702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்!

ரோபோக்களை இனி சாதாரணமாக விட்டுவிட முடியாது. இப்போது மனிதர்கள் செய்யும் வேலைகள் பலவற்றை ரோபோக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. இன்னும் 10 ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களே அந்த வேலைகளைச் செய்துவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக

ஆய்வு முடிவு பொட்டில் அறைந்து தெரிவிக்கிறது. அதாவது சுமார் 702 வகை வேலைகள் காணாமல் போகும் என அந்த ஆய்வு சொல்கிறது! ஏற்கனவே ஜப்பானில் உள்ள பல ஹோட்டல்களில் வரவேற்பாளர், உதவியாளர், உணவக சர்வர்கள்… என மனிதர்கள் செய்யும் பணிகளை ரோபோக்களே செய்யத் தொடங்கிவிட்டன. சில உணவகங்களில் சமையலைக் கூட ரோபோக்களே செய்கின்றன. இதையே மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கினால் பலர் வேலை இழக்க நேரிடும்.  சென்னை போன்ற நகரங்களிலேயே பல ஷாப்பிங் மால்களில் தானியங்கி எந்திரங்கள் வந்துவிட்டன. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க இனி மனிதர்கள் தேவையில்லை. நீங்கள் எந்திரத்தில் வங்கி அட்டையிலோ ஸ்மார்ட்போனிலோ பணம் கட்டிவிட்டு சென்றுவிடலாம். டோல் பூத்களில் கூட பாஸ் டாக் என்னும் முறையில் சென்சார்கள் உதவியுடன் தானாக டோல் கட்டணத்தை எடுக்கத் தொடங்கிவிட்டன.
நம் கண் முன்னாலேயே சடசடவென ஆட்குறைப்பும் வேகமாக நடக்கிறது. பெங்களூரில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தானியங்கி போன் விற்கும் கியோஸ்க்குகளைத் திறந்துவிட்டன. நாம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்திருப்போம். குளிர்பானங்கள் அடுக்கி வைத்திருக்கும் ஒரு எந்திரத்தில் பணத்தைப் போட்டால் குளிர்பானத்தைத் தள்ளிவிடும். இதைத்தான் கியோஸ்க் என்கிறோம். இனி ஸ்மார்ட்போன் வாங்க உங்களுக்கு என்ன மாடல் வேண்டும் என்று உள்ளிட்டால் போதும். தொகையைக் காட்டும். பணம் செலுத்தினால் விரும்பிய ஸ்மார்ட்போனை பெட்டியில் இருந்து வெளியே தள்ளும். ஆக, இனி மெல்ல கடைகளில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். சென்னையில் உள்ள பல துரித உணவுக் கடைகளில் ஆர்டர் செய்ய மெஷின்கள் வந்துவிட்டன. இதுநாள் வரை வார இறுதி நாட்களில் இது போன்ற துரித உணவகங்களில் ஆர்டர் எடுக்க பார்ட் டைம் வேலை பார்க்கக் குவிந்த கல்லூரி மாணவர்கள் இனி என்ன செய்வது என விழிக்கிறார்கள். சென்னையில் மட்டும் சர்வர்கள் இல்லாமல் இயங்கும் தானியங்கி ரோபோ ஹோட்டல்கள் நான்கைந்து வந்துவிட்டன.
நீங்கள் உங்கள் டேபிளில் இருக்கும் சிறு டேப்லட்டில் ஆர்டர் செய்துவிட்டால் போதும். ரோபோக்கள் உங்கள் உணவை மேஜைக்குக் கொண்டுவந்துவிடும். சாப்பிட்டு முடிந்தபின் பில்லுக்கு காத்திருக்க வேன்டாம். அந்த டேப்லட்டிலேயே மின் பரிவர்த்தனை மூலம் பணம் கட்டிவிட்டு செல்லலாம். இப்படியாக, சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்கள், சர்வர்கள், டெலி காலர்கள், ரிசப்ஷனிஸ்ட்டுகள், கேஷியர்… என பல வேலைகளை இனி வருங்காலங்களில் கம்ப்யூட்டர்களும் ரோபோக்களுமே செய்யத் தொடங்கிவிடும். கடை விற்பனையை ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங் காலி செய்யத் தொடங்கிவிட்டது நாம் அறிந்ததுதான். பல கட்டண சேவைகள், உணவு ஆர்டர் என பல துறைகளும், ஸ்மார்ட்போன், வலைத்தளங்களிலேயே முடிந்துவிடுகின்றன. பயனாளர்களுக்கும் இது வசதியாக இருப்பதால் இதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் கடுகு முதல் கார் வரை வாங்கலாம் என்னும்போது எதற்கு கடைக்குச் செல்ல வேண்டும்..? இந்த நிலை கடைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தும். ஆக, கடைகளில் பணிபுரிபவர்களும் குறையத் தொடங்குவார்கள்! வங்கி சேவையையே எடுத்துக் கொள்வோம்.
பணம் எடுப்பது முதல் டெப்பாஸிட் செய்வது வரை அனைத்தையும் ஏடிஎம்மிலேயே செய்துவிட முடிகிறது. அப்படியிருக்க ஏன் வங்கிக்குச் செல்ல வேண்டும்? ஸ்மார்ட்போன் ஆப்களில் பல விதமான வங்கி சேவைகள் வேறு கிடைக்கின்றதே… எனவே,கால ஓட்டத்தில் வங்கிகள் இயங்குவதும் அதில் பணிபுரியும் பணியாளர்களும் குறையத் தொடங்குவார்கள். ஒருவேளை வங்கிகள் இயங்கினாலும் அங்கு பெயருக்கு ஒரு பணியாளர் மட்டுமே இருப்பார். ரோபோக்கள் மற்ற வேலையாட்களின் பணிகளைச் செய்துவிடும்! இப்படி நீண்ட பட்டியலுடன் வெளியாகி இருக்கிறது ஆக்ஸ்போர்டு ஆய்வு. அதாவது சுமார் 702 வேலைகள் இன்னும் பத்து ஆண்டுகளில் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடுமாம்! இந்நிலையில் “ரோபோக்கள் பல வேலைகளை அழிக்கப் போகின்றன. ஆனால், நம் சமூகம் அதற்கு இன்னும் தயாராகவில்லை…” என்று எச்சரிக்கிறது ‘கார்டியன்’ பத்திரிகையின் ஒரு செய்தி. 2018ம் ஆண்டு சுமார் 73 கோடி வேலைகளை தானியங்கி முறை (Automation) அழித்ததாக எச்சரிக்கிறது ‘யுஎஸ்ஏ டுடே’வின் ஒரு செய்தி.
ஏற்கனவே வேலை இல்லாதவர்களை சிலர் ஒன்று திரட்டி வருகிறார்கள். இனி ரோபோக்கள் மேலும் வேலைகளைத் திருடிக்கொண்டால், வேலையற்றவர்களை இன, மத, சாதிக் கலவரங்களுக்காகப் பயன்படுத்தி வேலையின்மை பிரச்னைகளில் இருந்து அவர்களை வலதுசாரி இயக்கங்கள் திசை திருப்பும் என எச்சரிக்கிறார்கள் சமூக பொருளாதார நிபுணர்கள். இதற்கிடையில் எந்த மாதிரியான வேலைகள் காணாமல் போகும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான வேலைகள் புதிதாக உருவாகும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடித்து பெருமூச்சு விடும்போது, அமெரிக்காவில் உள்ள ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை அலுவலகத்தில் ஒரு செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர் இரு கட்டுரைகளை எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பியிருக்கும் அல்லது இணையத்தில் பதிவேற்றி இருக்கும்!2018ம் ஆண்டு சுமார் 73 கோடி வேலைகளை தானியங்கி முறை (Automation) அழித்ததாக எச்சரிக்கிறது ‘யுஎஸ்ஏ டுடே’வின் ஒரு செய்தி.

%d bloggers like this: