குண்டா இருக்கீங்களா?

உடல் பருமன், நீரிழிவு பிரச்னை, ரத்த அழுத்தம் இவை எல்லாம் இப்போது சர்வசாதாரண பிரச்னையாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இதில் ஏதாவது ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் ஒரு உயரம் மற்றும் எடையில் இருப்பார்கள். குறிப்பிட்ட உயரத்தில் இருப்பவர்கள் அதற்கான எடையினை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது நம்முடைய உயரத்துக்கு ஏற்ப இவ்வளவு தான்  எடை என்று மருத்துவ ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு இருப்பது போல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும், அதில் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாமல் இருப்பது அவசியம்.

அப்படி இல்லாமல் ஒருவரின் உயரத்தை விட அவரின் எடை அதிகமாக இருந்தால் அதை ஒபீசிட்டி அதாவது உடல் பருமன் என்று குறிப்பிடுகிறோம் என்றார் விரைப்பை மற்றும் குடல் நோய் நிபுணர் டாக்டர் பிரவீன் ராஜ். இவர் உடல் பருமன் நாம் சாப்பிடும் சாப்பாட்டால் ஏற்படுதில்லை என்கிறார். மேலும் அதை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை நாம் சிகிச்சை மூலம் சீர்செய்யலாம் என்கிறார். ‘‘ஒருவர் குண்டாக இருந்தால் உடனே நாம் அவர் நிறைய சாப்பிடுவார். சரியான முறையில் உடற்பயிற்சி செய்யமாட்டார். மிகவும் சோம்பேறியாக இருப்பார்.
நிறைய ஜங்க் உணவுகளை சாப்பிடுவார். இப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் அந்த நபரை பற்றி நினைக்கிறோம். உடனே நாமே அதற்கான தீர்வும் கொடுக்க தயங்குவதில்லை. சரியான முறையில் டயட் இருங்க. உடற்பயிற்சி செய்யுங்க. கிரீன் டீ குடிங்கன்னு பலர் பலவிதமான ஆலோசனைகளை அள்ளித் தெளிப்போம். ஆனால் ஒருவர் உடல் பருமனாக இருந்தால் அதற்கு அவர் சாப்பிடும் உணவு மட்டுமே காரணமில்லை. உதாரணத்திற்கு சிலர் நிறைய சாப்பிடுவாங்க. ஆனால் ஒல்லியா இருப்பாங்க.
அதே சமயம் அளவாக சாப்பிடுவாங்க அவங்க குண்டா இருப்பாங்க. இதே போல் நிறைய பேரை நாம் நம் வாழ்க்கையில் பார்த்து இருப்போம். குண்டாக இருப்பவர்களுக்கு சாப்பாடு தான் காரணம் என்றால் ஒல்லியாக இருப்பவர்கள் நிறைய சாப்பிடும் போது அவர்களின் எடை ஏன் அதிகரிப்பதில்லை. அதே போல் நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் சிறிதளவு இனிப்பு சாப்பிட்டாலும், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். அதுவே சர்க்கரை நோயின் பாதிப்பு இல்லாதவர்கள் இனிப்பு சாப்பிட்டால், அவர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாவதில்லை.
இதை சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களிடம், இனிப்பு சாப்பிடாமல் இருந்தால், நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிடும் என்று எப்படி சொல்ல முடியும். அது எப்படி அறிவியல் ரீதியாக தவறோ அதே போல் தான் உடல் பருமன் பிரச்னையும். இரண்டு பேரும் ஒரே இனிப்பு சாப்பிடும் போது, அவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறுவது, ஏறாமல் இருப்பது அவர்கள் சாப்பிட்ட இனிப்பு தான் காரணம்ன்னு சொல்ல முடியாது. அவர்கள் சாப்பிட்ட பிறகு உடலில் ஏற்படும் சில ரசாயன கூற்றுகள் தான் சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணம்.
அதாவது ஒருவரின் உடலில் உள்ள மெட்டபாலிசம் சரியாக இருந்தால், அவர்களின் உடல் நிலையும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்கும்’’ என்றவர் சர்க்கரை பிரச்னைக்கு இன்சுலின் டிபிசியன்சி என்கிறார். ‘‘நம் உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாடு காரணமாக தான் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை இன்சுலின் டிபிசியன்சின்னு மருத்துவ முறையில் குறிப்பிடுவோம். இந்த குறையை போக்க மருத்துவர்கள் மருந்து மாத்திரையினை வழங்குவார்கள். அது அவர்களின் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
அந்த சமயத்தில் அவர்கள் இனிப்பு சாப்பிட்டால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அதே சமயம் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால், முற்றிலும் டயபெட்டிக் நார்மலாயிடும் என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அவர்கள் வாழ்நாள் முழுதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நாம் சாப்பிடும் சாப்பாடு காரணமாக நாம் குண்டாவதில்லை. மெட்டபாலிசத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் நம் உடல் பருமனை நிர்ணயிக்கும். குறைவாக சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து ஒரு பத்து கிலோ எடையை குறைக்கலாமே தவிர அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி வர முடியாது.
இதனால் தான் டயபெட்டிக், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன் நாலையும் சேர்த்து மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகிறோம். அதாவது நாம் சாப்பிடும் உணவு நம் உடலுக்குள் சென்று அங்கு ஏற்படும் மாற்றம் என்ன என்று தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நாம் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவில் கட்டுப்பாடு இருக்காமல் இருக்க கூடாதுன்னு இல்லை. எல்லாருடைய உடலுக்கும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி அவசியம்.
மேலும் ஒரு வயதிற்கு மேல் நாம் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றவர் மெட்டபாலிச பாதிப்பு பற்றி விவரித்தார். ‘‘மெட்பாலிசம்
என்பது யாருக்குமே புரியாது. 80% மக்கள் சராசரி உணவு தான் சாப்பிடுறாங்க. 20% மக்கள் தான் தேவையற்ற உணவினை சாப்பிடுறாங்க. குறிப்பாக பெண்கள். மெட்டபாலிசம் மாற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சின்ன வயசில் நம்முடைய உணவு பழக்கம், நம்முடைய பிசிக்கல் ஆக்டிவிட்டி, ஜெனிடிக் காரணங்கள், வாழ்க்கை முறை, மன அழுத்தம்… இவ்வாறு பல காரணங்களால் மெட்டபாலிசம் மாறுபடும்.
இதில் ஒரு பிரச்னையை மட்டுமே சீராக்க முடியாது. அனைத்து பிரச்னைக்கான தீர்வினை பார்க்க வேண்டும். அதற்கு நாமும் பல விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள், குறிப்பாக குறைந்த பட்சம் நிம்மதியான தூக்கம். இதில் அனைத்தும் மாறுதல் ஏற்பட்டால் தான் மெட்டபாலிசம் சீராக இயங்க உதவும். அந்த மாற்றம் உடனடியாக ஏற்படாது. பல நாட்கள் ஆகும். காரணம் அடிப்படை விஷயத்தில் இருந்து இந்த மாற்றம் ஏற்படணும்’’ என்றவர் உடல் பருமனுக்கு கெரியாட்ரிக் சிகிச்சை மூலம் தீர்வு காணலாம் என்றார்.
‘‘நீரிழிவு பிரச்னைக்கு எப்படி மருந்து அவசியமோ அதே போல் தான் உடல் பருமனுக்கு கெரியாட்ரிக் சிகிச்சை. நம் உடலில் பலதரப்பட்ட ஹார்மோன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வேலைப் பார்க்கும். அதில் மாற்றங்கள் ஏற்படும் போது நம் உடலை பாதிக்கும். இந்த ஹார்மோன் மாற்றத்தினை கெரியாட்ரிக் சர்ஜரி மூலமாக சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறை உடல் பருமனின் கடைசி அஸ்திரம். உடற்பயிற்சி, உணவு முறை எதிலுமே மாற்றம் ஏற்படலைன்னா தான் இந்த சிகிச்சையினை நாம் பின்பற்ற வேண்டும். 16 வயசில் இருந்து 70 வயசு வரை உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சையினை செய்யலாம்.
கெரியாட்ரிக் என்பது நம்முடைய சிறு குடலில் ஒரு சின்ன பைபாஸ் செய்யும் சிகிச்சை முறை. சிறுகுடல் 6 மீட்டர் நீளம். அதில் பல ஹார்மோன்கள் உற்பத்தியாகும். அவற்றில் கெட்ட ஹார்மோன்களும் அடங்கும். குடலின் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகும் ஹார்மோன்களை என்ன என்று பார்த்து அதில் எது உடல் பருமன் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது என கண்டறிந்து அதற்கு ஏற்ப தான் இந்த பைபாஸ் முறையினை கையாள்வோம். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சாதாரண உணவினை சாப்பிடலாம்.
ஆனால் அவர்களால் ஒரே சமயத்தில் அதிக அளவு உணவினை சாப்பிட முடியாது. மூன்று வேளை உணவினை ஆறு வேளையாக பிரித்து சாப்பிடலாம். ஆறு மாச இடைவேளையில் கண்டிப்பாக 40% எடை குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் சிகிச்சை செய்தாயிற்று என்று கண்டபடி சாப்பிடக்கூடாது. உணவிலும் கொஞ்சம் கட்டுப்பாடு அவசியம். இந்த சிகிச்சை செய்வதால் எந்தவித சைட் எஃபெக்ட் ஏற்படாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போல் சாதாரணமாக வாழலாம்’’ என்றார் விரைப்பை மற்றும் குடல் நோய் நிபுணர் டாக்டர் பிரவீன் ராஜ்.

%d bloggers like this: