புதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்!’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்

சசிகலாவுக்குப் போதாத காலமோ என்னமோ தெரியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சொத்துகள் வாங்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், விவேக் மூலமாக மற்றொரு பிரச்னையும் கிளம்பத் தொடங்கியிருக்கிறது.

`மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் சசிகலா விடுதலையாக இருக்கிறார். அதன்பின்னர் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது’ என சசிகலாவின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி சொத்துகளை வாங்கியது, சிறையிலிருந்து சசிகலா தன் கைப்பட எழுதிய கடிதத்தால் வெளிப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட அவருடன் தொடர்புடைய, 170-க்கும் மேற்பட்ட இடங்களில் 2017ம் ஆண்டு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் வீட்டில், ஒரு கடிதத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

சசிகலா – விவேக்

இக்கடிதம் குறித்து, விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து இருக்கிறார்கள். அதில், `இரண்டு மாதத்திற்கு முன், என் வீட்டு வாட்ச்மேன், ஒருவர் அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார். அதை நான் பிரித்துக்கூடப் பார்க்காமல் வீட்டில் வைத்திருந்தேன். அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறார். அந்த வாட்ச் மேன் யார் என்று அதிகாரிகள் கேட்க, எனக்குச் சரியாக ஞாபகம் வரவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

`கடிதம் தொடர்பாக, சசிகலாவிடம் ஆலோசனை செய்வதற்காக வைத்திருந்தேன். ஆனால், பல்வேறு பிரச்னைகள் நடந்துகொண்டிருந்ததால், அவரிடம் இதுகுறித்து முழுமையாகப் பேசமுடியவில்லை’ என்று, வருமான வரித்துறை அதிகாரிகளிடம், விவேக் சொல்லியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் உள்ள கையொப்பம், சசிகலாவுடையதுதான் என்பதை, அவரின் சட்ட ஆலோசகர் செந்தில் உறுதி செய்துள்ளார்.

`ஜெயலலிதா இறப்புக்கு முன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி, சொத்துகள் வாங்குவது தொடர்பாக, என்னிடம் சில தகவல்களைக் கூறினார். அதில் உள்ள விவரங்கள்தான், கடிதத்தில் உள்ளன’ என, வருமான வரித்துறை அதிகாரிகளிடம், செந்தில் தெரிவித்துள்ளார். கடிதத்தில், சொத்துகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்தக் கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து, விளக்கமளிக்கும்படி சசிகலாவுக்கு வருமானவரித் துறையினர் `நோட்டீஸ்’ அனுப்பி உள்ளனர்.

இதனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சசிகலாவின் உறவினர்களிடம் பேசும்போது, `உங்கள் குடும்பத்தில் நடந்த விஷயங்களை முழுமையாகச் சொல்லுங்கள். ஒரு வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு எங்களை வந்து பார்ப்பதில் என்ன இருக்கிறது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் யார் யாரிடம் என்னனென்ன கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என்று முழுமையாகச் சொல்லுங்கள். புதுசு புதுசா சொல்லாதீர்கள்’ என்று சசிகலாவின் வழக்கறிஞர்கள் மன்னார்குடி உறவுகளைக் கடிந்திருக்கிறார்களாம்.

%d bloggers like this: