₹2,000 கோடி டெண்டர்: ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி… ஐ.ஏ.எஸ் போர்க்கொடி!

கழுகாருக்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்திருந்த இளநீர் அல்வாவை அவர் முன் வைத்துவிட்டு, ‘‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக் கும்போது டெல்லிக்குப் பறந்துள்ளாரே முதல்வர் எடப்பாடி?’’ என்று கேட்டோம். அல்வாவைச் சுவைத்துக்கொண்டே நம்மிடம் பேசினார் கழுகார்.

‘‘சென்னையில் அவருடைய வீட்டை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்த அவர், அப்படியே டெல்லிக்குப் பறந்துவிட்டார். கூடவே மூத்த அமைச்சர்கள் குழுவும் சென்றுள்ளது. காந்தியின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களின் ஆலோசனைக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொள்ளத்தான் இந்தப் பயணம்.’’

‘‘சரி, தமிழக ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் டெண்டர் விவகாரம் ஒன்று பரபரப்பாகப் பேசப்படுகிறதாமே?’’

‘‘உண்மைதான். விவரமாகவே சொல்கிறேன். தமிழகத்தில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிப்பதற்கான டெண்டர், சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறைதான் இதை மேற்கொள்கிறது. இந்த டெண்டர் ஆவணத்தில் விரிவான தொழில்நுட்ப விவரக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.’’

‘‘ம்!’’

டிசம்பர் 11-ம் தேதி இந்த டெண்டர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை எடுக்க இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் பலவும் மல்லுக்கட்டியுள்ளன. இதில் முக்கியமான இரண்டு நிறுவனங்களுக்கு இடையேதான் கடும்போட்டி. ஒன்று, கட்டுமானத் துறையில் பிரபலமான இங்கிலீஷ் எழுத்து நிறுவனம். மற்றொன்று, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புக்குக் காரணம் என்று கை நீட்டப்படும் நிறுவனம். இந்த டெண்டரைக் கைப்பற்றுவதற்காக, இந்த இரண்டு நிறுவனங்களின் தரப்பிலிருந்தும் சம்பந்தப்பட்ட துறையின் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்திருக்கிறார்கள். அதற்கு அந்த அதிகாரி பிடிகொடுக்காமல், `எதுவாக இருந்தாலும் விதிமுறைப்படிதான் நடக்கும். யாரும் எதையும் மாற்ற முடியாது’ என்று கறாராகக் கூறிவிட்டாராம்.’’

‘‘அத்துடன் விட்டிருக்க மாட்டார்களே!’’

‘‘அதேதான். கொந்தளிப்பு நிறுவனம், வேறு ஒரு வழியில் தமிழக ஆளுங்கட்சிப் பெரும்புள்ளிகளில் ஒருவரைத் தொடர்புகொண்டிருக்கிறது. அவரிடம், 14 சதவிகிதம் வரை கமிஷன் பேசி சரிகட்டிவிட்டார்களாம்.’’

என்னது 14 சதவிகிதமா… 280 கோடி வருகிறதே!’’ என்று நாம் வாயைப் பிளக்க,

‘‘அதெப்படி… கால்குலேட்டரைக்கூடத் தட்டாமல் சட்டென உம்மால் கணக்கு போட முடிகிறது! நீர் கணக்கில் புலிதான்’’ என்று தட்டிக்கொடுத்த கழுகார், தொடர்ந்தார்.

‘‘அதற்குப் பிறகு அந்த அதிகாரியை பெரும்புள்ளியின் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். விவரம் புரியாமல் அந்த ஐ.ஏ.எஸ்ஸும் சந்தோஷமாகச் சென்றிருக்கிறார். அவரிடம், ‘இந்த டெண்டரில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்’ என்று பெரும்புள்ளி தரப்பிலிருந்து உத்தரவு போடப்பட்டதாம். சந்தோஷமெல்லாம் வற்றிப்போய் கடுப்பான அந்த அதிகாரி, ‘எல்லாம் சரியாகவே இருக்கின்றன. டெண்டர் விட்ட பிறகு விதிமுறைகளை மீறி எதையும் மாற்ற இயலாது’ என மறுத்துவிட்டாராம்.’’

‘‘அடேங்கப்பா… தைரியம்தான்!’’

‘‘மாற்ற முடியாது என்றால், அந்த டெண்டரையே கேன்சல் செய்துவிட்டு புதிதாக ஒரு டெண்டர் விடுங்கள் என்று பெரும்புள்ளி தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஆனால், கறாராக மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம் அந்த அதிகாரி.’’

‘‘பலே… பலே…’’

‘‘அதன் பிறகு மூன்று நாள்கள் அந்த அதிகாரியை வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் மீண்டும் மீண்டும் அலையவைத்து அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.’’

‘‘அப்படி என்னதான் மாற்றம் செய்யச் சொன்னார்களாம்?’’

‘‘இரண்டுமே பெரிய நிறுவனங்கள்தான். இதில் இங்கிலீஷ் நிறுவனத்தை டெண்டரிலிருந்து கழற்றிவிடும் வகையில் ஆறு கண்டிஷன்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அவர்கள் சொல்லும் மாற்றம். டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனத்தின் நிதி வருவாய் 2,000 கோடி ரூபாய்க்குமேல் இருக்க வேண்டும். அந்த நிறுவனம் ஒயர் உற்பத்தியிலும் இருக்க வேண்டும் என்பது உட்பட அந்த ஆறு கண்டிஷன்களையும் சேர்த்தால், பெரும்புள்ளி விரும்பிய ஒரு நிறுவனம் மட்டும்தான் டெண்டரில் பங்கெடுக்க முடியும். இதற்காகவே அந்த அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக் கிறது. ஆனால் அந்த அதிகாரி, ‘டெண்டர் விதிகளுக்கு மாறாக நான் எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நான்தான் நாளை சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.’’

‘‘அப்புறம் என்னதான் நடந்தது?’’

‘‘கோட்டையில் கோலோச்சும் முக்கியமான ஓர் அதிகாரியும், நிதித்துறை சார்ந்த ஓர் அதிகாரியும் சம்பந்தபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியை அழைத்து ‘பேசாமல், அவர்கள் சொன்னபடி டெண்டரை கேன்சல் செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களை டம்மி பதவிக்கு மாற்றிவிடுவார்கள்’ என்று மிரட்டும் தொனியில் சொல்ல, ‘பதவியைக்கூட ராஜினாமா செய்யத் தயங்க மாட்டேன்’ என்று அந்த ஐ.ஏ.எஸ் பதிலடி கொடுக்க, அதிர்ந்துபோனார்களாம் உயர் அதிகாரிகள் இருவரும். இதைப் பற்றி பெரும்புள்ளியிடம் அவர்கள் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். ‘சில நாள் பார்க்கலாம். அந்த அதிகாரி சரிப்பட்டு வராவிட்டால் வேறு அதிகாரியை வைத்து டெண்டரை நடத்திக்கொள்ளலாம். அதுவரை டெண்டர் ஏலத்தை ஒத்திப்போடும் வேலையைப் பார்ப்போம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்’ என்று உத்தரவாகவே சொல்லிவிட்டாராம் அந்தப் பெரும்புள்ளி.’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலருக்கும் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றனபோலிருக்கிறதே?’’

‘‘ஏற்கெனவே, கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலராக இருந்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் இந்த அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து ஒரு பெட்டிஷனே தரப்பட்டது. அதன் பிறகும் ஆளும் தரப்பின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். ‘குறிப்பிட்ட சில அதிகாரிகளே பசையான துறைகளில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களுடன் இணங்கிப் போகாத அல்லது நேர்மையான அதிகாரிகள் பலரும் டம்மி பதவிகளில்தான் தொடர வேண்டியிருக்கிறது’ என்று வருத்தம் படர சொல்கின்றனர் அதிகாரிகள்.’’

‘‘ஓ!’’

‘‘சமீபத்தில் பால்வளத் துறையில் ஓர் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டார். அவரும் முறைகேடான ஒரு டெண்டருக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்பதுதான் காரணமாம். சமூகநலத் துறையில் இளம் அதிகாரி ஒருவருக்கும் இதேபோன்று ஒரு சிக்கல் இருக்கிறது. அவரையும் சீக்கிரமே கழற்றிவிடுவார்கள் என்று அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.’’

‘‘தி.மு.க-வுடன் நெருங்குகிறாரா கமல்?’’

‘‘அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க நடத்தும் பேரணி பற்றிய ஆலோசனைக்காக கூட்டணிக் கட்சிகளை அழைத்திருந்தார் ஸ்டாலின். அதற்கு கமலையும் அழைப்பதாக இருந்தார்களாம். ஆனால், `அவர் வந்தால் ஊடகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிடுவார்’ என்று ஸ்டாலினிடம் சிலர் சொல்ல, அதுவும் சரிதான் என்று அழைக்கவில்லையாம். ஆனால், அதற்குப் பிறகு ஆர்.எஸ்.பாரதி நேரில் போய் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.’’

‘‘பேரணி பிரமாண்டமாக நடைபெறும்போலிருக்கிறதே?’’

‘‘ஆமாம். ஏற்கெனவே திருச்சியில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியே ஆளுங்கட்சியை அதிரவைத்திருக்கிறது. இந்தப் பேரணிக்கு எவ்வளவு கூட்டம் வருமோ, இது உள்ளாட்சித் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ எனக் கவலைப்படுகிறது ஆளுங்கட்சித் தலைமை.’’

‘‘தமிழக காங்கிரஸ் சார்பில் தனியாக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவினர், தேசியத் தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்களாமே?’’

‘‘நானும் கேள்விப்பட்டேன். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் எனக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் மட்டும் எந்த ஒரு போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டபோது நான்கைந்து போராட்டங்களை நடத்திய கே.எஸ்.அழகிரி, இப்போது மெளனமாக இருக்கிறார் என்று புகார் அனுப்பியிருக்கிறார்களாம்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் சீட் ஷேரிங்கில் தி.மு.க மீது கூட்டணிக் கட்சிகளுக்கு நிறைய வருத்தம் என்கிறார்களே?

உண்மைதான். காங்கிரஸின் புலம்பல்தான் அதிகம். சத்தியமூர்த்தி பவனில் புகார்கள் குவிகின்றன. டிசம்பர் 18-ம் தேதியன்று மூத்த நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அங்கு இருந்த ஒரு நிர்வாகியிடம் அப்போது போனில் பேசிய முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ‘என் சொந்த ஊரில்கூட என்னுடைய ஆட்களுக்கு சீட் வாங்க இயலவில்லை. இந்தக் கட்சியில் நான் இருப்பதற்கு, வேறு கட்சிக்குப் போய்விடலாம்’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டு, போனை கட் செய்துவிட்டாராம். சிதம்பரம் தரப்பில், சிவகங்கையில் தன் ஆதரவாளர்களை தி.மு.க தரப்பு கழற்றிவிட்டது என்கிற வருத்தம் இருக்கிறதாம். மாவட்டம்தோறும் இதே பிரச்னைதான்.’’

‘‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றாரே… என்ன விசேஷம்?’’

‘‘கடந்த 17-ம் தேதி காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின். அண்ணாமலையார் சந்நிதியில் `பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி’ என்று கூறி மு.க.ஸ்டாலின் பெயரில் அர்ச்சனை செய்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் ஒருமுறை திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து மு.க.ஸ்டாலின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு நவகிரகங்களைச் சுற்றிவந்தாராம். அந்தத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. அதேபோன்று உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என இப்போதும் அர்ச்சனை செய்திருக்கிறார் என்கிறார்கள்.’’

“தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி அடிக்கடி கேரளா பக்கம் செல்வதுபோல் தெரிகிறதே?”

“கேரளத்திலிருந்து நிறைய தன்னார்வ அமைப்புகள் அவரை பேச அழைக்கின்றனவாம். வரும் ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் கேரள இலக்கியத் திருவிழாவில் பேசவும் அவரை அழைத்திருக்கின்றன. கனிமொழி ஏற்கெனவே வயநாடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்துகள்’ குறித்துப் பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி-யான சசிதரூர் பாராட்டி ட்விட் போட்டிருக்கிறார்.”

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்களே?’’

‘‘குடியுரிமைச் சட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக முதல்வரிடம் உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுக்கூட்டமும் ஆளுங்கட்சியை யோசிக்கவைத்திருக்கிறதாம். முதல்வருக்கு பாதுகாப்புப் பிரச்னைகள் வரலாம் என்று அலர்ட் கொடுக்கப்பட்டதால், பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார்கள்.’’

‘‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் வலுக்குமோ?’’

‘‘அப்படித்தான் தெரிகிறது… ஹர்ஷ் மந்தர், ராமச்சந்திர குஹா என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் களமிறங்கிப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை கைதுசெய்தது மேலும் பரபரப்பைக் கூட்டுகிறது. டெல்லியில் இணைய சேவையை முடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. சில நாள்களில் எல்லாம் அடங்கிவிடும் என நினைக்கிறதாம் பா.ஜ.க தலைமை’’ என்ற கழுகார் சட்டென சிறகுகளை விரித்துப் பறந்தார்

%d bloggers like this: