எடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்!

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என 99 சதவிகிதம் பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அப்படியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலைக் கவனமாகப் பார்க்க வேண்டும்” எனக் கமல் விழாவில் சொன்னார் ரஜினிகாந்த். அடுத்த சில நாள்களிலேயே ”2021-ல் சட்டசபைத் தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்” என்றார்.

அதிசயங்கள் நடப்பதுதான் அரசியல். இந்திய அளவில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. மாட்டுத் தீவன ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் லாலு பிரசாத் யாதவ். இதனால், திடீரென அவருடைய மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். அரசியலில் ஆத்திசூடிகூட தெரியாத அவருடைய மந்திரிசபையில் 75 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். 5-ம் வகுப்பு மட்டுமே படித்த ராப்ரி தேவி பீகார் ஆட்சித் தேரை ஓட்டியதெல்லாம் அதிசயம்தான். தமிழக அளவில் சில அதிசயங்களைப் பார்ப்போம்.

அதிசயம் 1 – கருணாநிதி முதல்வரானார்!

“தம்பி வா… தலைமையேற்க வா!’’ என அண்ணா சொன்னது நாவலர் நெடுஞ்செழியனைத்தான். கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் 2-வாக இருந்த நெடுஞ்செழியன், அண்ணா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முதல்வர் ஆனார். நெடுஞ்செழியன்தான் அடுத்த முதல்வர் என எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. ”அண்ணாவின் இடத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் படைத்தவர் கருணாநிதிதான்’’ என்றார் பெரியார். தி.மு.க முன்னோடிகளும்கூட கருணாநிதி முதல்வர் ஆவதையே விரும்பினார்கள். எம்.ஜி.ஆரும் கருணாநிதியைத்தான் ஆதரித்தார். ”முதலமைச்சராகத்தான் இருப்பேன். அமைச்சராக இருக்க முடியாது’’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் நெடுஞ்செழியன். ”துணை முதல்வராக இருங்கள். சட்டமன்றத்தில்கூட உங்களுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்துகொள்கிறேன்’’ எனக் கருணாநிதி சொன்னபோதுகூட, நெடுஞ்செழியன் மசியவில்லை.

முதல்வரைத் தேர்வு செய்வதற்காக 1969 பிப்ரவரி 9-ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூடினார்கள். கருணாநிதியின் பெயரை அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன்மொழிய, அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, “வேறு யாராவது போட்டியிடுகிறீர்களா?’’ எனக் கேட்டார். நெடுஞ்செழியன் பெயரை எஸ்.ஜே.ராமசாமி முன்மொழிந்தார், வி.டி.அண்ணாமலை வழிமொழிந்தார். உடனே நெடுஞ்செழியன் எழுந்து, ”சட்டமன்றக் கட்சித்தலைவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் நான் போட்டியிட விரும்பவில்லை’’ என்றார். கருணாநிதி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த நாள் கருணாநிதி அமைச்சரவை பதவியேற்றது.

அதிசயம் 2 – ஜானகி முதல்வரானார்!

எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலும் நெடுஞ்செழியன்தான் நம்பர் 2. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், ”கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு இணங்க முதல்வர் பதவியேற்கச் சம்மதிக்கிறேன். நாவலர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். 1988 ஜனவரி 7-ம் தேதி ஜானகி முதல்வரானார். நெடுஞ்செழியனுக்கு இரண்டாவது முறையாக ஏமாற்றம். பதவியேற்ற 20வது நாளிலேயே பெரும்பான்மையை

நிரூபிக்க முடியாமல் ஜானகி ஆட்சி கவிழ்ந்தது.

ஜானகி

அதிசயம் 3 – ஜெயலலிதா பொதுச் செயலாளரானார்!

எம்.ஜி.ஆர் இருந்தபோது கட்சிக்குள் ஜெயலலிதாவுக்குப் பெரிய செல்வாக்கெல்லாம் இல்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆளுமை செலுத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் இடத்துக்கே வர விரும்பினார். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், முன்பு போலச் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார்.

முதல்வர் ஆசை நிறைவேறாத நிலையில், துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் ஜெயலலிதா. அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வலியுறுத்தினார்கள் ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்கள். ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.

ஜெயலலிதா – எம்.ஜி.ஆர்
ஜெயலலிதா - எம்.ஜி.ஆர்

இந்த நிலையில்தான் சென்னை கிண்டி கத்திபாராவில் நேருவுக்குச் சிலை திறப்பு விழாவுக்குத் தேதி குறித்திருந்தார்கள். சிலையை, பிரதமர் ராஜீவ்காந்திதான் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயலலிதாவையும் மேடையேற்றிவிட முயற்சிகள் நடந்தன. ‘நேரு சிலை திறப்பு விழாவில் என்னையும் சேர்க்க வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தினார். ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு தரவில்லை. நேரு சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்ற ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆரிடம் ‘Mr. MGR, You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as Deputy Chief Minister and take rest’ என்றார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கட்சியைக் கைப்பற்ற நினைத்த ஜெயலலிதாவின் எண்ணம் அப்போது ஈடேறவில்லை. கட்சி இரண்டாக உடைந்தது. 1989 தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் ஜானகி அணி ஓர் இடத்திலும் வென்றன. அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்குத்தான் செல்வாக்கு என்பதைத் தேர்தல் முடிவு சொல்லியது. ஜானகி ஒதுங்கிக் கொண்டார். இரண்டு அணிகளும் ஒன்றாகி இரட்டை இலைச் சின்னத்தை மீட்டன. கட்சி ஜெயலலிதா வசம் வந்தது.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

அதிசயம் 4 – பன்னீர்செல்வம் முதல்வரானார்!

டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அன்றைக்கு நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் அ.தி.மு.க வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு. எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?’ எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதனால் யார் என பிரபலமில்லாமல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென முதல்வரானார். சில மாதங்களிலேயே ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனபோது அவருக்கு வழிவிட்டார் பன்னீர்செல்வம்.

அதன்பின் சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பதவி இழக்க நேரிட்டபோது இரண்டாவது முறையாக முதல்வரானார் பன்னீர்செல்வம். அதுவும் சில மாதங்கள் தொடர்ந்தன.

ராமதாஸ்
ராமதாஸ்

அதிசயம் 5 – ராமதாஸ் அடித்த பல்டி!

`சேற்றில் விழுந்த பன்றி’ எனத் தன்னைத் திட்டியதற்காகவும் ‘பாபா’ படத்தை ஓடவிடாமல் செய்ததற்காகவும் ராமதாஸ் மீது கடும் கோபத்தில் இருந்தார் ரஜினி. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் தோற்கடிக்கக் களமிறங்கினார். ஆனால், வெற்றி பெறவில்லை. “வன்முறைகளின் ராஜா ராமதாஸ்” என அன்றைக்கு ராமதாஸுக்கு எதிராகக் கடுமையாக வாள் சுழற்றினார் ரஜினி. இருவருக்கும் இடையே பகை நீடித்தது. தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிராசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்தாகத் தகவல் வெளியானபோது, ‘‘அண்ணே… பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?’’, “இல்லப்பா… அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்’’ என ட்வீட் தட்டினார் ராமதாஸ்.

அவர்தான் சில நாட்களுக்கு முன்பு `கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்’ என சொன்னார். இதுகூட அதிசயம்தான்!

விஜயகாந்த்
விஜயகாந்த்

அதிசயம் 6: விஜயகாந்த் விஸ்வரூபம்!

2006 சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட தே.மு.தி.க குவித்த வாக்குகள் அதிர்வலையை ஏற்படுத்தின. 128 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியது. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயத்தை நிகழ்த்தியது. தே.மு.தி.க பெற்ற வாக்குகளால் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்துபோனது. இதனால் சொற்ப ஓட்டுகளில்தான் பலரும் ஜெயித்தார்கள். அ.தி.மு.க மீண்டும் அரியணையில் அமர முடியாமல் போனதற்கும் தி.மு.க-வுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கும் முக்கிய காரணமே விஜயகாந்த்தான்.

இந்த ஆட்டம் அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு பெரிய கூட்டணிகள் களத்தில் நிற்க… 40 தொகுதிகளில் தனித்து களமிறங்கி பட்டையைக் கிளப்பினார் விஜயகாந்த். பெரும்பாலான தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து, மூன்றாம் இடத்தைப் பிடித்தது தே.மு.தி.க. முந்தைய தேர்தலில் 27.64 லட்சம் ஓட்டுகளை அள்ளிய தே.மு.தி.க, இப்போது 31.26 லட்சம் ஓட்டுகளை அள்ளியது. 8.45 சதவிகித வாக்கு 10.08 ஆக உயர்ந்தது.

”அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது” என ரஜினி இப்போது சொல்கிறார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத களத்தில் குதிப்பதில் இல்லை அதிசயம். இரண்டு ஆளுமைகள் இருந்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் செய்த அதிசயத்தை நிகழ்த்தினார் விஜயகாந்த்.

அதிசயம் 7 – அழகிரி அமைச்சரானார்!

அழகிரி
அழகிரி

அரசியலில் நீண்ட அனுபவம் ஸ்டாலினுக்கு இருந்தது. ஆனால், அழகிரிக்குக் கிடையாது. மதுரை என்கிற வட்டத்துக்குள்ளேயே இருந்தார் அழகிரி. தி.மு.க ஆட்சியில் திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தபோது அழகிரி ஆளுகைக்குட்பட்ட திருமங்கலம் தொகுதியில் தி.மு.க ஜெயித்தது. அதன்பின் அழகிரிக்குப் பதவி தர வேண்டும் என்கிற கோஷங்கள் எழுந்தன. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் அழகிரி. அதன்பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டது மட்டுமல்ல… நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தையும் பேசாமல் ஐந்தாண்டுகளை அழகிரி கடந்தது எல்லாம் அதிசயம்தான். அழகிரி மத்திய அமைச்சர் ஆன நேரத்தில் தமிழகத்தில் ஸ்டாலின் அமைச்சராக இருந்தார். அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதால் ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்கினார் கருணாநிதி.

அதிசயம் 8 – எடப்பாடி முதல்வரானார்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

2001 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா இரண்டு முறை முதல்வர் பதவியை இழுந்த நேரத்தில், அடுத்த முதல்வர் சான்ஸ் பன்னீர்செல்வத்துக்குத்தான் வாய்த்தது. எடப்பாடி பழனிசாமியின் பெயர் பரிசீலனையில்கூட இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, முதல்வர் நாற்காலியில் அமர நினைத்தார் சசிகலா. உடனே பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க… கூவத்தூர் கூத்து அரங்கேறியது. சசிகலாவுக்குப் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் நேரம் வந்தபோது பலரும் ரேஸில் இருந்தார்கள். அதில் எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடித்தது

%d bloggers like this: