ஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்

உள்ளாட்சித் தேர்தல் பல பாடங்களை அரசியல் கட்சிகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. திமுகவுக்கு ஒரு விதமான பாடத்தையும், அதிமுகவுக்கு இன்னொரு மாதிரியான பாடத்தையும் இந்தத் தேர்தல் கற்றுக் கொடுத்துள்ளது. அதேசமயம் திமுகவை விட அதிமுகதான் நிறைய பாடங்களை இந்தத் தேர்தலில் கற்றுக் கொண்டுள்ளது.

திமுகவும் சரி அதிமுகவும் சரி.. உள்ளாட்சித் தேர்தலில் எப்போதுமே அதிக இடங்களில் போட்டியிடவே விரும்பும். இது காலம் காலமாக நடந்து வருவதுதான். இந்த முறையும் கூட அப்படித்தான் நடந்தது. ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரளவுக்கு சீட் கொடுத்தது. அதிமுக தரப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரிய அளவில் சீட் தரப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

குறிப்பாக தேமுதிகவுக்கு சரியான அளவில் சீட் தரப்படவில்லை என்று அக்கட்சியினர் புலம்பி வந்தனர். இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில்தான் அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், திமுக முந்திக் கொண்டது அதிமுக தலைமையை அப்செட்டாக்கியுள்ளது.

முக்கிய கட்சி பாமக

அதிமுகவைப் பொறுத்தவரை கொங்கு மாவட்டங்களில் வழக்கம் போல கூடுதல் சீட் கிடைத்துள்ளது. அதேபோல வட மாவட்டங்களிலும் கணிசமான இடங்கள் கிடைத்துள்ளன. தென் மாவட்டங்கள் ஏமாற்றியுள்ளன. இங்குதான் பாமக தனது செல்வாக்கை காட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணக்கமாக இருந்து வரும் முக்கியக் கட்சி பாமக (என்னதான் டாக்டர் அன்புமணி நாங்க இல்லாட்டி அதிமுக ஆட்சியிலேயே இருக்க முடியாது என்று பேசினாலும் கூட).

நம்பிக்கைதான் முக்கியம்

தேமுதிகவை விட பாமகவைத்தான் அதிகம் நம்புகிறது அதிமுக. இதற்கு காரணம் உள்ளது. பாமகவை முழுமையாக நம்பினால் கூட்டணி தர்மத்திற்குக் கட்டுப்பட்டு முழுமையான உழைப்பைத் தரும் (அந்த தர்மத்தின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்குக் கூட பாமக ஆதரவு தெரிவித்தது). அதை இந்த தேர்தலிலும் பாமகவினர் வெளிப்படுத்தியுள்ளனர். என்ன ஒன்று.. இன்னும் கூடுதல் சீட்களை அதிமுக கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் பாமகவினர் மத்தியில் நிலவுகிறது.

இடைத் தேர்தல் ஒத்துழைப்பு

ஜெயலலிதா என்ற பெரும் தலைவர் இல்லாத நிலையில் அதிமுக சந்தித்த லோக்சபா தேர்தலில் பாமகவின் முழுமையான ஒத்துழைப்பு, உழைப்பு கிடைத்தும் கூட மோடி எதிர்ப்பு அலை, திமுக ஆதரவு அலை ஆகியவை காரணமாக அதிமுக தோல்வியைத் தழுவியது. அதேசமயம், அடுத்து வந்த சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாமகதான் முக்கியக் காரணமாக அமைந்தது. அதை அதிமுக மறக்கவில்லை.

கம்மிதான்

அதேசமயம், தனது கவுரவத்தையும் அதிமுக விட்டு விடாமல் பாமகவை ஒரு பாதுகாப்பான தூரத்தில்தான் வைத்துள்ளது. இருப்பினும் தேமுதிகவை விட பாமகவை அது சற்று இணக்கமாகவே பார்க்கிறது. இதை பாமகவும் உணராமல் இல்லை. இந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட பாமக கேட்டவற்றை முழுமையாக அதிமுக கொடுக்காவிட்டாலும் கூட ஓரளவுக்கு கொடுக்கவே செய்தது.

பாமக கைவிட்டிருந்தால்

இப்படி குழப்பங்கள் தலை தூக்கினாலும் கூட கட்சித் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பாமகவினர் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகவே பாடுபட்டுள்ளனர். இதனால்தான் திமுகவை விட பின்தங்கினாலும் கூட கவுரவமான சீட்களை அதிமுக பெற முடிந்தது. பாமகவும் கை விட்டிருந்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாக போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

காத்திருக்கும் நெருக்கடி

தற்போது அடுத்த கட்ட பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. அதாவது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்து தேர்தல் வரப் போகிறது. இந்த தேர்தலில் நிச்சயம் பாமகவுக்கு அதிக இடங்களைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதேபோல தேமுதிகவும் கணிசமான இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் அதுவும் கணிசமான இடங்களைக் கேட்கும், பாஜகவும் விடாது. எனவே அதிமுகவுக்கு நிச்சயம் இது சவாலாகவே இருக்கும்.

பாமகவுக்கு மவுசு

அதேசமயம், நம்பகமான கட்சி என்று பார்த்தால் அது பாமக மட்டுமே என்பதால் பாமகவுக்கு உரிய கவுரவத்தை நிச்சயம் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தரும் என்ற நம்பிக்கை பாமகவினர் மத்தியில் உள்ளதாம். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்வரே நேரடியாக முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளாராம். எனவே நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பாமகவினரிடம் காணப்படுகிறது.

சொந்தக் கட்சிக்கு சுளுக்கு

இப்படிக் கூட்டணிக் கட்சிகள் நிலை இருந்தாலும் கூட சொந்தக் கட்சியிலேயே பலர் தம்மைக் கைவிட்டதை முதல்வர் உணராமல் இல்லை. பண பலத்தை கட்சியின் வெற்றிக்காக பயன்படுத்தாமல் பலர் அமுக்கி விட்டதும் முதல்வர் காதுகளுக்குப் போயுள்ளதாம். எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர் கூடுதல் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளாராம்.

%d bloggers like this: