பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’

கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆவி பறக்கும் காபியோடு, தட்டு நிறைய மினி சமோசாவும் எடுத்து வைத்த நாம், ‘‘தேர்தல் ஆணையரை ஸ்டாலின் சந்தித்துள்ளாரே… என்ன விசேஷம்?’’ என்ற கேள்வியையும் முன்வைத்தோம்.

‘‘வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது தி.மு.க-வுக்கு சாதகமாகவே பெரும்பாலான இடங்களில் முடிவுகள் வர ஆரம்பித்தன. நேரம் செல்லச் செல்ல அ.தி.மு.க-வும் தொடர்ந்து முன்னிலை பெற ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் தேர்தல் நடைபெற்ற அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அறிவாலயத்துக்கு வரிசையாக புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. ஏஜென்ட்டுகளுக்கு நெருக்கடி, செல்லாத ஓட்டுகளை அ.தி.மு.க கணக்கில் சேர்ப்பது, வெற்றி பெற்றவர்களை அறிவிக்காமல் இழுத்தடித்தது என விதவிதமான புகார்கள் வர ஆரம்பித்தன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பல இடங்களில் தேர்தல் முடிவுகள் மாறிக் கொண்டிருப்பதாக நிர்வாகிகள் புலம்பவும், வழக்கறிஞர் குழுவுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டார்.’’

‘‘அங்கு என்ன நடந்ததாம்?’’

‘‘அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் புறப்படும்போதே புகார்கள் வந்த ஊர்களின் பட்டியலை கையோடு எடுத்துச் சென்றார். ஆணையரைச் சந்தித்து இந்தந்த ஊர்களில் இன்னென்ன பிரச்னைகள் என்று விளக்கமாகப் பட்டியலைக் காட்டியுள்ளார். ‘சரி, நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆணையர் சொன்னதும், ‘சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் நீங்கள் பேசவேண்டும். முதல்வரின் மாவட்டமான சேலம் மாவட்ட ஆட்சியரிடம் முதலில் பேசுங்கள்’ என்று கொஞ்சம் காட்டமாகச் சொல்ல, ஸ்டாலினைச் சமாதானம் செய்ய முயன்றுள்ளார் ஆணையர். ‘நீங்கள் இப்போது பேசாவிட்டால், நான் கீழே சென்று உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்துபோன அதிகாரி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்.’’

‘‘அப்புறம்?’’

‘‘தி.மு.க வழக்கறிஞர்கள் நான்கு பேரை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, ‘மாவட்டம்தோறும் வரும் புகார்களை உடனடியாக அதிகாரிடம் சொல்லுங்கள்’ என்று சொல்லிய பிறகே அங்கிருந்து கிளம்பியிருக் கிறார்.’’

‘‘ஆளுங்கட்சிக்கு எதிராக தி.மு.க கொந்தளித்தது என்றால், கூட்டணிக் கட்சியும் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளதே?’’

‘‘திண்டிவனத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழு விவகாரத்தைச் சொல்கிறீரா? அ.தி.மு.க-வுக்கு எதிராக அன்புமணி இவ்வளவு கோபப்படுவார் என்று யாருமே நினைத்துப்பார்க்கவில்லை என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். ‘அ.தி.மு.க கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இப்போது இருப்பது பா.ம.க. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் பா.ஜ.க-வுக்குக் கொடுத்த அளவுக்குக்கூட பா.ம.க-வுக்கு இடங்களை ஒதுக்கவில்லை’ என்று அந்தக் கட்சியினர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ‘இருபது சதவிகிதம் வரை உங்களுக்கு என்று வாக்கு கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் அலைக்கழித்துவிட்டார்கள்’ என்று கட்சி நிர்வாகிகள் புலம்பியிருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒற்றை இலகத்தில்தான் சீட்டே வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தையெல்லாம் மனதில்வைத்துதான், ‘பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’ என்று அன்புமணி சீறியிருக்கிறாராம்.’’

‘‘இதற்கு அ.தி.மு.க தரப்பில் என்ன ரியாக்‌ஷனாம்?’’

‘‘அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை தங்கள் அணிக்குள் பா.ம.க இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அ.தி.மு.க-வுக்கு எதிராக அன்புமணி பேசிய தகவல் முதல்வர் காதுக்கு எட்டியதும், வேலுமணி மூலம் ராமதாஸைத் தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். வேலுமணியும் தைலாபுரத்தைத் தொடர்புகொண்டு ராமதாஸிடம் பேசி சமாதானம் செய்துள்ளார். அன்புமணி பேச்சுக்கு ராமதாஸ் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்ததும், அந்தக் கட்சியினரை யோசிக்கவைத்துள்ளது. ‘அடுத்த முறை ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்று ஐயா உறுதியாக இருக்கிறார். அதனால், அ.தி.மு.க-வைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை’ என்கிறார்கள்.’’

‘‘ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் தொடங்குகிறதே?’’

‘‘ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகிறது. கடந்த வாரம் நிதித்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர்கள் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த முறை ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் இரண்டிலும் ஏராளமான திட்டங்களை அறிவிக்க முடிவெடுத் துள்ளார் முதல்வர். ‘ஆனால், தமிழகத்தின் நிதிநிலை தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வரும்போது, திட்டங்களை மட்டும் அறிவித்து என்ன பயன்? ஏற்கெனவே அறிவித்த பல திட்டங் களுக்கு பணம் வழங்கப் படாமல் இருக்கிறது’ என்று புலம்புகின்றனர் அதிகாரிகள். ஆளுநர் உரையில் அதிரடியான சில திட்டங்கள் இருக்கப்போகின்றன.’’

‘‘ஓஹோ!’’

‘‘முதல்வருக்கு நெருக்கமான கொங்குமண்டலத் தொழிலதிபர்கள் கொடுத்த சில ஐடியாக்களை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார் முதல்வர். அதை செயல்திட்டமாக்கும் வேலைகளும் இந்த ஆளுநர் உரையில் இடம்பெறலாம்.’’

‘‘தி.மு.க-வுக்கு வேலை செய்ய வந்த தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்யப்போவதாக ஒரு செய்தி பரவியதே?’’

‘‘அந்தச் செய்தி உண்மையல்ல. ஆனால், ‘சுனில் இருந்தவரை நாம் சொல்வதை அவர் கேட்டார். இப்போது கிஷோர் சொல்வதை நாம் கேட்க வேண்டியுள்ளது’ என்று தி.மு.க-வினர் மத்தியில் வருத்தம் இருக்கிறது’’ என்ற கழுகார்,

‘‘வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேலும்கூட முழுமையான இறுதி நிலவரங்கள் வரவில்லை. பல இடங்களில் தோல்வி காரணமாக, முடிவுகளை அறிவிக்கவிடாமல் அ.தி.மு.க மேலிடம் தடைபோட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் வாசித்தார்கள். இருப்பினும், தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்றபடி சிறகை விரித்துப் பறந்தார்.

%d bloggers like this: