கூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க?

உள்ளாட்சிப் பதவி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை, அதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த விளக்கம் என சத்தியமூர்த்திபவனின் கடந்த சில நாள் செயல்பாடுகள்

பதற்றத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. எங்கே தி.மு.க தங்களைக் கழற்றிவிட்டுவிடுமோ எனக் கதர் கட்சிக்காரர்கள் விரல் நகங்களைக் கடித்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸை உடன் வைத்திருப்பது லாபமா அல்லது நஷ்டமா என்று விவாதிக்க, அவசரச் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்திருப்பதால் கூட்டணி கலகலத்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மாநில நிர்வாகி ஒருவர், “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் கணிசமாக உள்ள இடங்களில் தனியாகப் போட்டியிட்டே பல ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க பிடித்துள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் எட்டு இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் நின்ற இடங்களில் எல்லாம் அ.தி.மு.க வெற்றி பெற்றதால்தான், தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களைக் கேட்டுப் பெற வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே போன்ற கட்சிகளும் கூட்டணிக்குள் உள்ளன. இவர்களுக்கே 100 தொகுதிகள் வரை ஒதுக்கிவிட்டால் மீதமிருக்கும் 134 தொகுதிகளில்தான் தி.மு.க போட்டியிட வேண்டியதிருக்கும். இன்றைய அரசியல் சூழல், தி.மு.கவுக்கு மிகவும் சாதகமாகவே உள்ளது. இதைக் கூட்டணிக்கட்சிக்குத் தாரைவார்க்க தி.மு.க தலைமை விரும்பவில்லை.

சிறுபான்மை வாக்குகளை வளைக்கத்தான் காங்கிரஸ் கட்சியை திராவிடக் கட்சிகள் உடன்வைத்திருப்பது வழக்கம். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி போன்ற பா.ஜ.கவின் திட்டங்களால், காங்கிரஸ் உதவியில்லாமலேயே தி.மு.க பக்கம் சிறுபான்மை வாக்குகள் வந்துவிட்டன. இனி எதற்கு காங்கிரஸ்? அது தேவையற்ற சுமை என்பதுதான் தி.மு.க பெருந்தலைகளின் எண்ணம்” என்றவரிடம், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் இதே மனநிலையில்தான் உள்ளாரா?” என்றோம்.

“இல்லை. அவருக்கு காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடும் எண்ணமில்லை. கடந்த ஒருவருடத்தில் மட்டும், தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் நெருக்கமாக உள்ளார். இந்த உறவை முறித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஒருவேளை காங்கிரஸை நாம் கழற்றிவிட்டால், அவர்கள் அ.ம.மு.கவுடன் அணிசேரலாம். ஏன், காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணி கூட அமையலாம். இதற்கெல்லாம் நாம் இடமளித்துவிடக் கூடாது என ஸ்டாலின் கருதுகிறார். இதுதொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகளை பெறத்தான் அவசர செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்” என்றார்.

இந்தநிலையில், இன்று டெல்லியில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தை தி.மு.க புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தி.மு.கவில் இணையும் விழா தேனியில் ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மைக் பிடித்த ஸ்டாலின், “234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெரும்” என்று பேசினார். அப்போதே, கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிட தி.மு.க தயாராகிவிட்டதோ எனக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அணிக்கு சரிபாதி வெற்றி கிடைத்திருப்பதால், அடுத்ததாக நடத்த உத்தேசித்துள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தங்கள் பங்கை இப்போதே பேசி முடிவெடுத்துவிட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. தி.மு.கவின் நிலைப்பாடு என்னவென்பது ஜனவரி 21-ம் தேதி நடைபெறவிருக்கும் செயற்குழுக் கூட்டத்தில் தெரிந்துவிடும்.

%d bloggers like this: