர்டர் செய்த கழுகார், அவருக்கு வைத்த காபியைச் சுவைத்துக்கொண்டே ஆரம்பித்தார்.

“ஏற்கெனவே வாட்ஸப் மூலமாகத்தான் பி.ஜே.பி வெற்றிபெற்றது என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இத்தகைய சூழலில், மம்தா பானர்ஜி, பிரியங்கா காந்தி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரது வாட்ஸப் உரையாடல்களும் ஒட்டுகேட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.’’

“இது யாருடைய வேலை?’’

“மத்திய அரசு மற்றும் இரண்டு மாநில அரசுகளின் உத்தரவின் பேரில்தான் இது நடந்திருப்பதாக மம்தா பானர்ஜியே குற்றம்சாட்டியிருக்கிறார். அதில் ஒன்று, பா.ஜ.க அரசு என்று கூறியிருக்கிறார். மற்றொன்றுதான் எது எனத் தெரியவில்லை. அது தமிழ்நாடாக இருக்குமோ என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.’’

“என்னவோ நடக்குது!’’

‘‘ஆளும்கட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக ஆரம்பித்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தில் நான்கு வார அவகாசம் கேட்டிருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். அதற்குள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் இந்த நான்கு வார அவகாசத்துக்குள் முடித்துவிட வேண்டுமென நினைக்கிறார்கள். இந்த அவகாசகத்துக்குள் தேர்தலுக்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும் முடித்தே ஆகவேண்டுமென்று கட்சி நிர்வாகிகளுக்கு 6-ம் தேதி கூட்டத்தில் கறார் உத்தரவு போடப்போகிறார்களாம்!’’

ஸ்டாலின், பழனிசாமி

“அப்படியானால் ‘புலி வருவது’ உறுதிதானா?”

“உறுமல் பலமாக இருப்பதைப் பார்த்தால், கண்டிப்பாக தேர்தல் நடந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. முதலில் கிராம ஊராட்சிகளுக்கான தேர்தலை நடத்திவிட்டு… பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கு அடுத்து நடத்தலாம் என்றுகூட ஒரு திட்டம் இருக்கிறதாம். நான்கு அல்லது ஐந்து கட்டங்களாக நடக்கலாம் என்கிறார்கள். கிராம ஊராட்சிகளுக்கு கட்சி சின்னம் இல்லை என்பதால், சீட் ஒதுக்கும் பிரச்னையே இல்லை. முடிந்தவர்கள் முட்டிமோதிக்கொள்ளவேண்டியதுதான். ஆனால், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என வரும்போது கூட்டணிக் கட்சிகள் கோதாவில் இறங்கும் என்பதுதான் அ.தி.மு.க தலைகளை யோசிக்கவைக்கிறதாம்.”

“கூட்டணிக் கட்சிகளின் நிலை என்னவோ?”

“பி.ஜே.பி தரப்பில் இரண்டு மாநகராட்சிகளை எதிர்பார்ப்பதாகப் பேச்சு இருந்தது. இதுகுறித்து டீஸர் விட்டுப்பார்த்தார்கள். ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லை என்பதால், தமிழகம் முழுவதும் பரவலாக பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என களம் கண்டு வென்றுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால், இந்த விஷயம் தொடர்பாக அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் தருவதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.’’

“தே.மு.தி.க., பா.ம.க?”

“தே.மு.தி.க தரப்பில் மிகுந்த அன்னியோன்யமாக இருப்பதால், ஒரு மாநகராட்சி கிடைக்கக்கூடும். பா.ம.க தரப்பில் தற்போது பெரிய அளவில் டிமாண்ட் வைக்கிறார்கள். குறிப்பாக சேலம், வேலூர் மாநகராட்சிகளைக் கைப்பற்றப் பார்க்கிறார்கள். ராமதாஸ் தரப்பிலிருந்து இப்போதே சிக்னல் வர ஆரம்பித்திருக்கிறது. இதுதான் அ.தி.மு.க தரப்பை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.”

“அமைச்சர்களைச் சந்தித்து அதிகாரிகள் ஏதோ முறையிட்டார்களாமே?”

“கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தி அதிரடி காட்டிவருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பிக்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர், சில அமைச்சர்களைச் சந்தித்து, ‘மாசா மாசம் பார்ட்டிக்கு ஃபண்ட்னு சொல்லி கேட்கிறீங்க. இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி மிரட்டிக்கிட்டிருக்கு. என்ன செய்றது?’ என்று புலம்ப, ‘அமைதியாக இருங்கள் சி.எம்-மிடம் பேசி முடிவுசெய்கிறோம்’ என்று சமாதானப்படுத்தினார்களாம். அதன்படியே சி.எம் வரை விஷயம் போயிருக்கிறது. ஆனால், அவர் அலட்டிக்கொள்ளவே இல்லையாம்.”

“லஞ்சத்தை ஊக்குவிக்கக் கூடாது என நினைக்கிறாரோ முதல்வர்.”

“ஆனால், முதல்வர்மீதே பெரிய புகார் பட்டியலை வாசித்திருக்கிறாரே மு.க.ஸ்டாலின்.”

‘ஆளுங்கட்சிக்கு பினாமியான நிறுவனங்கள், பல கோடி ரூபாய் வருமானவரி ஏய்ப்பு செய்திருக்கின்றன’ என்று முதல்வருக்கு நெருக்கமான ஈரோடு நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டு குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்த ஈரோடு நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதையெல்லாம் நோட் செய்த பிறகே ரெய்டு நடந்திருக்கிறது. இந்த ரெய்டை நிறுத்தச் சொல்லி முக்கியப்புள்ளி ஒருவர் டெல்லி வரை பேசியும் பலன் இல்லையாம்.”

“ஒரே நேரத்தில் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டியிருக்கிறாரே எடப்பாடி?”

“சில அதிகாரிகளை கண்டிப்பாக மாற்றவேண்டும் என்றும், சிலரை இந்த இடத்தில் போடவேண்டும் என்றும் அமைச்சர்களிடமிருந்து தொடர் அழுத்தம். டி.ஜி.பி-யான திரிபாதி அதற்கான பட்டியலைத் தயார் செய்துள்ளார். பிறகு, சில திருத்தங்களை மட்டும் செய்யுங்கள் என்று முதல்வரிடம் அவர் தயங்கித் தயங்கிக் கேட்க, ‘நிர்வாகரீதியாக எது நல்லதோ அதைச் செய்யுங்கள்’ என்று எடப்பாடி சொல்ல, ஏகத்துக்கும் குளிர்ந்துவிட்டாராம் திரிபாதி. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி-யாக ராஜசேகரன் மாற்றப்பட்டதற்குக் காரணமே, அமைச்சர் ஒருவர்தானாம். ஒரு பிரச்னைக்காக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்மீது கறாராக நடவடிக்கை எடுத்துள்ளார் ராஜசேகரன். அப்போது, அமைச்சர் தரப்பிலிருந்து சிலர் சிபாரிசுக்குச் சென்றுள்ளனர். ஆனாலும், அவர் கேட்கவில்லையாம். தென்மாவட்டத்தில் இரண்டு அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணியிலும் இப்படி அமைச்சர்களின் தலையீடு இருக்கிறதாம்.”

சசிகலா

“ `வன்னியர்களை வைத்து எனக்கு எதிராக சதிசெய்கிறார்கள்’ என்று பொன்முடி வருத்தத்தில் இருக்கிறாராமே?”

“ஆமாம். சமீபத்தில் உதயநிதிகூட பொன்முடி விஷயத்தில் வருத்தத்தில் இருக்கிறார் என்று நீர் சொல்லியிருந்தீர். ‘என் மகனுக்கு நெருங்கிய நண்பர் உதயநிதி. அவர் என்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்வாரா. நான் இந்தக் கட்சிக்காக கடந்த காலங்களில் செய்தவற்றை யெல்லாம் மறந்துவிட்டு இப்போது விமர்சிக்கிறார்கள். வன்னியர் பகுதியில் நான் ஜெயித்த கதையும், பிற சமூகத்தை ஜெயிக்க வைத்ததையும் மறந்துவிட்டார்களே’ என்று நொந்துபோய்ச் சொல்லியிருக்கிறார் பொன்முடி.”

“சரி… சசிகலா மறுபடியும் பயங்கரமான சிக்கலில் மாட்டியிருக்கிறாராமே?”

“பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாம். பணம் மட்டும் கை மாறியிருக்கிறது; ஆவணங்களில் இதுவரை பெயர் மாற்றம் செய்யவில்லையாம். இதைக் கண்டறிந்து கிடுக்கிப்பிடி போட்டுள்ளது வருமானவரித் துறை. கோவை செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனம், ஸ்ரீலக்ஷ்மி ஜுவல்லர்ஸ், புதுச்சேரி- ஸ்ரீலக்ஷ்மி ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு விடுதி, சென்னை, பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால் என சில நிறுவனங்களின் பெயர்களும் வெளியாகியிருக் கின்றன. பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் மற்றும் கே.எல்.பி நிறுவனத்துக்குச் சொந்தமான 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறித்தும் வருமானவரித் துறை விசாரித்துவருகிறது” என்ற கழுகார், சுற்றிலும் அதிகமான தலைகள் தென்பட்டதும் பேச்சை முடித்துக்கொண்டு சட்டெனப் பறந்தார்.

லைமைச் செயலாளர், டி.ஜி.பி சகிதமாக கவர்னரைச் சந்தித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அயோத்தி தீர்ப்பு வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிப் பேசியதாகக் கூறப்படுகிறது. கூடவே, தமிழக நிலவரம் குறித்து டெல்லி மேலிடத்திலிருந்து வந்த சில அறிவுறுத்தல்களையும் கவர்னர் பகிர்ந்தாராம். திடீரென கவர்னரைச் சந்திக்க முதல்வர் புறப்பட்டதும், ஒரு சில அமைச்சர்களுக்கு கிலி பற்றிக்கொண்டதாம். பதவி பறிபோய்விடுமே என பயந்துள்ளனர். பிறகு, உண்மையான செய்தி வந்த பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: