சதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்!

எல்லா வயது பெண்களுக்கும், பொதுவான பிரச்னையாகிவிட்ட, சதைக் கட்டிகளுக்கு என்ன காரணம்?
கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது.ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
தெரிந்த காரணங்கள் எவை?

குழந்தை பருவத்தில் இருந்தே, நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதே, சதைக்கட்டிகள் ஏற்பட காரணம். கடந்த, 10 ஆண்டுகளில், உணவு பழக்கமே, வெகுவாக மாறி விட்டது. கேக், வெண்ணெய், பிஸ்கட், ஐஸ்கிரீம் என, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு, கர்ப்பப்பையில் சதைக் கட்டிகள், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் என, வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் பல உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இது தவிர, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, நடக்காமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது, கூடுமான வரை நடப்பதைத் தவிர்ப்பது, உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் இல்லாமல் இருப்பது, இவையும் வேறு சில காரணங்கள். முப்பது ஆண்டுகளாகவே, பெண்களிடம் நான் பார்க்கும் குறைகள், மூன்று. கருக்குழாய்களில், இரண்டில் ஒன்றில் அடைப்பு, கர்ப்பப்பை கட்டிகள், சீரற்ற மாதவிலக்கு.
சதைக் கட்டிகளை உணவு மூலமாக சரிசெய்ய முடியுமா?
சதைக் கட்டிகள், 1 செ.மீ., 2 செ.மீ., இருக்கும் போதே, அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அறுவை சிகிச்சை செய்த நான்கைந்து மாதங்களில், மீண்டும், 4 – 5 சென்டிமீட்டர் என, வளர்ந்து விடுகிறது. வெட்ட வெட்ட வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தான், இதனுடைய தன்மை. அதே நேரத்தில், உணவு பழக்கம் உட்பட, வாழ்க்கை முறை மாற்றத்தினால், குறைக்க குறைக்க குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உணவு முறையில் என்ன மாற்றத்தைக் பின்பற்ற வேண்டும்?
சதைக் கட்டிகளுக்காக, குழந்தையின்மைக்காக மட்டுமல்ல, உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கவும், உயரத்திற்கு ஏற்ப, உடல் எடையுடன் இருக்க வேண்டும். 30 – 35 வயதில், சரியான உடல் எடையுடன் இருந்தால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பல வேண்டாத பிரச்னைகளை தவிர்க்கலாம். காலை உணவில், எண்ணெயில் பொரித்த வடைகள், தேங்காய் சட்னி, மட்டன் குருமா என்று கொழுப்பு நிறைந்த உணவாக இல்லாமல், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று சாப்பிட வேண்டும்.
இட்லிக்கும், தோசைக்கும் ஒரே மாவு தான் என்றாலும், தோசை சில நிமிடங்களே கல்லில் வேகிறது. எனவே, செரிமான சக்தி இதற்கு குறைவு. இட்லி, 10 – 15 நிமிடங்கள் ஆவியில் வேகிறது. இது எளிதில் செரிக்கும்; எடையும் போடாது; பசியும் அடங்கும். இதற்கு, மல்லி தழை, வெங்காயம், பொட்டுக் கடலை, விரும்பினால் சிறிய துண்டு தேங்காய் வைத்து சட்னி செய்யலாம். மதிய உணவில், கண்டிப்பாக ஏதாவது ஒரு வகை கீரை இருக்க வேண்டும். எத்தனையோ வகை கீரைகள் உள்ளன. முருங்கைக் கீரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடலாம்; இரும்பு சத்து அதிகம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எவை?
கறிவேப்பிலையில், இரும்பு, நார்ச்சத்து இரண்டும் உள்ளன. வாழைத் தண்டு, பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால், வழவழப்பான பாத்திரத்தை நார் போட்டு தேய்த்தால், எப்படி சுத்தமாகுமோ, அதைப் போன்று, வயிற்றை சுத்தம் செய்யும். மலச்சிக்கல் உட்பட தேவையற்ற கழிவுகள் சரியாகும். மிளகு, சீரகம், பூண்டு, தனியா, கட்டிப் பெருங்காயம், இஞ்சி சேர்த்து, ரசம் வைத்து சாப்பிடலாம். இவை அனைத்திலும் நார்ச்சத்து அதிகம்.சதைக் கட்டிகள் மட்டுமல்ல, தற்போது, 60 சதவீத பெண்களுக்கு இருக்கும் நீர்க்கட்டிகள் கூட சரியாகும்.
வாரத்திற்கு ஓரிரு நாட்கள், குறைந்த அளவு கொள்ளு சேர்த்துக் கொள்ளலாம். அதிகம் போட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதால், சிறிதளவு பயன்படுத்தலாம். இது சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் திறன் கொண்டது; எடையும் குறையும்.
பெரிய கட்டிகளுக்கும் பலன் தருமா?
உடல் எடை குறைவாக இருந்தால், உணவிலேயே சதைக் கட்டிகளை சரிசெய்யலாம். சற்று அதிக உடல் எடையுடன் இருப்போருக்கு, மருந்துகளுடன் உணவு கட்டுப்பாடும் தேவைப்படும். மருந்து சாப்பிட்ட அடுத்த வாரமே சரியாகுமா என்றால், இல்லை. குறைந்தது, ஆறு மாதங்களாவது சாப்பிட வேண்டும். இது ஏதோ சரி செய்யவே முடியாத கட்டி என்றெல்லாம் பயப்பட தேவையில்லை.
– டாக்டர் வி.ஜமுனா, சித்த மருத்துவர், கார்த்திக் மருத்துவமனை, சென்னை
044 – 2241 8424, 94980 01920

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: