எடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..? மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..!

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு, மாநகராட்சி மேயர் பதவிகளை தருவதில்லை என்றும், மற்றபதவிகளில் மட்டும் ஒதுக்கீடு செய்ய அதிமுக, திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனாலும், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர்

இந்நிலையில் தான் கடந்த மாதம் தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கட்சி தலைமை உற்சாகம் அடைந்துள்ளது. இதே வேகத்தில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவு செய்தது. இதனால், டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகள் உட்பட 15 மாநகராட்சிகளிலும், மேயர் பதவிகளில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க. – தி.மு.க.வினர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான பேச்சு, இன்னும் எந்த கட்சியிலும் தொடங்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பின், இட ஒதுக்கீடு பேச்சு நடைபெறும். ஆனாலும் திரைமறைவில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சிலர், இடஒதுக்கீடு சதவீதம் தொடர்பாக பேச்சு நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாமக, பாஜ, தேமுதிக கட்சிகள் தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் அதிக அளவு மேயர் வேட்பாளர் சீட்டுகளை அதிமுகவிடம் இருந்து பெற முயற்சி செய்து வருகிறார்கள்.

கூட்டணி கட்சிகளின் இதுபோன்ற கோரிக்கைகளால் அதிமுக கட்சி தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும் என்று அறிவித்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவிகளை விட்டுக்கொடுக்க அதிமுக தலைமை தயாராக இல்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல மாநகராட்சி மேயர் பதவியை எதிர்பார்க்காதீர்கள் என, மு.க.ஸ்டாலின் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் கறாராக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

%d bloggers like this: