அ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு!

நாம்
அங்கு சென்றபோது கடலையைக் கொறித்தபடி கடல் அலைகளை
ரசித்துக்கொண்டிருந்தார். நம்மைப் பார்த்ததும் ‘‘உள்ளாட்சித்
தேர்தலைப்போல ஏன் இப்படித் தாமதமாக வருகிறீர்?” என்று செல்லமாகக்

கோபித்துக் கொண்டவரை சமாதானப்படுத்தி, “உள்ளாட்சித் தேர்தல் வருமா…
வராதா?” என்று கேட்டோம்.

‘‘உள்ளாட்சித் தேர்தலை
நடத்துவதில் தீவிரமாக இருக்கிறது ஆளுங்கட்சி. இன்னும் 15 நாள்களில் தேர்தல்
அறிவிப்பு வந்துவிடுமென்று துணை முதல்வர் பன்னீர் மதுரையில்
பேசியிருக்கிறார் கவனித்தீரா?’’

‘‘கவனித்தேன்…அதை
மாநில தேர்தல் ஆணையம்தானே சொல்ல வேண்டும். அரசு சார்பில்
சொல்வதாயிருந்தாலும் முதல்வர்தானே சொல்லியிருக்க வேண்டும்?’’

‘‘அதைச்
சொன்னதிலும் அரசியல் இருக்கிறது என்கிறார்கள். அதாவது இதற்கு மேலும்
உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட எடப்பாடியே நினைத்தாலும்
முடியாதல்லவா…இது எடப்பாடிக்கு பன்னீர் தரப்பு வைக்கும் செக்
என்கிறார்கள்!’’

‘‘ஆனால், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எடப்பாடியும் அதைத்தானே ஆமோதித்துப் பேசியிருக்கிறார்?’’

‘‘ஆமாம்…
அவருக்கு வேறு வழியில்லை. கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடக்கும்
என்று பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. பன்னீர் தன்
கருத்தை வலியுறுத்தியபோதும், ‘ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அம்மா
இருந்தபோது எப்படி தேர்தலை எதிர்கொள்வோமோ அதைப்போலவே எதிர்கொள்ள வேண்டும்.
கோஷ்டிப்பூசலுக்கு இடம் தரக் கூடாது’ என்று பேசியிருக்கிறார்’’

‘‘எடப்பாடி பேசியதில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா?’’

‘‘நன்றாகத்தான்
பேசியிருக்கிறார்… ‘விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில்
கிடைத்த வெற்றிதான் நமக்கு டானிக். கூட்டணி பலமே இல்லாமல் நாங்குநேரியில்
வெற்றிபெற்றிருக்கிறோம். மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுப்பதில் பாரபட்சம் காட்டக் கூடாது.
அமைச்சர்கள்,

எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள்
என்று சீட் கொடுக்காமல் உண்மையில் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறதோ
அவர்களுக்குத் தரவேண்டும்’ என்று அழுத்தமாகவே பேசியிருக்கிறார்.’’

நியாயம்தானே… ரியாக்‌ஷன் எப்படியிருந்தாம்?”

“பெரும்பாலான
எம்.எல்.ஏ-க்களுக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில்
விருப்பமில்லையாம். ‘ஒரேயடியாக சட்டமன்றத் தேர்தலுடன் வைத்துக்கொள்ளலாம்’
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் சீட்
கிடைக்காதவர்கள் கோஷ்டியை உருவாக்குவார்கள், அடுத்து வரும் சட்டமன்றத்
தேர்தலில் அது சிக்கலாகும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம்
பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.”

‘‘அதற்கு எடப்பாடியின் பதில் என்னவாம்?’’

‘‘எடப்பாடி,
‘நாற்பது சதவிகிதம் நாம் வெற்றிபெற்றாலே போதும். தமிழகம் முழுவதும் நாம்
பரவலாக வெற்றி பெறுவோம்’ என்று சமாளித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில்
தன் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கி கட்சியில் தன்னை ஒரு தனிப்பெரும் தலைவனாக
உருவாக்கிக்கொள்ள எடப்பாடி முடிவுசெய்து விட்டார்; அதற்கு பதிலடி
கொடுக்கும் வகையில் பன்னீர் இப்படிப் பேசியிருக்கிறார் என்று கூட்டத்திலேயே
சில எம்.எல்.ஏ-க்கள் கமென்ட் அடித்திருக்கின்றனர்!’’
‘‘தேர்தல் அறிவிப்பு எப்போது என்று சொன்னார்களா?’’

‘‘அதைப்
பற்றியும் பேச்சு எழுந்திருக்கிறது… அ.தி.மு.க-வின் தொடக்கவிழா கொண்டாட்
டத்தை பெரியளவில் நடத்தவில்லை. அதனால் மாவட்டம்தோறும் முதலில்
பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். அடுத்தகட்டமாக கட்சியின் மேல்மட்ட
பார்வையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வருவார்கள். அது முடிந்த பிறகே
தேர்தல் அறிவிப்பு வருமாம். அநேகமாக டிசம்பர் கடைசி வாரத்தில் தேர்தல்
நடக்கலாம்!’’

‘‘நம்பலாமா?’’

‘‘வேறு வழியில்லை… கூட்டணிக்
கட்சிகளுக்கு வழங்கப்படும் சீட் விவரங்களை அந்ததந்த மாவட்ட நிர்வாகிகளே
கலந்துபேசி முடிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா
பாணியில் முக்கிய இடங்களுக்கான சீட் பங்கீடு மட்டும் தலைமைக்கழகத்தில்
நடக்குமாம்.’’

‘‘அ.தி.மு.க-வில் பொறுப்பாளர்கள் மாற்றம் வேறு நடந்திருக்கிறதே?’’

‘‘கடலுார்
மாவட்டத்தில் அமைச்சர் சம்பத்துக்கும் அந்த மாவட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும்
ஏழாம் பொருத்தமாக இருந்தது. இப்போது மூன்றாகப் பிரித்து நிர்வாகிகளை
நியமித்திருக் கிறார்கள். இது சம்பத்துக்கு வைக்கப்பட்ட செக் என்கிறார்கள்.
மறுபுறம் அமைச்சர் சி.வி.சண்முகத் தின் கையும் ஓங்கிவருவது அப்பட்டமாகத்
தெரிகிறது. அதேபோல் முன்னாள் எம்.பி-யான கோபாலகிருஷ்ணனுக்கு இணைச்செயலாளர்
பதவி தரப்பட்டிருக்கிறது. இதற்கு செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா,
உதயகுமார் மூவருமே எதிர்ப்புத் தெரிவித்து, ‘அனிதா ராதாகிருஷ்ண னுடன்
தொடர்பில் இருப்பவருக்கு எதற்கு பொறுப்பு?’ என்று தலைமையிடம் குமுறியிருக்
கிறார்கள். பதிலுக்கு, ‘அனிதாவை அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரும் பொறுப்பை
அவரிடம் கொடுத் திருக்கிறோம்’ என்று பதில் சொன்னதாம் தலைமை.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் நிலை என்னவாம்?’’

‘‘கட்சியின்
தலைமை முடிவுசெய்வதற்கு முன்பே மாவட்டச் செயலாளர்கள் பலரும் இப்போதே
அ.தி.மு.க தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டார்கள் என்று
தகவல்கள் கசிகின்றன. கூட்டுறவுச் சங்கத் தேர்தலின்போது சிண்டிகேட்
போட்டதைப்போல இப்போதும் செய்யப்போகிறார்களாம்.’’

‘‘அது தலைமைக்குத் தெரியுமா?’’

‘‘தெரியாமல்
இல்லை. ஆனால், கண்டிக்கும் நிலையில் இல்லை. அ.தி.மு.க-வின் மாவட்டச்
செயலாளர்களுக்குக் கிடைக்கும் ‘கவனிப்பை’ போலவே தி.மு.க-வின் மாவட்டச்
செயலாளர்களுக் கும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து ‘கவனிப்பு’ நடக்கிறதாம்.
அதனால், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தரப்புக்கு நெருக்கடி தராத
வகையிலேயே வேட்பாளர்களை களத்தில் இறக்குவார்களாம் தி.மு.க மாவட்டச்
செயலாளர்கள்.’’

‘‘அறிவிக்கப்படாத உயர்நிலை செயல்திட்ட கூட்டம் அறிவாலயத்தில் நடந்ததாமே?’’

‘‘பொதுக்குழுவுக்கு
முன்பாக அறிவாலயத்தில் நவம்பர் 8-ம் தேதி இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது.
தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் பலரும் துணை பொதுச்செயலாளர்,
இணைச்செயலாளர் போன்ற பதவிகள் வேண்டும் என்று தலைமைக்கு நெருக்கடி
கொடுத்துவருகிறார்கள். மறுபுறத்தில் சில மாவட்டச் செயலாளர்களின்
செயல்பாடுகள் மீதும் தலைமை அதிருப்தியில் இருக்கிறது. இதற்குத் தீர்வாக
என்ன செய்யலாம் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுமாம்.
இதைவைத்தே நவம்பர் 10-ம் தேதி பொதுக்குழுவின் தீர்மானங்கள்
வடிவமைக்கப்படும் என்கிறார்கள்.’’

‘‘பஞ்சமி நில விவகாரம் தி.மு.க-வுக்குச் சிக்கலாகிவருகிறதே?’’

‘‘ஆமாம்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து விவரங்கள் அளிக்க
தமிழக தலைமைச் செயலாளரை நவம்பர் 19-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது.
பா.ஜ.க மாநிலச் செயலாளர் சீனிவாசன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்
அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. இது தி.மு.க
தரப்புக்கு கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறதாம்!’’

‘‘மோடி – வாசன் சந்திப்பில் என்ன விசேஷம்?’’

‘‘மோடியைச்
சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று வாசன் சொன்னாலும் இந்தச் சந்திப்பை
தமிழக பா.ஜ.க-வினர் கொஞ்சம் மிரட்சியுடன்தான் பார்க்கிறார்கள்.
திருநாவுக்கரசர் போன்று இவரும் பா.ஜ.க-வில் இணைந்து தலைவராகி…
மந்திரியாகிவிடுவாரோ என்று இப்போதே புலம்பல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
வாசன் தரப்பில் ‘திருவையாறு விழா ஜனவரி மாதம் நடக்கிறது. அதற்கு வெங்கய்யா
நாயுடுக்கு அழைப்பு கொடுக்கப் பட்டது. அவரின் ஆலோசனையின்படிதான்
பிரதமரையும் சந்தித்தார் வாசன்’ என்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் பா.ஜ.க
முன்னாள் தலைவர் ஒருவர்தான், வாசனை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையைத்
தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.’’

‘‘அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘பாரம்பர்ய
காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் எப்படி பா.ஜ.க-வில் இணைவார் எனத்
தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் பிரிந்ததற்குக் காரணமே
பா.ஜ.க தரப்பில் கொடுக்கப்பட்ட மறைமுக அழுத்தங்கள்தான். இப்போது வேறு
ரூபத்தில் இந்த அழுத்தம் தரப்படுகிறது. ரஜினியை பெரிதாக எதிர்பார்த்தனர்.
ஆனால், அவர் பிடிகொடுக்காமல் போவதால் வாசனை கட்சிக்குள் கொண்டுவரத்
திட்டமிடுகிறார்கள் என்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள்
தமிழிசையை உதாரணமாகக் காட்டுகிறார்களாம். ஆனால், ‘கூட்டணி மட்டுமே,
பா.ஜ.க-வுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தெளிவாகச்
சொல்கின்றனர் த.மா.கா தரப்பினர்!’’ என்ற கழுகாருக்கு அலைபேசியில் அழைப்பு
வரவே ‘பை’ சொல்லிவிட்டுப் பறந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: