மத்திய அமைச்சரவை விரிவாக்கம்!- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி?

2020-ம் ஆண்டுக்கான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட குஜராத் பவன் கட்டடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் நாட்டின்

பொருளாதார மந்தநிலை, மத்திய அமைச்சரவை விரிவாக்கம், குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் போன்ற பல பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.

மோடி தலைமையில் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு, இதுவரை எட்டு மாதக் கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி மத்திய அமைச்சரவை பெரியளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க அமைச்சரவையில் நிபுணத்துவம் பெற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவு என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதைப் போக்கவே இந்த விரிவாக்கத் திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குகிறது. முதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுவார், இதையடுத்து மறுநாளான பிப்ரவரி 1-ம் தேதி, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும், குறிப்பாக மத்திய நிதித் துறையில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. BRICS கூட்டமைப்புக்கான புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக உள்ள கே.வி காமத்துக்கு இணை நிதியமைச்சர் பதவியும் மாநிலங்களவை உறுப்பினர் தாஸ்குப்தாவுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் இணையமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காமத், முன்னதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் இன்போசிஸின் தலைவராக இருந்தார். எனவே, அவருக்கு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான அனுபவம் அதிகம் என்பதால் நிதித்துறையில் அவருக்கு வாய்ப்பு உள்ளதாக ஆங்கில ஊடகமான ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல கூட்டணிக் கட்சியினரும் பிப்ரவரி மாதத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

%d bloggers like this: