அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்..!” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஜனவரி 2-ம் தேதி வெளிவந்த முடிவுகளின்படி கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர்,

நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் அ.தி.மு.க எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மீது முதல்வர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் தலைவர் ஒருவர், “மதுரையில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மொத்தமுள்ள 23 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் ஒன்பதில் மட்டுமே அ.தி.மு.க வெற்றியடைந்துள்ளது. தனது எதிரிகளை ஒழிப்பதற்காக சமீபத்தில் ருத்ர யாகம் ஒன்றை ஒரு அமைச்சர் நடத்தினார். `யாகத்துல காட்டுன ஆர்வத்துல பாதியையாவது தேர்தல் வேலையில காட்டியிருந்தா மாவட்டத்தைப் பிடிச்சிருக்கலாமே, இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?’ என அந்த அமைச்சரிடம் எடப்பாடியார் சிடுசிடுத்தபோது அவரால் எதுவும் பேச முடியவில்லை. அந்த மாவட்டத்தில் உட்கட்சியில் நிலவிய கோஷ்டி மோதலே தோல்விக்கு பிரதான காரணம்.தேர்தல் நெருக்கத்தில் சைக்கிளில் ரவுண்ட் அடித்தும் புரோட்டா தட்டியும் வாக்கு சேகரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், அவரது சொந்தத் தொகுதியான விராலிமலையிலேயே தி.மு.க வெற்றியைத் தட்டிச் சென்றுவிட்டது. `மாவட்டத்தை எப்படியும் பிடிச்சிட்லாம்ண்ணே’ என அவர் சொன்ன தைரிய வார்த்தைகளை எடப்பாடியார் ஏற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் நிலைமைதான் பரிதாபம். இவரது மாவட்டத்திலுள்ள 33 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 23-ல் தி.மு.க வெற்றி பெற்று ராமச்சந்திரனுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. `செலவு செய்ய எங்கங்க பணம் இருக்கு? கோயில் விபூதியைத்தான் எல்லாருக்கும் பிரசாதமா கொடுக்க முடியும்’ என்று தோல்விக்கான காரணத்தை அமைச்சர் தரப்பு முனகலுடன் பட்டியலிடுகிறார்கள்” என்றார்.திருவள்ளூரில் தொடக்கத்திலிருந்தே தி.மு.க-வின் கை ஓங்கியிருந்ததை மாவட்ட அமைச்சர்களான மாஃபா பாண்டியராஜனும் பெஞ்சமினும் கவனிக்கத் தவறிவிட்டதாக முதல்வர் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. “ஆவடி, அம்பத்தூரோடு மட்டும் நிறுத்திக்கிறீங்க. உங்க மாவட்டத்துல பொன்னேரி, கும்மிடிப்பூண்டினு ஏரியா இருக்கிறதாவது தெரியுமா? தி.மு.க-வுக்குள்ளேயே ஸ்டாலின், கனிமொழி கோஷ்டினு இரண்டு பிரிவு திருவள்ளூர் மாவட்டத்துல இருக்குது. இதை ஊதிப் பெருசாக்கி நமக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாமே” என்று கடந்த ஜனவரி 6-ம் தேதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தரப்புக்கு முதல்வரிடமிருந்து டோஸ் கிடைத்ததாகவும் கட்சியின் சீனியர்கள் தகவல் கூறுகின்றனர்.

வலுவான தொழில்துறையை அமைச்சர் எம்.சி.சம்பத் கைவசம் வைத்திருந்தும், கடலூர் மாவட்டத்தில் இழுபறி நிலைமையை உருவாக்கியதற்கு முதல்வர் ரொம்பவே வருந்தினாராம். ‘தி.மு.க-வோட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிரான களத்துல நிற்கிற ஆள் நீங்க. நீங்களே கோட்டைவிட்டா எப்படி?’ என்று முதல்வர் உரிமையுடன் கோபப்படவும் தனது கட்டுப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாடி, கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளதை எடுத்துக் கூறிய எம்.சி.சம்பத், “மாவட்டத்தை அமைப்பு ரீதியா மூணா பிரிச்சுக் கொடுத்தீங்க, மற்ற மாவட்டச் செயலாளர்களும் என்ன செஞ்சிருக்காங்கன்னு கேளுங்க. என்கிட்ட கோபப்படுறதால எதுவும் மாறப்போறதில்லைண்ணே” என்று கொதித்துள்ளார்.

அமைச்சர்களில் திண்டுக்கல் சீனிவாசனின் பாடுதான் திண்டாட்டம். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி எனத் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் சீனிவாசன், மாவட்டத்திலுள்ள 23 மாவட்ட வார்டுகளில் 7 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தது முதல்வர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல்லாருக்கு போன் போட்ட எடப்பாடி பழனிசாமி, “தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தப்போ நமக்கு முதல் எம்.பி-யைக் கொடுத்த தொகுதிண்ணே அது. கட்சியில சீனியர் நீங்களே இப்படிக் கோட்டைவிட்டா, நான் யாரைப்போய் கேட்கிறது?” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். “ஏம்பா, நத்தம் விஸ்வநாதன் ஆளுங்க கோட்டைவிட்டதுக்கு என்னைய வந்து கேட்கிறீங்க” என்று திண்டுக்கல்லார் பதிலுக்கு முறுக்க, “அவரோட நத்தம் ஒன்றியத்தை அ.தி.மு.க-வுக்கு ஜெயிச்சு கொடுத்துட்டாரு. நீங்க என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்கண்ணே” என்று பதிலுக்கு முதல்வர் தரப்பில் முறுக்க, பேச்சுவார்த்தை ரணகளமானதாக அ.தி.மு.க-வினர் கூறுகிறார்கள்.

டெல்டாவைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி என டெல்டா மாவட்டங்கள் எல்லாவற்றையும் தி.மு.க துடைத்துச் சென்றுவிட்டது. குறிப்பாக, திருச்சியிலுள்ள 24 மாவட்ட வார்டுகளில் 19-ல் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. 14 ஒன்றியங்களையும் வளைத்துச் சென்று விட்டனர். இந்த மாவட்ட அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், வளர்மதி இருவர் மீதும் கட்சித் தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. `சும்மா தி.மு.க மாவட்டச் செயலாளர் நேரு வியூகம் வகுத்துட்டார், அ.ம.மு.க-காரங்க ஓட்டை பிரிச்சுட்டாங்க, பா.ஜ.க கூட சேர்ந்ததாலதான் தோத்தோம்னு கணக்கு காட்டாதீங்க. உங்ககிட்ட ஆட்சி, அதிகாரம் இருந்தும் ஒரு ஒன்றியம்கூட ஜெயிக்க முடியலைன்னா அதுக்கு நீங்கதான் வெட்கப்படணும்’ என்று கட்சித் தலைமை கொதித்துவிட்டது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூரில் கட்சி தோல்வியைத் தழுவியதற்கு அ.ம.மு.க-வைத்தான் காரணமாக அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பட்டியலிட்டுள்ளனர். `தினகரன் கட்சி ஒரு பொருட்டே இல்லைனு நாம வெளில பேசிகிட்டு இருக்கோம். ஆனா, அவங்களாலதான் தோத்தோம்னு நீங்க சொல்றீங்க. அவங்க கட்சியில இருந்து நம்ம பக்கம் ஆளுங்களை இழுக்க வேண்டியதுதானே. இந்த மூணு மாவட்டத்துலயும் இருக்கிற 666 ஒன்றிய கவுன்சிலர் இடங்கள்ல நம்மால வெறும் 203 இடங்களைத்தான் வெற்றி பெற முடிஞ்சிருக்கு. நீங்க ஒழுங்கா செலவு செஞ்சிருந்தா இந்தத் தோல்வி வந்திருக்காது’ என்று முதல்வர் தரப்பில் கடுப்படிக்கவும் அமைச்சர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் ஏற்படும் செலவுகளை மாவட்ட அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதாம். ஆனால், சொன்னபடி அமைச்சர்கள் பணத்தை அளிக்காததால்தான் தோல்வி ஏற்பட்டதாக முதல்வர் உஷ்ணமாகியுள்ளார். தவிர, ஒரு சமூக அமைச்சர்களே பசையுள்ள துறைகளை கைவசம் வைத்திருப்பதால் அதிருப்தியில் இருந்த மற்ற சமூக அமைச்சர்கள் பணமூட்டையை அவிழ்க்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ஹோட்டல் சப்ளையரிடம் முறுக முறுக ஊத்தாப்பம் ஆர்டர் செய்வார். வடிவேலு சொல்வதையெல்லாம் `சரிங்க, சரிங்க’ எனக் கேட்டுக்கொண்ட சர்வர், கடைசியில் `அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்…’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அதேபோல, தேர்தலுக்கு முன்பு எடப்பாடியார் சொல்லிய ஆலோசனைகளையெல்லாம் `ம்… ம்… ம்’ என்று கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், கடைசியில் `அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்…’ கதையாக எடப்பாடியாருக்கே தோசை ஊற்றிவிட்டனர்.

%d bloggers like this: