கிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…!!

எல்லா திசைகளுக்கும் ஆரம்பமாக கிழக்கு திசை அமைவதால் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க கிழக்கு திசை உகந்தது. காலை எழுந்தவுடன் கிழக்கு திசையை நோக்கி திக்கு தேவதைகளை நமஸ்கரிக்க வேண்டும்.


காலையில் எழுந்தவுடன் முதலில் கிழக்கு நோக்கி ஓரிரு அடிகளையாவது வைத்தல் நல்லது.

பல் துலக்கும்போது கிழக்கு திசை நோக்கி நடு விரல் (சனி விரல்) கொண்டு பல் துலக்குவதால் ஆயுள் பெருகும். வீண் சச்சரவுகள் வராது. வாய் வார்த்தைகளால் துன்பங்கள் பெருகாது.

வாய் கொப்பளிக்கும்போது இடது கை பக்கம் துப்பவும். அவ்வாறில்லாமல் வலது கை பக்கம் துப்பினால் செல்லும் காரியங்கள் தடைப்படும். நமது மூதாதையர்களான வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் நம்மைச் சுற்றி வலம் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

கிழக்கு திசையில் செய்யும் வழிபாடுகள் மற்ற திசைகளில் செய்யும் காரியங்களுக்கு உறுதுணையாக அமைந்து காரிய சித்திகளை நல்கும் என்பதும் உண்மையே.

குளிக்கும்போது கிழக்கு திசை பார்த்து குளித்தல் உத்தமம். நதி, குளம், குட்டைகள், அருவிகள், கடல், கோயில் தீர்த்தங்கள் இவற்றில் குளிக்கும்போதும் திசைகளை கவனத்தில் கொள்ளவும். தவிர்க்க முடியாத காரணத்தால் கிழக்கு திசையைப் பார்த்து குளிக்க முடியாவிட்டால் ஓரிரு குவளைகள், அல்லது ஓரிரு துளி தீர்த்தத்தையாவது கிழக்கு திசை நோக்கி நின்று தலையில் தெளித்து விட்டு பின்னர் மற்ற திசையை பார்த்து குளியலைத் தொடரலாம்.

மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது அவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு நோயாளியை மருத்துவரின் வலப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பரிசோதித்தல் நலம். அதனால் நோயின் தன்மையை எளிதாக கண்டறிந்து பயனுள்ள சேவையாற்ற முடியும்.

காலையில் துயிலெழுந்து அறைகளின் கதவு, ஜன்னல்கள் இவற்றைத் திறக்கும்போது முதலில் வலது பக்கம் உள்ள கதவுகள், ஜன்னல்கள் இவற்றைத் திறத்தல் நலம்.

%d bloggers like this: