அ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்!’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சிதான் காரணம் என ஆளும்கட்சியும் தங்களுக்குள் குறைகூறி வருகின்றனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், `உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

தி.மு.க தொடர்ந்துள்ள இந்த வழக்கை அ.தி.மு.க தரப்பில் விமர்சனம் செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் செய்வதற்காகவே தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க-வின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு நடத்தாமல் ஏதாவது சில காரணங்களைக் கூறிவருகிறது. தேர்தல் தொடர்பாக யாராவது நீதிமன்றத்துக்குச் செல்வார்கள், நீதிமன்றம் தடை விதித்துவிடும், எப்படியாவது தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க-தான் தேர்தலை நிறுத்துவதற்கான எல்லா சதித் திட்டங்களையும் தீட்டி அதற்கு வழிவகுத்துவிட்டு, ஏதோ தி.மு.க நீதிமன்றத்துக்குச் சென்று தேர்தலை நிறுத்த முயற்சி செய்வதாக முதல்வர் முதல் அமைச்சர் வரையில் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.

தேர்தல்

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க அரசு பெரும் குழப்பம் செய்துள்ளது.

1. உயர்நீதிமன்ற உத்தரவுபடி வார்டு மறுவரையறைப் பணிகளை அரசு இதுவரை செய்து முடிக்கவில்லை.

2. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறைப் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

3. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் செய்யவில்லை.

4. மாவட்டப் பஞ்சாயத்து இடஒதுக்கீடும் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை.

இதுமட்டுமல்லாது சில மாதங்களுக்கு முன்புவரை மேயர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறிவந்த அரசு, சமீபத்தில் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறி தொடர்ந்து குழப்பம் செய்துவருகிறது. யாராவது நீதிமன்றத்துக்குச் சென்றால் இந்தத் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று மட்டும்தான் அ.தி.மு.க அரசுக்கு உள்ளதே தவிர வேறு எண்ணம் இல்லை.

ஸ்டாலின்

சட்டப்படியாக அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று நம்புகிறோம். தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதில் தி.மு.க விழிப்புடன் உள்ளது. ஒருவேளை முறைப்படுத்தாமல் தேர்தல் நடத்தினாலும் அதைச் சந்திக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார் கொதிப்புடன்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க அரசு மீது தி.மு.க தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்கள்..!

%d bloggers like this: