கறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா?!’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன?

கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 150 மரங்கள்மீது கறையான் தாக்குதல் நடந்துள்ளதால், அவற்றைப் பாதுகாக்க சுமார் நான்கு அடி உயரத்திற்குச் சுண்ணாம்பு

அடித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழக நிர்வாகம், அங்கு நிறைய கறையான்கள் இருப்பதாகவும் அவை வளாகத்திற்குள் வளர்ந்துள்ள பல்வேறு வகையான மரங்களை வேர்களிலிருந்து அரித்துத் தாக்குவதாகவும் கூறியுள்ளது. எனவே, அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க இதைச் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வேறு ஏதேனும் பூச்சி மருந்துகளை அடித்தால், சூழலியல் இசைவாகவும் இருக்காது. மரமும் பாதிக்கப்படும்.

கறையான்கள் மரங்களைச் சூழ்வதால், மரங்களுக்குப் பாதிப்பு இல்லையென்றும் அவற்றுக்குச் சுண்ணாம்பு அடித்துப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் ஒரு சாரார் இதுகுறித்துக் கூறிவருகின்றனர். கறையான்கள் மரங்களின் மீது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும், அவற்றிடமிருந்து மரங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்தானா என்று புரிந்துகொள்ள, தாவரவியல் ஆய்வாளர் பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

கறையான் எந்தளவுக்குப் பிடிக்கிறது என்பதைப் பொறுத்து அது ஆபத்தா இல்லையா என்பது மாறுபடும். பெரும்பாலும் வெளியிலிருக்கும் பட்டைகளில்தான் கறையான் பிடிக்கும். சில நேரங்களில்தான் உள்ளே பாதிப்பை ஏற்படுத்தும். அது தாக்குதல் எந்தளவுக்கு நடக்கிறது என்பதைப் பொறுத்தது.

மரங்களில் அடிக்கப்பட்ட சுண்ணாம்பு
மரங்களில் அடிக்கப்பட்ட சுண்ணாம்பு

இதற்குத் தீர்வாக நீண்ட காலமாகவே சுண்ணாம்புதான் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இது மிகவும் விலை குறைவு. மற்ற வேதிமப் பொருள்களைப் போல், தாவரங்களின்மீது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், கறையான் தாக்குதலைத் தடுக்கும். வேறு ஏதேனும் பூச்சி மருந்துகளை அடித்தால், சூழலியல் இசைவாகவும் இருக்காது. மரமும் பாதிக்கப்படும். அவற்றோடு ஒப்பிட்டால் சுண்ணாம்பு அடிப்பது பாதிப்பைக் குறைக்கும்” என்று கூறினார்.

மரங்களில் தாக்கும் கறையான் போன்ற பூச்சிகளைத் தடுக்க மரங்களில் சுண்ணாம்பு அடிப்பதால், அவை பூச்சித் தாக்குதல்களிலிருந்து ஓரளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன. அதனால்தான், சுமார் 150 மரங்களில் கறையான் தாக்குதலைத் தடுக்க எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக நிர்வாகம் சுண்ணாம்பு அடித்துள்ளது என்பதும் புரிகிறது

%d bloggers like this: