எதையும் சொல்வதில்லை; ஓரம்கட்டுகின்றனர்!’ -கலங்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்குக்கூட ஓ.பி.எஸ்ஸுக்கு சரிவர அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்ற தகவல் கோட்டை வட்டாரத்தில் வலம் வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட உள்ள சீட் விவரங்களை விரைவில் மாவட்டப் பொறுப்பாளர்களே அறிவிக்கும்படி, முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வரை சந்தித்துக் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை. காரணம், முறையான அழைப்பு கொடுக்கப்படவில்லையென்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பேசினோம். “கழகத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு சிலர் செயல்படுகின்றனர். ஓ.பி.எஸ் தரப்பைத் தனிமைப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.

தற்போது கூட்டணிக் கட்சிகள் விவகாரத்தில்கூட யார் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதைக்கூட துணை முதல்வரான ஓ.பி.எஸ்-ஸிடம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியபோது அமைச்சர் பாண்டியராஜனைத் தவிர, வேறு எந்த அமைச்சர்களும் விமான நிலையத்துக்குச் செல்லவில்லை. ஆனால், 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் துணை முதல்வர் வீட்டுக்குச் சென்று பயணம் குறித்து நீண்டநேரமாக விவாதித்திருக்கிறார்கள். அதேநேரம், வெளிநாட்டிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது மொத்த அமைச்சர்களும் அவரை வரவேற்கப்போனார்கள்.

கடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில்கூட அமைச்சர் தங்கமணி ஓ.பி.எஸ்-ஸின் பெயரைக் குறிப்பிடாமல் பேசி முடித்தார். அதன் பிறகு, வந்த கே.முனுசாமி, ` ஓ.பி.எஸ் இந்தக் கட்சியில் இல்லையா. ஏன் அவர் பெயரை முழுமையாகச் சொல்ல மறுக்கிறீர்கள். முதல்வர், துணை முதல்வர் இருவரையும் முன்னிலைப்படுத்துங்கள். அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற முடியும்’ எனப் பேசினார். தற்போதுகூட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொகுதிப் பங்கீடு குறித்து ஓ.பி.எஸ்-ஸுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம்.

அதனால்தான் அவர் இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில்கூட கலந்துகொள்ளவில்லை. ஓ.பி.எஸ்-ஸை நம்பிச் சென்றவர்களுக்குப் பெரிதாக எந்தக் காரியமும் நடக்கவில்லை என்ற பிம்பத்தையும் தொண்டர்கள் மத்தியில் பதிய வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சொல்லப்போனால், துணை முதல்வரைப் படிப்படியாக ஓரம்கட்டும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன” என ஆதங்கப்படுகின்றனர்.

%d bloggers like this: