ரஜினியிடம் நெருங்கும் ராமதாஸ்…

அலுவலகத்துக்குள் பரபரப்பாக உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘கடந்த இதழில் நீர் கொடுத்த ‘ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி… ஐ.ஏ.எஸ் போர்க்கொடி!’ கட்டுரை, விஸ்வரூபம் எடுத்துவிட்டதுபோலவே” என்று கேட்டோம்.

தகவலைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார். ‘‘தி.மு.க தரப்பு, இதைப் பற்றி தீவிரமாக விசாரணையில் இறங்கியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த பெரிய டெண்டர்களின் விவரங்களை தங்களுக்கு ஆதரவான சில அதிகாரிகள் மூலம் சேகரிக்கச் சொல்லியிருக்கிறது தி.மு.க தலைமை.

கோட்டை வட்டாரத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. டிசம்பர் 23-ம் தேதி இது தொடர்பாக கோட்டையில் அவசரக் கூட்டம் நடந்ததாம். ‘சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியை இப்போது மாற்ற வேண்டாம். இந்த டெண்டர் குறித்து பொறுமையாக முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என்று ‘பெரும்புள்ளி’ தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்’’ என்று சொன்ன கழுகாருக்கு, பாதாம் அல்வாவையும் முந்திரி பக்கோடாவையும் ஒரு தட்டில் எடுத்து வைத்தோம். ‘‘சூப்பர்!’’ என்றபடியே சுவைக்க ஆரம்பித்தார்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியில் தி.மு.க பெரும்கூட்டம் காட்டி மிரட்டிவிட்டதே?’’

‘‘பேரணிக்குத் தடை போட கடைசிவரை ஆளுங்கட்சி முயன்றது. நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டதில் அ.தி.மு.க தரப்புக்கு ஏமாற்றமே. பேரணிக்கு வந்தவர்களால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அதைவைத்து வழக்கு போடத் தயாராக இருந்தது காவல்துறை. அதற்கும் வாய்ப்பு தராமல் அமைதியாக நடந்து முடிந்தது பேரணி

ஆனால், பேரணியை திங்கள்கிழமை நடத்தியதில் மக்களுக்கு பெரும்பாடாகிவிட்டதே!’’

‘‘பேரணி நடந்த இடம் எழும்பூர். டிசம்பர் 23-ம் தேதி காலை வேளையில் இந்தப் பேரணி நடந்ததால் அலுவலகம், பள்ளிக்குச் சென்றவர்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. இந்த அளவுக்கு கூட்டம் வரும் என தி.மு.க தலைவர் ஸ்டாலினே எதிர்பார்க்கவில்லையாம். கூட்டணிக் கட்சிகளும் இந்தப் பேரணியில் உத்வேகத்துடன் பங்கேற்றது ஸ்டாலினை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ‘தி.மு.க பேரணிக்கு பொதுவெளியில் நல்ல ஆதரவு இருக்கும்’ என்று உளவுத்துறை, முதல்வரிடம் சொல்ல… பேரணிக்கு முதல் நாள் இரவு அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட்டார் முதல்வர்.’’

‘‘பார்த்தோம்… இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பற்றிச் சொல்லியிருந்தாரே?’’

‘‘அ.தி.மு.க மீது எழுந்துள்ள விமர்சனத்தைப் போக்கவே இந்த அறிக்கை என்கிறார்கள். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க அரசு துரோகம் செய்துவிட்டது என்ற கருத்து, தொடர்ந்து பரப்பப்பட்டுவந்தது. அதை முறியடிக்கவே, ‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உள்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினேன்’ என்று, தி.மு.க பேரணிக்கு முந்தைய நாளில் அறிக்கை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இரட்டை குடியுரிமை என்பது எளிதான விஷயமல்ல என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க நடத்திய பேரணியில் கமல் கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லையாம்?’’

‘‘அவர்கள் சொல்லும் காரணம், பேரணி நடந்த அன்று கமல் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்தார் என்பது. உண்மையான காரணம், ‘பேரணியில் கலந்துகொண்டால், பத்தோடு பதினொன்றாக நம்மையும் மக்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நமது எதிர்ப்பை நாம் தனியாகவே காட்டிவிடலாம்’ என்று முடிவு எடுத்தார்களாம்

அ.தி.மு.க கூட்டணி உடைந்துவிடும் போலிருக்கிறதே?’’

‘‘வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏற்கெனவே தே.மு.தி.க. தலைமை அ.தி.மு.க மீது வருத்தத்தில் இருக்கிறது. மற்றொருபுறம் அ.தி.மு.க கூட்டணியில் பலமான கட்சியாக இருக்கும் பா.ம.க-வும் `இந்தக் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா!’ என யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் ராமதாஸிடம் பேசிய முக்கியப் பிரமுகர் ஒருவர், ‘ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அந்தக் கட்சியுடன் தான் பா.ஜ.க அணி சேரும். அந்த அணிக்குள் நீங்களும் வந்துவிடுங்கள்’ என்று தூண்டில் போட்டிருக்கிறார். ஒரு காலத்தில் ‘தமிழக அரசியலுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? தமிழக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதே ரஜினிதான்’ என்றெல்லாம் விமர்சனம் செய்த பா.ம.க, இப்போது ரஜினி விஷயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ரஜினிக்கு ஆதரவாக பா.ம.க நிர்வாகிகள் பலரும் அடிக்கடி பதிவிடுவதையும் கவனியுங்கள்.’’

‘‘ஓ!’’

‘‘குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்புப் போராட்டங்கள் வலுத்துவரும் சூழலில், ‘நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அமல் படுத்தப்படாது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு முற்றிலும் முரணாக ‘தேசிய அளவில் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும்’ என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.’’

‘‘நடக்குமா… நடக்காதா?’’

‘‘நடக்கும்போலதான் தெரிகிறது. நாடு முழுவதும் 2020–ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புபோல்தான் இது இருக்கும் என்றாலும், மக்கள்தொகையுடன் கூடுதலாக ஆதார் எண், பெற்றோரின் பிறந்த இடம் முதலான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தகவல்கள் அடுத்தகட்டமாக குடியுரிமை சட்டத் திருத்தத்தின் கீழ் பயன்படுத்தப்படவுள்ளதாவும் மத்திய அரசு தரப்பில் சொல்கிறார்கள். `இது என்.ஆர்.சி அமல்படுத்துவதற்கான முதல் படி’ என்று கூறி மேற்குவங்க அரசும் கேரள அரசும் இந்தக் கணக்கெடுப்புக்கு தடைவிதித்துள்ளன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுப்புக் கான பரிசோதனை, தமிழ்நாட்டின் நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டது என்பதுதான் கூடுதல் தகவல். அதேபோல் பிறப்புக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆகும் செலவுகள்குறித்த ஆய்வையும் மத்திய நிதி ஆயோக் ஆரம்பித்து விட்டது.’’

‘‘சசிகலா விவகாரத்தை மீண்டும் கிளறி விட்டிருக்கிறதே வருமானவரித் துறை?’’

‘‘2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினா்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒரு துண்டுச்சீட்டில், சில பணப்பரிவர்த்தனைகள்குறித்து தகவல்கள் கிடைத்தன. ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலாவுக்குச் சொந்தமான பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்தார்கள் என்று அவருடைய வழக்கறிஞர் செந்தில் என்பவர் எழுதிய குறிப்பு அது’ என்று வருமானவரித் துறை சொல்லியிருக்கிறது.

இதுகுறித்து சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரது சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு எதிராக சசிகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்துள்ளார். தன் விடுதலைக்கான வேலைகளில் சசிகலா வேகம் காட்டிவரும் நிலையில், வருமானவரித் துறை புதிய சிக்கலை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது’’ என்ற கழுகார், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைச் சொல்லி சிறகுகளை விரித்தார்

%d bloggers like this: