ஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த `தில்’ இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என்று ஸ்டாலின் கேட்கிறார். அ.தி.மு.க-வுக்கு தில், திராணி, தெம்பு இருக்கிறது. தேர்தலை அறிவித்தால் அதைச் சந்திக்கும் துணிவும் இருக்கிறது. நீங்கள்தான் நொண்டிச்சாக்கு

சொல்லி தேர்தலை நிறுத்தப் பார்க்கிறீர்கள். எந்த நிலையிலும் உங்கள் முயற்சி பலிக்காது” என்று செங்கல்பட்டு மாவட்டத் தொடக்கவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை ஆளும் கட்சி நடத்த அச்சப்படுகிறது என்று சொல்லிவந்த தி.மு.க-வை இப்போது தனது வியூகத்தின் வலைக்குள் சிக்கவைத்துவிட்டார் எடப்பாடி என்கிறார்கள்.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. வேட்பு மனுத் தாக்கல்வரை சென்ற நேரத்தில் தி.மு.க தரப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வரையறை செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கினால் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடைவிதித்தது. பின்னர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குள் எழுந்த பூசல், தலைமையில்லாமல் நடந்த திண்டாட்டம் போன்றவற்றால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் என்கிற மனநிலையிலே இருந்தார்கள். இந்த நிலையில், தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றனர்.

அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அரசு தரப்பில் எப்போது தேர்தல் நடத்த இருக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கேட்டால் “பல காரணங்களைக் காட்டி, `தேர்தல் நடத்த இப்போது முடியாது’ என்று அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுவந்தது. குறிப்பாக வார்டு வரையறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகள் போன்றவற்றைக் காரணம் காட்டியே பல காலம் தேர்தலை ஒத்திவைத்தது. உயர்நீதிமன்றம் கடும் ஆட்சேபனை செய்தும் எதற்கும் கலங்காமல் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திப்போடும் வேலையைக் கச்சிதமாக செய்துவந்தது அ.தி.மு.க அரசு. தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கில் நீதிமன்றம் விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்று இறுதி உத்தரவும் பிறப்பித்தது. டிசம்பர் 13-க்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அதற்கு முன்பாகவே அ.தி.மு.க தரப்பில் தேர்தலை நடத்தும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், தி.மு.க தரப்பில் அந்த உற்சாகம் இல்லை. காரணம் இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், இப்போது தேர்தலைச் சந்திக்கும் மனநிலை பலரிடம் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளுங்கட்சி தயாரானபோதே அதை இப்போது நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தி.மு.க-தரப்பில் ஆராய்ந்துவந்தனர்.

இந்த விவரங்கள் ஆளும் கட்சிக்கு எட்டியது. அப்போது எடப்பாடி தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் “நமக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் முழுமையாக இல்லை. ஆனால், நீதிமன்றம் இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறது. மக்களிடம் நமது இமேஜ் இந்த விஷயத்தில் கெட்டுப்போய் உள்ளது. முதலில் தேர்தலுக்கான வேலைகளை நாம் ஆரம்பிப்போம். அதில் தி.மு.க-வுக்கு எந்த வகையில் குடைச்சல் கொடுக்கமுடியுமோ அந்த வேலைகளைச் செய்துவிடுவோம். அதற்குப் பிறகு நடப்பதைப் பாருங்கள்” என்று சொல்லியுள்ளார்.

அவரின் திட்டப்படியே நகராட்சித் தலைவர், மேயர் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்வுமுறைக்குப் பதிலாக மறைமுகத் தேர்வு முறையைக் கொண்டுவந்தார்கள். நேரடியாக மேயர் தேர்வு நடைபெற்றால் தி.மு.க-வுக்கு பல இடங்களில் சாதகமான முடிவு வந்துவிடும் என்று அ.தி.மு.க-வுக்குத் தெரியும். மறைமுகத் தேர்தல் என்றால் தி.மு.க உறுப்பினர்களையே அ.தி.மு.க தரப்பு விலைக்கு வாங்கிவிடும் என்ற அச்சம் தி.மு.க-வுக்குள் எழுந்தது.

மற்றொருபுறம் தேர்தலை தற்போது நிறுத்த சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தி.மு.க வழக்கறிஞரும் ராஜ்யசபா உறுப்பினருமான வில்சன் நடத்திய ஆலோசனை அ.தி.மு.க தரப்புக்கும் எட்டியது. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்கிற ரீதியில் எடப்பாடியும் காத்திருந்தார். மற்றொருபுறம் தேர்தல் எப்படியும் நடந்தே தீரும் என்று மேடைதோறும் முழங்க ஆரம்பித்தார். இது தி.மு.க தரப்பை பதற்றத்துகுள்ளாக்கும் வேலை என்பதை எடப்பாடி கணித்தார். ஆளும்கட்சி எதி்ர்பார்த்தது போலவே தி.மு.க இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது.

தி.மு.க தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானதுதான். குறிப்பாக ஐந்து மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான வார்டுகள் மறுவரை செய்யப்படவில்லை என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், அதை மாவட்ட வாரியாக அரசு தரப்பு நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது தேர்தல் தேதி அறிவிக்கும்போது எதற்காக நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க அதையும் தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாக பயன்படுத்த உள்ளது. தி.மு.க தரப்பு போட்ட மனுவினால் அ.தி.மு.க தரப்பின் பிரசாரம் இப்போது வேகம் எடுத்துள்ளது.

“நாங்கள் தேர்தல் நடத்தத் தயாராக இருந்தோம். ஆனால், அதை எதிர்கொள்ளமுடியாமல் தி.மு.க தேர்தலுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லை என்று இத்தனை காலம் எங்களைத் தூற்றி வந்தவர்களே இப்போது வழக்கு போட்டுள்ளார்கள் ” என்று பிரசாரம் செய்ய உள்ளது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதை உணர்ந்துதான் “நாங்கள் எதற்காக வழக்கு போட்டோம் என்று பலரும் புரியாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வரைமுறை இல்லாமல் இந்த தேர்தலை நடத்த முயல்கிறது ஆளும்தரப்பு. புதிய மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டுகள் மறுவரை செய்யப்பட வில்லை; புதியதாக துவக்கியுள்ள மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சிப் பகுதிகள் வரையறை செய்யப்படவில்லை; பெண்களுக்காக இடஒதுக்கீடு தொகுதிகள் விவரம் முழுமைப்படுத்தவில்லை… இதையெல்லாம் சரிசெய்யச் சொல்லித்தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். ஆனால், நாங்கள் வேண்டுமென்றே தேர்தலை நிறுத்த நீதிமன்றம் சென்றதாக ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டது அ.தி.மு.க!” என்று தொடர்ந்து பேசிவருகிறார்.

உச்சநீதிமன்றத்தில் தி.மு.க தாக்கல் செய்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் சொல்லியுள்ளார்கள். ஆனால், வரும் திங்கள் கிழமை மீண்டும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வாதாட இரு்க்கிறது தி.மு.க. இந்த அவசரத்தைத்தான் எடப்பாடி ரசிக்க ஆரம்பித்துள்ளார். “எங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கட்சிக்குள் உள்ள குழப்பத்தில் தேர்தல் நடத்தி இன்னும் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்ற நிலையே இருக்கிறது. ஆனால், தேர்தல் நிற்க வேண்டும், அது நம்மால் நின்றதாக இருக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் தி.மு.கவே பலியை சுமந்து கொள்ளட்டும்” என்று எடப்பாடி வகுத்த வியூகம் இப்போது தி.மு.க-வுக்கு எதிராக மாறிவிட்டது.

“நாங்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்துதான் நீதிமன்றம் சென்றோம். ஆனால், அதை எங்களுக்கு எதிராகவே அ.தி.மு.க தரப்பு மாற்றிவிட்டது” என்று கவலைப்படுகிறார்கள் தி.மு.க-வினர்.

அதேசமயம் இரண்டு கட்சிகளும் பேசி வைத்துக்கொண்டுதான் இப்படி செயல்படுவதாக அரசியல்வட்டாரங்களில் அலையடிக்கும் தகவலையும் ஒதுக்கித்தள்ளுவதற்கில்லை. அதற்கும் வலுவான காரணங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

%d bloggers like this: