ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள் கலைப்பு!”

கறுப்புக் கண்ணாடியை ஸ்டைலாக அணிந்து வந்த கழுகார், “சூரிய கிரகணத்தை, பிரதமர் நரேந்திர மோடி பார்த்து ரசித்ததுபோலவே நானும் பார்த்துவிட்டு வந்தேன்” என்று குஷியோடு சொன்னார்.

‘‘ஆனால், அவருடைய ஸ்டைலில் ரசித்தீரா என்பதுதான் முக்கியம். மனிதர் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்கிறார். நாடு முழுக்க ஆயிரத் தெட்டு பிரச்னைகள் இருந்தாலும், ‘அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அந்தந்த நேரத்து வேலைகளை அப்படி அப்படியே ரசித்து செய்ய வேண்டும்’ என்பதை, தவறாமலும் சரியாகவும் கடைப்பிடிக்கிறார்’’ என்றோம் நாம்.

‘‘ஏதோ பூடகமாகச் சொல்வதுபோல் தெரிகிறதே..!’அதேதான். ‘சென்னையில் முதல்வரின் வீட்டை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்த முதல்வர் அப்படியே டெல்லிக்குப் பறந்து விட்டார்’ என்று சொல்லியிருந்தீர் (25.12.19 தேதியிட்ட ஜூ.வி இதழ்). ஆனால், அவர் அங்கிருந்து சென்னை வந்திருக் கிறார். இங்கே உள்ள வேலைகளையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் என்கிறார்களே.

‘‘ம்… புரிகிறது. சரியாகச் செய்யாமல் விட்டு விட்டேன்’’ என்ற கழுகார், தவறாக ‘அவுட்’ கொடுத்த அம்பயர்போல் இரு தோள்களிலும் தட்டிக்கொண்டு, தொடர்ந்தார்.

“உள்ளாட்சித் தேர்தல் கலாட்டாக்கள்தான் அத்தனை அரசியல் கட்சித் தலைமையகங்களிலும் விவாதப்பொருள். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்குத்தான் கட்சி அடிப்படையில் போட்டியிட முடியும். அதனால், பெரும்பாலான கவுன்சிலர் பதவிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில், ஆளுங்கட்சி தீவிரமாக இருக்கிறது. அப்போதுதான், மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற முடியும். ‘இதற்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் தவறாமல் செய்து விடுங்கள். தேவையான உதவிகளை மாவட்ட அமைச்சர்கள் தட்டாமல் செய்வார்கள்’ என்று ஆளுங்கட்சி மேலிடம் சொல்லியிருக்கிறது.’’

பேரத்தை இப்போதே ஆரம்பித்து விட்டார்களோ..!’’

‘‘அதேதான். ஆளுங்கட்சியில் உள்குத்து வேலைகள் அதிகம் நடப்பதால், போட்டி அதிகமாக இருக்கும். எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது என நினைக்கிறார்கள். இதனால், கரன்சியைவைத்து எதிர்க்கட்சியினரை வளைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சிப் புள்ளிகளின் பார்வை, வெற்றி பெறுவார் என்று நம்பும் எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சைகள்மீது பலமாகப் பதிந்துள்ளது. பல மாவட்டங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை காபந்து செய்வதற்கும், வெற்றி பெற்றால் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களைத் தக்கவைப்பதற்கும் என்ன செய்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டுள்ளன.’’

பரிதாபம்தான். இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்த்தாக்குதல் என்னவோ?’’

‘‘கரன்சியை நீட்டினால் கரையாதாரும் கரைவார். அப்படியிருக்க, தி.மு.க மட்டும் என்ன செய்துவிட முடியும்? ஆனால், தி.மு.க தரப்பில் போட்டியிடுபவர்களிடம் ஒரு கருத்தை பதியவைத்துக்கொண்டிருக்கிறதாம் கட்சித் தலைமை. மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு, ‘இன்னும் ஓராண்டு கழித்து தமிழகத்தில் நாம்தான் ஆட்சியைப் பிடிப்போம். அப்போது உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படும். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் போது, இப்போது நமக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. அடுத்த ஐந்து ஆண்டுக்கு அவர்கள்தான் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக, தலைவர்களாகச் செயல்படு வார்கள்’ என்பதைக் கோடிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.”

தமிழக பா.ஜ.க தலைமைப் பதவி பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள். ஜனவரி மாதம், அகில இந்திய அளவிலான தலைவர் பொறுப்புக்கு நட்டா தேர்வுசெய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக ஜனவரி 5-ம் தேதி பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் சென்னை வருகிறார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் இரண்டு நாள்கள் கழித்து மாநிலத் தலைவர் யார் என அறிவிப்பார்களாம்.’’

‘‘அதுசரி… ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் பொங்கியுள்ளாரே கராத்தே தியாகராஜன்?’’

‘‘அந்த விவகாரம் கொஞ்சம் வில்லங்க மானதுதான் என்கிறார்கள். 2018-ம் ஆண்டு காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தடையை மீறி ஒரு போராட்டம் நடத்தின. இதுதொடர்பாக சென்னை காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவுசெய்தது. இந்த வழக்கு, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. இந்த வழக்கில் டிசம்பர் 26-ம் தேதி ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று சம்மன் போயிருக்கிறது. ஆனால், அதை அவர்கள் வாங்கவில்லையாம். இதே வழக்கில், தனக்கு வந்த சம்மனை வாங்கிய கராத்தே தியாகராஜன் ஆஜராகியிருக்கிறார். அப்போது நீதிபதி முன்னிலையிலேயே பிரச்னை வெடித்துள்ளது.’

அச்சச்சோ..!’’

‘‘ ‘சென்னையிலேயே இருந்துகொண்டு சம்மனை வாங்காமல் இருக்கிறார் மு.க.ஸ்டாலின்’ என ஆரம்பித்து கராத்தே பேச, தி.மு.க வக்கீல்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு எதிர்க்குரல் கொடுத்துள்ளனர். பிறகு வெளியே வந்த கராத்தே, ‘ஒரு சம்மனுக்கே ஆஜராகாதவர், எப்படி மத்திய அரசை எதிர்த்துப் போராடுவார்?’ என்று கமென்ட் அடித்துள்ளார்.”

“சரிதான்.”

“ஏற்கெனவே ஸ்டாலின்மீதுள்ள விவகாரங் களை ஆளுங்கட்சித் தரப்பு தூசு தட்டிவருகிறது. இந்த வழக்கில் சில வழக்குப் பிரிவுகளை மாற்றம் செய்து ஸ்டாலினுக்கு எதிராக பிடியை இறுக்கப் பார்க்கிறதாம் ஆளுங்கட்சித் தரப்பு!’’

“ஓஹோ…”

சூடாக ஃபில்டர் காபி வந்தது. அதை உறிஞ்சிக் குடித்த கழுகார், “விரைவில் தமிழக அரசியல் புள்ளிகள் சிலரைக் குறிவைத்து வருமானவரித் துறை ரெய்டு நடத்தப்போகிறதாம். அதில் ஆளுங்கட்சிப் புள்ளிகள் சிலரும் சிக்கலாம் என்கிறார்கள். சமீபத்தில் வருமான வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுங்கட்சி வி.ஐ.பி-க்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலரும் இடம்பெற்றுள்ளார்களாம். பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றதும் நடவடிக்கை தொடங்கும் என்கிறார்கள்’’ என்றார்.

“வழக்கமாக நடப்பதுதான். கடைசியில் கிடப்பில் போட்டுவிடுவார்கள். அது கிடக்கட்டும். மோடி-அமித் ஷா இடையே உரசல் என்கிறார்களே?”

“ `கடந்த சில நாள்களாகவே அமித் ஷா மீது மோடி வருத்ததில் இருக்கிறார்’ என்ற தகவல் டெல்லி மீடியா வட்டாரத்தில் வட்டமடிக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை பிரதமர் `வேண்டாம்’ என்று சொல்லியும், அமித் ஷா பிடிவாதமாக அறிவித்துவிட்டாராம். இதில்தான் அமித் ஷாவிடம் கொஞ்சம் காட்டமாகப் பேசிவிட்டாராம் மோடி. அதற்குப் பிறகுதான் ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்த போது, குடிமக்கள் பதிவேடு பற்றி அமைச்சர வையில் இன்னும் நாங்கள் விவாதிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.’’

‘‘ஓஹோ!’’

“தேர்தல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மீது போலீஸில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறதே?”

“ஆமாம். சமீபமாக, குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான பிரசாரங்களில் அவர் தீவிரமாக இருக்கிறார். அவர், துணைத் தலைவராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளக் கட்சி, சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோது, ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். பதிலுக்கு ‘கிஷோர் ஒரு வியாபாரி. பல கட்சிகளுக்கு அவர் தேர்தல் பணியாற்றுவதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் கட்சியைவிட்டு வெளியேறலாம்’ என ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாய்ந்தது.’’

‘‘பின்னே?’’

‘‘இந்தப் பின்னணியில்தான், ‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் நோக்கத்தில் தவறான பிரசாரம் செய்துவருகிறார் பிரசாந்த் கிஷோர். அவரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று டெல்லி போலீஸில் அ.தி.மு.கழக மாநிலங்களவை எம்.பி-யான சசிகலா புஷ்பா புகார் அளித்துள்ளார்” என்ற கழுகார்,

“இந்த இதழுக்காகத் தயாராகியிருக்கும் மலக்குழிகளில் கழிவுகளை அகற்றும் ரோபோ பற்றிய சிறப்புக் கட்டுரையைப் படித்தேன். நன்றாக இருக்கிறது. அதுதொடர்பாக நானும் ஒரு தகவல் சொல்கிறேன். உள்ளாட்சித் துறை சார்பில் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளுவதற்கென்றே பிரத்யேகமாக நெதர்லாந்திலிருந்து ரோபாக்கள் வாங்க இருக்கிறார்கள். இவை, பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் அடையாளம் கண்டு அப்புறப்படுத்துமாம்!” என்று சொல்லி, சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: