உங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…

தூக்கத்தில் உங்கள் குழந்தைகளின் கனவுகள் என்னவாக இருக்கும்… அந்தக் கனவுகளில் வருபவர்கள் யாராக இருப்பார்கள்… அந்த இரவோ, அடுத்த நாள் காலையோ, அவர்களுக்கு எவ்வாறானதாக அமையும், அதன் தொடர்ச்சியாக அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

கனவுகள்

தூங்கச் செல்வதற்கு முன், உங்கள் குழந்தைகளின் நிமிடங்கள் எப்படிக் கழிகின்றன? வீட்டுப் பாடம் எழுதிய/படித்த களைப்புடன் அந்தப் புத்தகத்திலேயே தலையைச் சாய்த்தா… தொலைக்காட்சியின் ஒளியையும் ஒலியையும் தின்றவாறா… இருளில் கண்களுக்கு அருகே வைத்தவாறு ஸ்மார்ட்போனின் மாய விளையாட்டிலா..? அப்படியானால், தூக்கத்தில் உங்கள் குழந்தைகளின் கனவுகள் என்னவாக இருக்கும்… அந்தக் கனவுகளில் வருபவர்கள் யாராக இருப்பார்கள்… அந்த இரவோ, அடுத்த நாள் காலையோ, அவர்களுக்கு எவ்வாறானதாக அமையும், அதன் தொடர்ச்சியாக அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

மொட்டைமாடியில் படுத்து, வானில் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு உறங்கச் செல்வது எல்லோருக்கும் சாத்தியமானதாக இருக்காதுதான். ஆனால், உங்கள் குழந்தைகளின் உறக்கம் இனிதாக அமைவதையும், அவர்களுக்கு கனவுகள் அழகாக வருவதையும் நம்மால் தீர்மானிக்க முடியும். அதற்கு நம் நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் சேர்த்தாலே போதும்.

படிப்பை நிறுத்துங்க!

படிக்கவோ, எழுதவோ எவ்வளவு இருந்தாலும் சரி, தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முன்பே எடுத்துவைக்கச் சொல்லுங்கள். “காலையில் எழுப்புகிறேன். நானும் உதவுகிறேன்” என்று புத்தகங்களிடமிருந்து அவர்களை விடுவியுங்கள்.

படுக்கையில் அமர்ந்தவாறு குழுவாக விளையாட எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன. `கொக்கு பற பற… கோழி பற பற’ என்பதில் தொடங்கி, நாமே கற்பனை செய்து ஜாலியான பல விளையாட்டுகளை உருவாக்கலாம்.

உதாரணமாக, முதுகில் ஏதாவது எழுதி அல்லது வரைந்து காட்டி கண்டுபிடிப்பது, ஒரு தாளில் கோடு வரைந்து அதை ஓவியமாக மாற்றுவது, வெவ்வேறு எழுத்துகளை இடைவெளி விட்டு எழுதி, பின்னர் எழுத்துகளைச் சேர்த்து வார்த்தைகளை உருவாக்குவது, பாட்டுப் போட்டி என உறக்கத்துக்கு முன்பான நிமிடங்களை உற்சாகமா மாற்றுங்கள்.

கதைகளின் நேரம்!

குட்டிக் குட்டி கதைகளை உருவாக்கலாம். அதாவது, ஒருவர் ஒரு கதையை ஆரம்பித்து இரண்டு நிமிடம் சொல்லி நிறுத்த வேண்டும். அந்தக் கதையை இன்னொருவர் தன் கற்பனையில் தொடர வேண்டும்.

dream

ஒரு சிறிய கதையையே வெவ்வேறு வெர்ஷன்களிலும் சொல்லலாம். உதாரணமாக, காகம்-வடை-நரி கதையை எப்படியெல்லாம் மாற்றிச் சொல்லலாம் என யோசியுங்கள். வடைக்குப் பதில் பீட்சா வரலாம். கதை, விண்வெளியிலும் நடக்கலாம். நரிக்குப் பதில் வெவ்வேறு உயிரினங்கள் வந்தால், எப்படியெல்லாம் கேட்பார்கள் என்று யோசிக்கலாம்.

வேண்டாம் தொலைக்காட்சி!

தொலைக்காட்சி பார்ப்பதையோ, ஸ்மார்ட்போனில் விளையாடுவதையோ முற்றிலும் தவிர்க்கவும். குறைந்தது, அரை மணி நேரத்துக்கு முன்பு இவற்றை அணைத்து வைத்துவிட்டு, அது சம்பந்தமாகவே விளையாடலாம் அல்லது உரையாடலாம். உதாரணமாக, ஒரு கார்ட்டூன் கேடக்டரை/கதையை எடுத்துக்கொண்டு அதுபோல பேசுவது, அந்தக் கதை/கேரக்டர் செய்தது சரியா என விவாதிப்பது என்று இருக்கட்டும். பள்ளியில், அலுவலகத்தில் நடந்த ஜாலியான விஷயங்கள் பற்றிப் பேசுங்கள்.

வெளிநடை பயிலுங்கள்!

சாப்பிட்டு முடித்த பிறகு, தினமும் வீட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நடந்துசென்று வருவது என்று ஒரு பழக்கத்தை தினமும் பின்பற்றுங்கள். அதைக் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் சென்றுவரும்போது, வானத்தில் தொடங்கி கட்டடங்கள் வரை காணும் காட்சிகள், ஒவ்வொரு நாளும் எப்படிச் சிறுசிறு மாற்றங்களுடன் உள்ளன என்று கவனித்துப் பேசலாம். நடைப்பயிற்சியாகவும் அமையும்; நம் பகுதியின் கட்டடங்கள், மனிதர்கள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவும் உதவும்.

வீட்டுக்குள்ளே பயிற்சி!

தினமும் வெளியே செல்ல முடியாது என்றால், வீட்டுக்குள்ளேயே எளிய உடற்பயிற்சிகளை ஜாலியான விளையாட்டாக வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, இன்றைக்கு பாட்டு பாடிக்கொண்டே தோப்புக்கரணம் போடுவது, நாளைக்கு ஒரு வட்டம் போட்டுவிட்டு அதற்குள்ளேயே ஜாகிங் போவது, இன்னொரு நாள், தலைமீது சிறிய கிண்ணத்தையோ, புத்தகத்தையோ வைத்துக்கொண்டு, அது கீழே விழாதபடி உட்கார்ந்து உட்கார்ந்து எழுவது என இப்படி ஏதாவது ஒரு விளையாட்டைச் செய்தால், உடலுக்கும் பயிற்சி அளித்ததாக இருக்கும், உறக்கமும் நன்றாக வரும்.

தூங்கச் செல்வதற்கு முன்பு, இப்படி சின்னச்சின்ன விளையாட்டுகளை ஆடுவதால், குழந்தைகளுக்கு நம்முடனான பிணைப்பு அதிகரிக்கும். அவர்களின் உறக்கமும் கனவுகளும் இனிமையாக இருக்கும். செய்துபார்க்கலாமா?

%d bloggers like this: