உள்ளாட்சி ரேஸ் – சாமி ² வியூகம்! – எடப்பாடி ரெடி… எதிர்க்கட்சிகளுக்கு வெடி!

அ.தி.மு.க திட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான்.

செம்மொழிப் பூங்காவில் நமக்காகக் காத்திருந்தார் கழுகார். வாக்கிங் சென்றபடியே பேச ஆரம்பித்தோம். ‘‘உள்ளாட்சித் தேர்தலை ஒருவழியாக அறிவித்து விட்டார்களே?’’ என்று நாம் கேட்டதும் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘தமிழக அரசியல் வரலாற்றி லேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் இத்தனை குழப்பங்கள், குளறுபடிகள் எப்போதுமே இருந்த தில்லை. கிராமங் களுக்கும் நகரங்களுக் கும் தனித்தனியாக தேர்தல் நடத்து வார்கள் என எல்லோரும் நினைத்திருக்க, கிராம ஊராட்சிகளுக்கான தேர்தலையே இரண்டு கட்டங்களாக அறிவித்துவிட்டார்கள். இதுதவிர, பாக்கி இருக்கும் நகராட்சி, பேரூராட்சி களுக்கு ஒருகட்டமாகவும், மாநகராட்சிகளுக்கு மட்டும் ஒருகட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.’’

‘‘இதனால் என்ன பிரச்னை?’’

வைட்டமின் ‘ப’ இருக்க கவலை எதற்கு என்றிருக்கி றார்கள். அதையும்விட முதல்வர் பழனிசாமி, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆகிய ‘சாமி ஸ்கொயர்’களின் வியூகத்தில் ஈஸியாக ஜெயித்துவிடலாம் என நினைக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இந்தத் தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள அச்சப்படுவதும் இதனால்தான்.’’

‘‘வைட்டமின் ‘ப’ மட்டும்தான் வியூகமா?’’

‘‘அதுதான் துருப்புச்சீட்டு. பொங்கல் பரிசு 1,000 ரூபாய் தருவதற்குத் தடையில்லை என்று சொல்லிவிட்டார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி. அடுத்ததாக, `ஓட்டுக்கு பிங்க் கலர் பெரிய நோட்டை இறக்கத் தயாராகிவிட்டது ஆளுங்கட்சி!’ என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சுகள் பரபரப்பாகச் சுழல்கின்றன. மாவட்டங்களில் நடக்கும் வேலைகளுக்கான டெண்டர்கள்மூலம் கிடைக்கும் ‘கமிஷனை’ வைத்துதான் கட்சிக்கு நிதி கிடைக்கும். மேலிடத் திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்போது தேர்தல் முடியும் வரை மாவட்டங் களுக்கு நேரடியாகவே சென்று சேரும்படி ஏற்பாடு செய்துள்ளார்களாம். அதனால், இந்தத் தேர்தலில் வைட்டமின் ‘ப’ தாராளமாகப் புழங்கும் என்கிறார்கள். பொங்கல் பரிசு 1,000 ரூபாய் மற்றும் பிங்க் கலர் பெரிய நோட்டு இரண்டையும் வைத்து ஜெயிக்கலாம் என நம்புகிறார்கள்.’’

‘‘இதெல்லாம் யாருடைய ஏற்பாடு?’’

‘‘எல்லாம் பசையான அமைச்சர் ஒருவரின் திட்டம் என்கிறார்கள். இதையெல்லாம் அறிந்து தான் எப்பாடுபட்டாவது தேர்தலை நிறுத்தியாக வேண்டும் என்று தி.மு.க தீவிரமாக இருக்கிறது. சகல வித்தைகளையும் ஆளுங்கட்சி களமிறக்கும் என்பதால், தி.மு.க தரப்பு பதற்றத்தில் இருக்கிறது. ‘உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி வரும். நிறைய வேலை நடக்கும். ஊரக உள்ளாட்சிகளின் அ.தி.மு.க மக்கள் பிரதிநிதி களிடம் தாராளமாக காசு புழங்கும். அதைவைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலையும் ‘தெம்பாக’ எதிர்கொள்ள முடியும் என்பது அ.தி.மு.க தலைமையின் எண்ணம்.’’

‘‘தி.மு.க ரியாக்‌ஷன் என்னவோ?’’

‘‘ `ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டுமே வார்டுகளை மறுவரையறை செய்யச் சொல்லி யிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதேபோன்று அனைத்து மாவட்டங்களுக்கும் மறுவரையறை செய்த பிறகு தேர்தலை நடத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தை அணுகினால் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும்’ என்று ஸ்டாலினிடம் சட்டத்துறை அணியினர் சொல்லியிருக்கிறார்கள். இதன் பிறகே அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.’’

பிறகு எதற்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினாராம் ஸ்டாலின்?’’

“முன்னதாக டிசம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டத்துறை அணியினர் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, புதிய தேர்தல் அட்டவணை டிசம்பர் 9-ம் தேதிதான் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக நாம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, நீதிமன்றத்துக்குச் செல்வதைவைத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிடலாம் என நினைத்தார் ஸ்டாலின். ஆனால், அரசுத் தரப்பு இவர்களை முந்திக்கொண்டு டிசம்பர் 7-ம் தேதியே தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது. ஆனாலும், அறிவித்தபடி 8-ம் தேதி ஜெகத்ரட்சகனின் ஹோட்டலில் கூட்டம் நடந்திருக்கிறது.’’

‘‘கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்?’’

‘‘காரசாரமான விவாதமே நடந்திருக்கிறது. சில மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் சிலரும் பேசியிருக்கிறார்கள். கே.என்.நேரு பேசும்போது, ‘கட்சிக்காரன் பணத்தைச் செலவு செய்யத் தயாரா இருக்கான். ஆனா, தேர்தல் நேர்மையா நடக்காமப்போனா இருக்கிற காசையும் இழந்துட்டுப் போக முடியுமா?’ என்று ஆரம்பித்திருக்கிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ், ‘தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு அடிமையா இருக்கு. நாம் நீதிமன்றத்தை நம்பியிருக்கோம். இந்த நிலையில் இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும்?’ என்று கேட்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தின் ஹைலைட்டே சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் பேச்சுதானாம்.’’

`‘அப்படி என்ன பேசினாராம் அன்பு?’’

அவர், ‘மாவட்டவாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தினீர்களே… என்ன நடவடிக்கை எடுத்தீங்க? நீங்களே பல நிர்வாகிகளைச் சந்தித்து கருத்து கேட்டீங்க. அதுவும் கிடப்புல இருக்கு. விக்கிரவாண்டி, நாங்குநேரித் தொகுதியில நாமதான் ஜெயிப்போம்னு இதே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல எல்லோரும் சொன்னாங்க. தோத்ததுக்கு அப்புறம் எதனால தோல்வினுகூட விசாரிக்கல. ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள்ல தோல்வி குறித்து ஆராய குழு அமைச்சீங்க. அந்தக் குழுவின் விசாரணை முடிவு என்ன ஆச்சு?’ என்று வரிசையாகக் கேட்டிருக்கிறார். விக்கிரவாண்டி விஷயத்தைப் பேசியதும் பொன்முடி ரொம்பவே இறுக்கமாகி விட்டாராம்.’’

‘‘ம்!’’

‘‘அத்துடன், ‘நம்மகூட கூட்டணியில இருந்துட்டே ஆளுங்கட்சியோடு தொடர்புல இருக்காங்க’ என்று திருமாவளவன் – எடப்பாடி சந்திப்பை மனதில்வைத்து அன்பழகன் பேச… ஸ்டாலின் குறுக்கிட்டு, ‘கூட்டணிக் கட்சியை ஏன் சொல்றீங்க? நம்ம கட்சியினரே தொடர்புல இருக்காங்க’ என்று கோபப்பட்டாரம். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘யார் யாரெல்லாம், யார் யாரோடு தொடர்புல இருக்கீங்கன்னு தெரியும். இதுவரைக்கும் எப்படியோ, இனிமே மாறிக்கோங்க’ என்று எச்சரிக்கவும் செய்தாராம்.’’

‘‘தி.மு.க-வினரோடு பலர் தொடர்பில் இருக்கின்றனர் என்று அ.தி.மு.க பொதுக்குழுவிலும் பேசினார்களே?’’

‘‘ஆமாம்… கட்சியின் துணை ஒருங்கிணைப் பாளர் முனுசாமியும் இதே குற்றச்சாட்டைத்தான் சொன்னார். இப்போது தி.மு.க தலைவரும் அதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.’’

‘‘ப.சிதம்பரம், சீற்றத்தில் இருக்கிறார் போலிருக்கிறதே?’’

‘‘ஆமாம்… ‘என்னை மிரட்டி விலைக்கு வாங்க முடியாது. நான் இனிதான் வேகமாக எழுதப் போகிறேன்; பேசப்போகிறேன். சோனியாவின் ஆலோசனைப்படிதான் இனி மூவ் இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சோனியாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். சோனியா வீட்டிலிருந்து வெளியே வரும்போது ஒரு ஃபைல் சிதம்பரம் கையில் இருந்துள்ளது.’’

‘‘அது என்ன ஃபைலாம்?’’

‘‘வொர்க் ஷீட் என்கிறார்கள். காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா இருந்தாலும், அவரால் செயல்பட முடியாத அளவுக்கு உடல்நிலை இருக்கிறது. அதனால், சில பணிகளை சிதம்பரத்தை வைத்து முடிக்க நினைக்கிறார். தன்னிடம் உள்ள இடைக்காலத் தலைவர் பதவியையும் சிதம்பரத்திடம் வழங்கி, நாடு முழுவதும் சுற்றவைக்கலாம் என்று சோனியா திட்டமிடுகிறாராம். சிதம்பரத்தின் ஆக்ரோஷம் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பலன் தரும் என்று சோனியா நினைக்கிறாராம்.’’

%d bloggers like this: