எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சசிகலா அ.தி.மு.க உறுப்பினரில்லை… ஏன், என்ன நடந்தது?

அக்கா கோட்டைக்குக் கிளம்பிட்டீங்களா… மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்” என அனுதினமும் கேட்டுக் கொண்டிருந்த சசிகலாவை திடீரென போயஸ் கார்டனை விட்டே ஜெயலலிதா கிளம்பச் சொன்ன தினம் இன்று!

ஜெயா டிவி-யில் எக்ஸ்க்ளூசிவ் நியூஸ் எல்லாம் வெளியாவதில்லை. ஆனால், எல்லா மீடியா அலுவலங்களிலும் ஜெயா சேனல் டிவி-யில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படிதான் 2011 டிசம்பர் 19-ம் தேதியும் ஓடிக்கொண்டிருந்த ஜெயா டிவி-யில், `ஃபிளாஷ் நியூஸ்’ என்ற டைட்டிலோடு `சசிகலா அ.இ.அ.தி.மு.க-விலிருந்து நீக்கம். நடராஜன் உள்ளிட்ட 14 உறவினர்கள் மீது நடவடிக்கை’ என ஸ்க்ரோலிங் ஓடியது. அதன் பிறகுதான் சசிகலா கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்ட செய்தி பட்டிதொட்டியெங்கும் பரவியது.

“1. சசிகலா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

2. எம்.நடராஜன்

3. திவாகரன் (சசிகலா தம்பி)

4. டி.டி.வி.தினகரன் (சசிகலாவின் அக்காள் மகன்)

5. வி.பாஸ்கரன் (சசிகலாவின் அக்காள் மகன்)

6. வி.என்.சுதாகரன் (சசிகலாவின் அக்காள் மகன்)

7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ் (சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகன்)

8. எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் சகோதரர்)

9. இராவணன்

10. மோகன் (அடையாறு)

11. குலோத்துங்கன்

12. ராஜராஜன்

13. டி.வி.மகாதேவன்

14. தங்கமணி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது” என ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாள்களில் சசிகலா குடும்பத்துக்கு வேண்டப்பட்ட எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி, சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோரும் கட்டம் கட்டப்பட்டனர். ஜெயலலிதாவின் இந்த அதிரடியை அ.தி.மு.க-வின் சிலர் கொண்டாடினார்கள். சில இடங்களில் பட்டாசுகள் வெடித்தனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.

சசிகலா நீக்கம் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாள்கள் முன்புதான் `அ.தி.மு.க-வின் பொதுக்குழு, செயற்குழு டிசம்பர் 30-ம் தேதி கூடும்’ என அறிவித்திருந்தார் ஜெயலலிதா. அந்தப் பொதுக்குழு கூடுவதற்கு 11 நாள்களுக்கு முன்பு, சசிகலா நீக்கம் என்கிற அதிரடி அறிவிப்பு வெளியானது. செயற்குழு உறுப்பினராக இருந்த சசிகலா, செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்கிற முடிவோடு அந்த அறிவிப்பு வெளியாயிருந்தது.

சசிகலாவின் மீது அதிரடி பாய்ந்த அடுத்த நாள் அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா கீழ்ப்பாக்கம் இறைமக்கள் புத்துணர்வு மையத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா கலந்து கொண்ட அந்த விழாவில் பேசிய அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் பி.எச்.பாண்டியன், சசிகலா நீக்கத்தை மறைமுகமாக வரவேற்றுப் பேசினார். “ஒரு குடும்பத்துக்காக ஆட்சி செய்யாமல் தமிழகத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அம்மா. அரசியலில் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியை, ஒரு கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறார். அம்மா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் அ.தி.மு.க தொண்டர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். உங்களுடைய விசுவாசிகள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்” என பி.எச்.பாண்டியன் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

அந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஜெயலலிதாவும் பூடகமாகச் சில செய்திகளைத் தொண்டர்களுக்குச் சொன்னார். “எல்லோரும் பழி உணர்ச்சி இல்லாமல் பகையின்றி, சுயநலமின்றி, அன்புடனும், அமைதியுடனும், தியாக உணர்வுடனும் வாழ வேண்டும். சுயநலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும். பிறகு கசக்கும். சுயநலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் முடிவில் இனிமையாக இருக்கும்” என்றார். பழி உணர்ச்சி, பகை, தியாக உணர்வு, சுயநலம் போன்ற வார்த்தைகள் சசிகலாவுக்கு ஜெயலலிதா சொன்னதுதான்.

அன்றைக்கு சசிகலா மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பதற்கு என்ன காரணம்?

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோதே அரசியலில் ஜெயலலிதா அடியெடுத்து வைத்தார். சில வருடங்களில் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்து, தோழியாக மாறி, பிறகு உடன்பிறவா சகோதரியானார். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானபோது ஆட்சியிலும் கட்சியிலும் சர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக சசிகலா உருமாறினார். சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது குடும்பத்தினரும் அதிகாரம் செலுத்தினார்கள். அமைச்சர்கள் நியமனம், அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், கான்ட்ராக்ட், கட்சி நிர்வாகிகள் நியமனம் எனச் சகலத்திலும் சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

சசிகலா குடும்பத்திலிருந்து சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துப் பிரமிக்க வைக்கும் வகையில் திருமணத்தை நடத்தினார் ஜெயலலிதா. 1996 தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடைவதற்கு சசிகலா குடும்பத்தின் ஆதிக்கமும் காரணம். அதனால், 1996-ம் ஆண்டு `சசிகலாவுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என ஜெயலலிதா அறிவித்தார். போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டார். ஆனால், ஒரு சில மாதங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அடுத்து வந்த 2001-2006 மற்றும் 2011-2016 ஜெயலலிதா ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்தது.

2011 சட்டசபைத் தேர்தல் முடிந்து ஜெயலலிதா முதல்வரான பிறகு வழக்கம் போலவே சசிகலா குடும்பத்தினர் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தனர். அது ஆட்சியைப் பிடிக்கும் சதியில் ஈடுபட வைத்தது எனச் செய்திகள் கிளம்பின. அந்த நேரத்தில்தான் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருவில் நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் தங்களுக்குச் சாதகமான எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றி நடராஜனை முதல்வராக்குவது தொடர்பான திட்டம் தீட்டப்பட்டதாகவும் அதற்கான சதி ஆலோசனை பெங்களூருவில் நடந்ததாகவும் ஜெயலலிதாவின் காதுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இந்தப் பின்னணியில்தான் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அ.தி.மு.க-கவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி 2011 மே 16.

2011 சட்டசபைத் தேர்தலில் வென்று, அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருந்தது. ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழாவில்தான் இந்த போட்டோவை விகடன் புகைப்படக்காரர் எடுத்தார்.

ஜெயலலிதா பதவியேற்பு, மேடையில் நடந்துகொண்டிருக்க.. எதிரே முன்வரிசையில் சசிகலாவும் துக்ளக் ஆசிரியர் சோவும் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். “இந்த ஆட்சியை உருவாக்கினவங்களே இவங்க ரெண்டு பேர்தான். `விஜயகாந்த்தை அ.தி.மு.க கூட்டணிக்குள் கொண்டு வந்தால்தான் வெற்றி சாத்தியம்’ என்று சொல்லி, ஜெயலலிதாவைச் சம்மதிக்கவைத்தவர் சோ. வெற்றிச் சூத்திரத்தை சோவும், கட்சியின் வேட்பாளர் தேர்வை சசிகலாவும் செய்து கொடுத்து, அம்மாவை வெற்றி மனுஷியாக மாற்றினார்கள்’’ என அப்போது நம்மிடம் சொன்னார் சீனியர் அமைச்சர் ஒருவர்.

ஜெயலலிதா பதவியேற்பு நடந்த அன்றைய தினத்திலிருந்து சரியாக 218-வது நாளில் அதாவது 2011 டிசம்பர் 19-ம் தேதி சசிகலா அ.தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்படுகிறார். இதற்குக் காரணமும் சோதான்.

“2011-ம் ஆண்டு ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு சோதான் காரணம்” என ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா சொல்லியிருக்கிறார். சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளை 2011-ம் ஆண்டு மத்தியில் ஜெயலலிதா எடுத்தார். அதைப் பயன்படுத்தி சிலர் என்னைப் பற்றித் தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் சொன்னார்கள். இதுபற்றி பத்திரிகையாளர் சோவிடம் ஜெயலலிதா பேசினார். அதன்பிறகுதான் நான் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டேன். `சோ என்னிடம் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அது என்ன என்பதை பிறகு உனக்குச் சொல்கிறேன். அதுவரை தி.நகரில் உள்ள வீட்டில் போய் இரு’ என அப்போது ஜெயலலிதா என்னிடம் சொன்னார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“தி.நகரில் உள்ள வீட்டில் சில காலம் தங்கினேன். பிறகு சில மாதங்களிலேயே என்னைத் தொடர்பு கொண்ட ஜெயலலிதா, `உன்னைப் பற்றி எனக்கு வந்த தகவல் அனைத்துமே தவறானது. எனவே மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்துவிடு’ என்றார். அதன்படி 2012 மார்ச் மாதம் நான் போயஸ்கார்டன் திரும்பினேன். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்ட என்னுடைய உறவினர்கள் யாரிடமும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று கடிதம் எழுதிக் கொடுத்தேன். சோ, ஜெயலலிதாவுக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டது” எனவும் சொல்லியிருக்கிறார் சசிகலா.

சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதா நீக்கிய பிறகு சசிகலா குடும்பம் நடத்தி வந்த மிடாஸ் மதுபான ஆலை நிர்வாகம் உட்பட 9 நிறுவனங்களின் இயக்குநர்களாக சோவும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் நியமிக்கப்பட்டனர். 2017 மார்ச் மாதம் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த பிறகு சோ இயக்குநர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த விஷயத்தை எல்லாம் பிறகு ஆம் ஆத்மி கட்சியில் இருந்த பிரசாந்த் பூஷன், பகிரங்கப்படுத்தினார். 2016 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ஜனவரியில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய சோ, “தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது” என்றார். உடனே இதற்கு எதிர்வினையாற்றிய கருணாநிதி, “மது தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வேறு எப்படிப் பேசுவார்?” என்றார்.

ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாளில் அதே அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சோவும் மறைந்தார். எந்த சோவால் சசிகலா விரட்டியடிக்கப்பட்டாரோ அந்த சோவின் உடலுக்கு சசிகலா இறுதி அஞ்சலி செலுத்தினார். சோவால் வெளியேற்ற முடியாத சசிகலா, பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆனார். பிறகு முதல்வராகவும் ஆசைப்பட்டார். இப்போது சோ இடத்தில் துக்ளக் ஆசிரியராக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு கோபம் வந்தது.

அன்றைக்கு முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, மணிமகுடம் சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டார் சசிகலா. பதவியேற்பு விழாவுக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் தயாராகிக்கொண்டிருந்தது. அதன் ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது பன்னீர்செல்வத்தைப் பார்த்து வர அனுப்பினார். “இந்தப் பொழப்பு நமக்கு தேவையா?” என ஆடிட்டர் குருமூர்த்தியிடம் போய் நின்றார் பன்னீர். “ஜெயலலிதா சமாதிக்குப் போங்கள். நியாயம் பிறக்கலாம்” என அனுப்பி வைத்தார் குருமூர்த்தி.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற போது சோவுடன் சசிகலா அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இன்னோர் ஓரத்தில் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடியும் அமர்ந்திருந்தார். அந்த மோடி பிரதமரான பிறகு ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு சசிகலா தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னார். அந்த மோடியின் ஆசி பிறகு சசிகலாவுக்குக் கிடைக்கவில்லை. மோடிக்கு வேண்டப்பட்ட குருமூர்த்திக்குக் கிடைத்தது.

சோவால் வெளியேற்ற முடியாத சசிகலா, குருமூர்த்தியால் வெளியேற்றப்பட்டார்.

சசிகலா குடும்பத்தினர் நடத்திய நிறுவனங்களுக்கு இயக்குநராக சோ இருந்தது எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்திக்கு தெரியாதா? என்கிற கேள்விக்கு விடை இல்லை.

நன்றி- விகடன்

%d bloggers like this: