9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்? ஆணையம் முடிவு?

மீதமுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலுடன் நகராட்சி,பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் மட்டும் கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. இந்த நிலையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றில் நடத்தப்பட்ட தேர்தலில் ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியோரும் ஓட்டு சீட்டு மூலம் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்காக 4 நிறங்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த 11-ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கானவர்கள் தேர்வு செய்தனர். இந்த நிலையில் மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.தொகுதி மறுவரையறை பணிகளை நடத்தி முடித்துவிட்டு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள 529 பேரூராட்சிகளுக்கும், 125 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அட்டவணைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 27-ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிகிறது. அது போல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகளுக்கு தனியே தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

%d bloggers like this: