கடன் வாங்கலையோ கடன்.! ஓடும் வாழ்க்கையை சுழலில் சிக்க வைக்கும் காலம் இது …

அவசியத்திற்கு கடன் வாங்கும் காலமெல்லாம் போய் தற்போது ஆடம்பரத்திற்கு கடன் வாங்கும் காலம் வந்துவிட்டது. ஒரு காலத்தில் கடன் அன்பை முறிக்கும் என்றார்கள். இந்த காலத்தில் கடன் உயிரை குடிக்கும் என்பதே சரி.

அந்த அளவிற்கு கடன் தொல்லையால் உயிரை மாய்த்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நவநாகரிக காலத்தில் கடனானது ” கிரெடிட் கார்டு” வடிவில் மக்களை பாடாய்படுத்துகிறது. அது போக விரைவு வட்டிக்கடன் என்ற தூண்டிலில் பலரும் மீனாக சிக்கி கொள்கின்றனர்.

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் சமாளித்து கொள்கிறார்கள். ஆனால் அதை முறையாக கையாள தெரியாமல் EMI கட்டியே சிலர் நொந்து போவார்கள்.

நமது மொபைல் எண்ணுக்கே தொடர்பு கொள்ளும் வங்கி சேவை ஊழியர்கள் ஆன்லைனிலேயே ரூ.10 லட்சம் வரை 5 நிமிடங்களில் கடன் தருகிறோம் என்று கூறி கடன் உலகிற்கு நம்மை எளிதாக கூட்டிக் கொண்டு போகின்றனர்.

மாத சம்பளக்காரர்களின் லட்சிய கனவான சொந்த வீட்டை அடைவதற்கு கடன் வழங்குவதிலிருந்து, பராமரிப்பு கடன், மருத்துவ கடன் என பல்வேறு வகை கடன்களில் சிக்க வைத்து விடுகின்றன வங்கிகள். வாழ்நாளில் பெரியளவில் கடன் ஏதும் வாங்காமல் நன்றாக வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற சிலரின் எண்ணங்களை கூட தவிடு பொடியாக்கிவிடுகின்றார்கள்.

கடன் வாங்கியதிலிருந்து எவ்வளவு வருடம் ஆனாலும் வட்டி மட்டுமே கட்டி மாளவில்லை, அசல் எப்போது அடையப்போகிறது. அதற்கேற்றவாறு மாத சம்பளம் நமக்கு உயருமா என்ற மனக்கவலையிலேயே நடுத்தர வர்கத்தின் வாழ்க்கை நகர்கிறது.

சாமானிய மக்கள் மட்டுமா கடன் கடலில் மூழ்கி உயிரை பறி கொடுக்கிறார்கள். பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் கடனில் சிக்கி வாழ்வை முடித்து கொள்வதை கண்கூடாக பார்க்கிறோம். எனவே கடன் என்பது ஒரு சமூக பிரச்சனை என்பதை நாம் உணர வேண்டும்.

கடன் தொல்லையால் மகிழ்ச்சியை இழந்து, நிம்மதி இழந்து ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் நடப்பது போன்ற சூழலில் வாழ்ந்து, அவமானப்பட்டு, அக்கம்பக்கத்தினரை கூட எதிர்கொள்ள முடியாத பலரும் இறுதியாக தற்கொலை என்னும் முடிவை நாடி செல்கின்றனர்.

மிக மிக அத்தியாவசிய மற்றும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க தேவைப்பட்டால் கடன் வாங்கலாமே தவிர ஆடம்பரத்திற்கோ, அல்லது அதை பெற்றால் தான் வாழ்க்கை முழுமையாகும் என்றோ எண்ணி அகல கால் வைக்காதீர்.. கடன் என்னும் சுழலில் சிக்கி சிதையாதீர்.!

பெரும் கடனில் சிக்கி தத்தளிப்பதை தவிர்க்க, மாதம்தோறும் சிறுக சிறுக சேமிக்கும் பழக்கத்தை வளர்த்தாலே போதும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது வெறும் வார்த்தை அல்ல, சேமித்து பாருங்கள் உங்களுக்கே புரியும்…

%d bloggers like this: