எதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்!’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்

புகைபிடிப்பது உடலுக்கு உகந்தது அல்ல என்பதால் சிகரெட் அட்டைகளில் எச்சரிக்கை வாசகத்துடன் அடங்கிய விழிப்புணர்வு புகைப்படம் அச்சிடப்படுகிறது. சிகரெட்டைப் போலவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளும் உடலுக்குக் கேடு விளைவிக்கும்

என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுபோன்ற நொறுக்குத் தீனிகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை அடங்கியிருப்பதால் அவற்றை உட்கொள்பவர்களுக்கு உடல்பருமன் தொடங்கி புற்றுநோய் வரையான தொற்றாநோய்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

அதனால் சிகரெட் பாக்கெட்டுகளைப் போலவே நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளிலும் சிவப்பு எச்சரிக்கை லேபிள் பதிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன்.இது தொடர்பாக அவர் பேசுகையில், “பசியில் இருக்கும் சிறுவர்களுக்கு ஒரு வாழைப்பழத்தின் விலையைவிட பதப்படுத்தப்பட்ட, பொரிக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் ரூ.5-க்கு பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. இதுபோன்ற முரண்கள்தான் இந்தியாவில் உடல்பருமன், சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன. எனவே, இதுபோன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை வரிகளை உயர்த்துவதோடு, அவற்றின் பாக்கெட்டுகள், டப்பாக்களில் சிவப்பு லேபிளைப் பதிக்க வேண்டும். அப்போதுதான் வாங்குவோருக்கு அது உடலுக்குக் கேடானது என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்படும்.

இதற்கு உணவு தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இங்கிலாந்து, மெக்சிஸோ போன்ற நாடுகள் வரிகளை உயர்த்தியுள்ளதால், அந்த நாட்டில் இதய நோய்கள், உடல்பருமன் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, எதிர்ப்பையும் மீறி இதைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பதப்படுத்தப்பட்ட, வறுத்த நொறுக்குத்தீனிகளுக்கு வரியை உயர்த்துவதோடு பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றைச் சேர்க்க அனைத்து மாநிலங்களும் முன்வர வேண்டும்.

நொறுக்குத்தீனி

தமிழகம், டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் உடல்பருமன், ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற இரட்டைப் பிரச்னைகளைச் சந்திக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னை காணப்படுகிறது. அதனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகள் தங்களுக்கெனத் தனிக்கொள்கைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்” என்றார்.

%d bloggers like this: