இத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி?’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க-வை முந்தி தி.மு.க பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. அ.தி.மு.க,

தி.மு.க-வுக்கு கடும் சவால் அளித்தாலும் அ.தி.மு.க தலைமை நினைத்த ரிசல்ட் வரவில்லை என்கிறார்கள். இந்த நிலையில், இதற்கான காரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து வருகிறார். அத்துடன் இதில் அ.ம.மு.க-வினர் பெற்ற வாக்குகள் மற்றும் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்களை உளவுத் துறையிடம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர், 515 மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் கொங்கு மண்டலத்தைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க-வினர் பல இடங்களில் அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இந்தத் தேர்தலில் சுமார் 15 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், அ.ம.மு.க வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வாங்கிய வாக்குகள் மற்றும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விவரங்களை, குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் பற்றி துல்லியமாகத் தகவல் எடுத்து தரும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக உளவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனால் 27 மாவட்டங்களிலும் உளவுத் துறையினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனராம்

இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம், “ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என்பது ஒவ்வொரு கட்சிக்கும் மிகவும் முக்கியமானது. ஏன் என்றால் இந்த வெற்றிதான் அடிமட்ட தொண்டர்கள் வரை சென்றடையும். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தேர்தலின் வெற்றியை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். தேர்தலுக்கு முன்பே அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம், `இதில் பெறும் வெற்றிதான் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதனால் நீங்களே நிற்பதாக எண்ணி தேர்தலில் பணியாற்றுங்கள்’ எனக் கூறியிருந்தார். அ.தி.மு.க-வினரும் பல யுத்திகளைக் கையாண்டு வெற்றி நமக்குதான் எனக் காத்திருந்தனர்.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி தேர்தல் முடிவுகள் வராதது முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரையும் அப்செட் ஆக்கியுள்ளது. பல இடங்களில் அ.தி.மு.க தோல்வியுற்றதற்கு நிர்வாகிகளின் உள்குத்து வேலைகளே காரணம் என தொண்டர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக அ.ம.மு.க-வினர் 94 ஒன்றிய கவுன்சிலர்களைப் பிடித்திருப்பதும், பல இடங்களில் பெரிய அளவிலான வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க தோற்பதற்கு காரணமாக இருந்ததும் முதல்வரை யோசிக்க வைத்திருக்கிறதாம். அத்துடன் அமைச்சர்களின் சொந்தத் தொகுதியிலேயே பல இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளது குறித்தும், `எப்படி இது நடந்தது உங்களுக்கான செல்வாக்கு அவ்வளவுதானா?’ என சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் முதல்வர் கேட்டிருக்கிறார்.

இது குறித்து தமிழக உளவுத் துறைக்கு ரகசிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் இந்தத் தேர்தலில் அ.ம.மு.க-வினர் வாங்கிய வாக்குகள் எவ்வளவு, அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புள்ளி விவரங்கள், எத்தனை இடங்களில் அ.ம.மு.க-வினர் வாங்கிய வாக்குகளால் அ.தி.மு.க தோல்வியடைந்துள்ளது என்பது போன்ற தகவல்களைக் கேட்டுள்ளாராம்.

இதனால் 27 மாவட்டங்களிலும் உளவுத் துறையினர் சீக்ரெட்டாக தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அத்துடன் உள்ளடி வேலை பார்த்த அ.தி.மு.க நிர்வாகிகள் யார் என்ற விவரமும் வேண்டும் எனக் கூறியிருக்கிறார். உளவுத்துறை கொடுக்கும் தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார் முதல்வர். அடுத்து வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்வதற்காகவும், அதில் முழுமையான வெற்றியை பெறுவதற்காகவும் இதன் விவரங்களைத் திரட்டுகின்றனர்” என்று தெரிவித்தனர்.

%d bloggers like this: