பலரின் `மதிப்பீடு’களை அதிரடிகளால் எடப்பாடி பழனிசாமி `அடக்கியது’ எப்படி?

ஒரு முதல்வராக ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் இல்லாதவர்; அவரால் அரசுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள முடியாது’ என்றுதான் ஆரம்பத்தில் பலரும் எடப்பாடி

பழனிசாமியை மதிப்பீடு செய்தனர். ஆனால், அடுத்தடுத்து வெடித்துவரும் போராட்டங்களை அதிரடி காட்டி அடக்கி ஒடுக்குவதோடு, ‘இந்தியாவிலேயே அதிக போராட்டங்களைச் சந்தித்த முதல்வர் நான்தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் மற்றவர்களைவிட எனக்கு தெம்பு அதிகம்’ என்று பன்ச் வேறு பேசி சலம்பிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017 பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின்வசம் வந்துசேர்ந்தது முதல்வர் நாற்காலி.பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், எட்டுவழிச்சாலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, அரசு ஊழியர்கள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு மருத்துவர்கள் என்று பல தரப்பட்ட போராட்டங்கள் இங்கே எழுந்தன. அத்தனையையும் ஒடுக்கி, அனைவரையும் குமுறவைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு நடுவே இந்த ஆட்சியில் வெற்றிபெற்ற ஒரே போராட்டம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் போராட்டமே! பெரும்பான்மையான மக்கள் தினம் தினம் பயன்படுத்துவது அரசுப் பேருந்துகளைத்தான். அவை முடக்கப்பட்டதால் மக்களின் கோபம் அரசாங்கத்தின்மீது திரும்பியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

பொதுவாகவே போராட்டங்கள் எதுவுமே மக்களின் கவனத்தை ஈர்க்காததோடு, ‘அரசாங்கத்தின் நடவடிக்கை சரியே’ என்ற பேச்சுகளை எழவைத்திருப்பது பரிதாபமே!

‘ஆசிரியர் – வட்டித்தொழில் செய்கிறவர்; அரசு ஊழியர் – கையூட்டு வாங்குகிறவர்; அரசு மருத்துவர் – நேரத்துக்கு வராமல் தனியார் மருத்துவமனையில் வேலைபார்ப்பவர்’ இதுபோன்ற அபிப்பிராயங்கள் மக்களின் மனதில் ஆழப்பதிந்திருப்பதுதான் அதற்கு முக்கிய காரணம். இதுதான் போராட்டக்காரர்களின் மிகப்பெரிய பலவீனம். அதைப் பயன்படுத்தி போராட்டங்களை எளிதாக ஒடுக்குகிறார்கள் ஆட்சியாளர்கள்.

இதுவே, ‘மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக மக்கள் பணத்தில் இருந்துதான் நமக்கு ஊதியமே வழங்கப்படுகிறது’ என்ற உண்மையை உணர்ந்து, ‘நாம் மக்களோடு மக்களாக இருப்போம்’ என்று சேவையாற்றுவதில் அனைத்து ஊழியர்களுமே கவனமாக இருந்தால், நிச்சயம் அவர்களுடைய போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு இருந்திருக்கும்; போராட்டங்களும் வென்றிருக்கும்.

‘எங்கள் மாவட்டத்தைவிட்டு அந்த கலெக்டரை மாற்றாதே’, ‘எங்கள் ஊரிலிருந்து அந்த ஆசிரியரை மாற்றாதே’ என்றெல்லாம் அத்திப்பூத்தாற்போல் மக்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள்தான் இதற்கு சாட்சி!

இந்தியாவிலேயே போராட்டங்கள் அதிகமாக நடப்பது தமிழ்நாட்டில்தான் என்ற நிலை, கடந்த ஆண்டு வரை இருந்தது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் அந்தளவுக்குப் போராட்டங்கள் நடைபெறவில்லை. காரணம், போராட்டங்களுக்கு அனுமதியே அளிக்கப்படுவதில்லை என்பதுதான். மீறிப் போராடுபவர்கள்மீது புதிது புதிதாக வழக்குகள் பதிவதோடு, பழைய வழக்குகளையும் தோண்டியெடுக்கிறார்கள். அனுமதி வாங்கி நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீதுகூட வழக்கு போடுகிறார்கள். இதுபோன்ற காரணங்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறைந்துவருகிறது.

%d bloggers like this: