ஒரு பொதுத்துறை வங்கி `திவால்’ ஆகுமா? – பதறவைக்கும் சந்தேகமும் விளக்கமும்

1. முதன்மை வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி), 2. பொதுத்துறை வங்கிகள் 3. தனியார் வணிக வங்கிகள் 4. கூட்டுறவு வங்கிகள் 5. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non Banking Financial Combanies – NBFC)…

இவைஅனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளவை. அந்தக் கண்காணிப்பின் ஒருபகுதியாகச் செயல்பட்டுவருவதுதான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் மற்றும் நாணய உத்தரவாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation).

இந்த அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பு. இதுதான் ‘டெபாசிட் இன்ஷூரன்ஸ்’… அதாவது, மேற்கண்ட வங்கிகளில் ஏதேனும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும்பட்சத்தில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கும்.

ஒரு குறிப்பிட்ட வங்கியில், ஒருவர் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் என வெவ்வேறு வகையான கணக்குகளில் பணம் வைத்திருக்கலாம். அந்த வங்கி நிதி நெருக்கடியால் முடங்கிப் போனால், மேற்கண்ட கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் தொகை அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே.

ஒரு வங்கியின் பல கிளைகளில் கணக்குகளை வைத்திருந்தாலும், டெபாசிட் மற்றும் அதற்கான வட்டி உட்பட அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்கு இன்ஷூரன்ஸ் இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். வாடிக்கையாளர், வங்கிக்கு ஏதேனும் தொகை செலுத்தவேண்டியிருந்தால் அது இழப்பீடாகக் கிடைக்கும் ரூ.1 லட்சம் ரூபாயிலிருந்து கழிக்கப்படும். வேறொரு வங்கியில் அதே வாடிக்கையாளருக்கு கணக்கு இருந்தால், அந்தத் தொகை பாதிக்கப்படாது. மேற்கண்ட இன்ஷூரன்ஸ் தொகையை வழங்குவதற்காக டெபாசிட் இன்ஷூரன்ஸ் அமைப்பு, வங்கிகளிடமிருந்து பிரீமியம் வசூலிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் பிரீமியத் தொகை பத்து பைசா (0.001%).

‘இந்த பிரீமியம் தொகையைப் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து வசூலிக்க வேண்டுமா?’ என்பது இப்போது எழுந்துள்ள கேள்வி.

வங்கிகள் அனைத்தும் தனியார் வசமிருந்த நிலையில் தொடங்கப்பட்டது டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டம். தொடங்கப்பட்டது முதல் இதுவரை 27 வணிக வங்கிகளுக்கும், 351 கூட்டுறவு வங்கிகளுக்கும் மட்டுமே டெபாசிட் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட எந்தப் பொதுத்துறை வங்கிக்கும் இதுவரை டெபாசிட் இழப்பீடு வழங்கப்படவில்லை; வழங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பொதுத்துறை வங்கிக்கு நிதி நெருக்கடி என்றால், மத்திய அரசு நிதி உதவி செய்யும். எந்த ஓர் அரசும் தன் பொறுப்பிலுள்ள வங்கியை ‘திவால்’ என அறிவிக்காது. எனவே, ‘பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பிரீமியம் வசூலித்து, நிதி நெருக்கடியில் சிக்கும் கூட்டுறவு வங்கிகளுக்குத் தர வேண்டுமா?’ என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகிறார்கள்.

பொதுத்துறை வங்கிக்கு நிதி நெருக்கடி என்றால், மத்திய அரசு நிதி உதவி செய்யும். எந்த ஓர் அரசும் தன் பொறுப்பிலுள்ள வங்கியை ‘திவால்’ என அறிவிக்காது.

வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் என்பது 26 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகை இனி உயர்த்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் ரூ.1 லட்சம் இழப்பீடு, இனிவரும் காலத்தில் ரூ.5 லட்சமாகக்கூட உயரலாம்.

விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதில் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கத்தான் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் இழப்பீடு இப்போது குறைவாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் அது உயரலாம். இன்ஷூரன்ஸ் எடுத்தாலே நமக்கு விபத்து நேர்ந்துவிடும்; எனவே, நடப்பதோ, வண்டி ஓட்டுவதோ கூடாது என்று எதையும் செய்யாமல் இருக்க நினைப்பது அறியாமை. அதுபோலத்தான், இன்ஷூரன்ஸ் தொகை குறைவு என்று பயந்து, பொதுத்துறை வங்கிகளிலிருந்தும் பணத்தை எடுப்பதும். வங்கிகள் திவாலாவதற்கு வாய்ப்பில்லை எனும்போது, அதில் நம் பணத்தை அச்சமின்றி வைத்திருக்கலாமே!

%d bloggers like this: