அடுத்தடுத்து அதிரடி: கச்சிதமாக காய் நகர்த்தும் ஆளும் கட்சி!

அ.தி.மு.க., தலைமை யின் அதிரடி நடவடிக்கை, அனைத்து கட்சியினரையும், திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆளும் கட்சியின் வியூகத்தை, எப்படி எதிர்கொள்வது

என தெரியாமல், எதிர்க்கட்சியினர் தவித்து வருகின்றனர்.முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்றபோது, ‘அவரது ஆட்சி சில வாரங்களில் கவிழ்ந்து விடும்; சில மாதங்களில் கவிழ்ந்து விடும்’ என, எதிர்க்கட்சிகள் பேசின. அனைத்தையும் பொய்யாக்கி, தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறார். கட்சியில், இரட்டை தலைமை உருவானதும், முடிவுகள் எடுப்பதில், சிரமங்கள் ஏற்பட்டாலும், கட்சியை கட்டுக்கோப்போடு வழிநடத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய கூட்டணியை, அ.தி.மு.க., தலைமை கட்டமைத்தது.கடும் போட்டி எனினும், தேனி தொகுதியில் மட்டும், வெற்றி கிடைத்தது. மற்ற தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது, அ.தி.மு.க., தலைமைக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதுகுறித்து கவலைப்படாமல், தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

அடுத்து, வேலுார் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும் என, அனைவரும் கூறினர்; அதை பொய்யாக்கியது, அ.தி.மு.க., தலைமை. அந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், மூன்றில், அ.தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்று, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி கள் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, அ.தி.மு.க.,வினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. தி.மு.க., கூட்டணி, தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தயங்குகிறது என்ற பிரசாரம் செய்தது.

அதை உடைக்க, அ.தி.மு.க., முடிவு செய்தது.அதன்படி, உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.உள்ளாட்சி தேர்தல் வரப்போகும் தகவல் வெளியானதும், அ.தி.மு.க.,வில், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் என, அனைவரும் போட்டிக்கு ஆயத்தமாகினர்.கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., தலைமையை மிரட்டி, அதிக அளவில், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை பெற விரும்பின. அவர்கள் கனவை தகர்க்க, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து, மறைமுக தேர்தல் வழியே, அவர்களை தேர்வு செய்ய, அவசர சட்டம் பிறப்பித்தனர். அதிர்ச்சி இதனால், கூட்டணி கட்சிகள், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல, முன்னாள் அமைச்சர்கள், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவானது. இதை, சிலர் விரும்பாததால், பல இடங்களில் போட்டி தவிர்க்கப்பட்டது. புதிதாக, ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில், வார்டு வரையறை செய்யப்படவில்லை.

அனைத்து தரப்பு மக்கள் ஓட்டையும் பெற, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அந்த திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.இதை எதிர்த்தால், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், எதிர்க்கட்சிகள் மவுனம் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவித்தது. அ.தி.மு.க., தலைமையின் அடுத்தடுத்த நடவடிக்கை, அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி கவுன்சிலர் மற்றும் தலைவர் பதவிக்கு, கட்சி அடிப்படையில், தேர்தல் நடக்கப் போவதில்லை. எனவே, அதில் யார் வெற்றி பெற்றாலும் பாதிப்பில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும். எனவே, அதில் கவனம் செலுத்தி, அதிக இடங்களைப் பெற, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் என்ன முடிவெடுப்பது என தெரியாமல், தவித்து வருகின்றன.-

%d bloggers like this: