தாமரையைத் தவிர்க்கும் இலை! – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குப் போக வேண்டும். கேட்க வேண்டிய தகவல்களை சீக்கிரம் கேட்டுவிட்டு அனுப்பி வையும்’’ – அலுவலகத்துக்குள் கழுகார் நுழைந்ததும் இப்படிச் சொல்ல, ‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இருக்கட்டும். உள்ளாட்சித் தேர்தலையொட்டி கழகங்களில் நடந்துகொண்டிருக்கும் கலகங்கள் காரணமாக, கூட்டணிகளுக்குள்ளேயே ஜல்லிக்கட்டுகள் நடக்கின்றனவே… அவற்றைப் பற்றிச் சொல்லும்!’’ என்று செல்லமாக அதட்டினோம்.

‘‘விளக்கமாகவே சொல்கிறேன். ‘அ.தி.மு.க கூட்டணி யிலிருந்து பா.ஜ.க விலகினால் அது பம்பர் பரிசு’ என்று அன்வர்ராஜா பற்றவைத்த நெருப்பு, கூட்டணிக்குள் திகுதிகுவென எரிகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அன்வர்ராஜாவின் மகள் தோல்வியைத் தழுவியபோது, ‘சி.ஏ.ஏ-வை ஆதரித்ததால் இஸ்லாமியர் வாக்குகள் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கவில்லை. தோல்வி எனத் தெரிந்தே என் மகளை களத்தில் இறக்கினேன்’ என்று வெம்பிப் போனவராகச் சொன்னார். அவர் சொன்னது கூட்டணிக்குள்ளும் கட்சிக்குள்ளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ‘என்.ஆர்.சி-யை மத்திய அரசு கொண்டுவந்தால் அதை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்று சட்டமன்றத்திலேயே அமைச்சர் உதயகுமார் பேசியது, கூட்டணிக்குள் மேலும் புயலைக் கிளப்பியது.’’

‘‘அ.தி.மு.க தலைமை இதை எப்படிப் பார்க்கிறது?’’

‘‘ஏற்கெனவே, ‘நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந் தால் இன்னும் கூடுதலான இடங்களைப் பெற்றிருப்போம்’ என்று பொன்னார் சொல்லியிருந்தார். ‘உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அ.தி.மு.க எங்களுக்கு இடங்களை ஒதுக்கவில்லை’ என்ற வருத்தம் ஆரம்பத்திலிருந்தே பா.ஜ.க தரப்புக்கு இருந்தது. அதைத்தான் தேர்தல் முடிந்த பிறகு இப்படி வெளிக்காட்டினார். ‘இதற்கான ரியாக்‌ஷனை தலைமையிலிருந்து கொடுத்தால் நன்றாக இருக்காது’ என்று நினைத்த எடப்பாடி தரப்பு, ராஜேந்திர பாலாஜிக்கு சிக்னல் கொடுத்தது. அவர், ‘தனித்துப் போட்டியிட்டால் உண்மையான பலம் என்னவெனத் தெரிந்துவிடும்’ என்று பதிலடிகொடுத்தார். ‘மோடி எங்கள் டாடி’ என்று சொன்னவரிடமிருந்து இப்படி ஒரு பதிலடியை பா.ஜ.க தரப்பு எதிர்பார்க்கவில்லையாம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இது ஒருபுறம் என்றால், அமைச்சர் நிலோஃபர் கபில் பேசும் வீடியோ ஒன்று கூட்டணிக்குள் அடுத்த சலசலப்பை ஏற்படுத்தியது. வாக்காளர்களிடம் நிலோஃபர் ‘அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை’ என்று சொல்லும் அந்த வீடியோவை அ.தி.மு.க தலைமைக்கு அனுப்பிய பா.ஜ.க தலைவர் ஒருவர், தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க கூட்டணிக்குள் உள்ள சலசலப்பை, தமிழகம் வந்திருந்த வெங்கையா நாயுடு காதில் சிலர் போட்டுள்ளனர். அவர், ‘அடுத்த தேர்தலில் உங்களுக்கு எங்கள் ஆதரவு வேண்டும் என நினைக்கிறீர்களா?’ என்று ஓப்பனாகவே அ.தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க விஷயத்தில் எப்போதும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் வெங்கையா நாயுடுவே இப்படி கடுப்புடன் நடந்துகொண்டதை அ.தி.மு.க தலைமை எதிர்பார்க்க வில்லையாம்.’’

‘‘ஓ… அதன்பிறகுதான் அ.தி.மு.க தலைமையிலிருந்து அறிக்கை வெளிவந்ததோ?’’

‘‘இனியும் அமைதியாக இருந்தால் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி சிக்கலைப் பெரிதாக்கிவிடுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதற ஆரம்பித்து விட்டனராம். அதனால்தான் இருவரும் இணைந்து வழக்கம் போல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ‘அ.தி.மு.க-வின் கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் (ஓ.பி.எஸ்) மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர் (இ.பி.எஸ்) இருவரும் தீர ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். தனிநபர்கள் எவரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் நெறிப்படுத்து கிறோம்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதிலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.’’

‘‘ஓ, `கண்டிப்புடன் நெறிப் படுத்துகிறோம்’… அடடா, என்னவொரு வார்த்தை விளையாட்டு!’’

“அவர்களுடைய வலி அவர்களுக்குத்தானே தெரியும். கோபமாக ஏதாவது பேசி விட்டால் இன்னும் வம்பு பெரிதாகிவிட்டால் என்னாவது என்று பயப்படுகிறார்கள். ‘பாம்பும் சாகக் கூடாது… தடியும் நோகக் கூடாது’ என்பதுபோல் உள்கட்சியையும் பா.ஜ.க-வை யும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் அந்த இருவருக்குத்தானே! வில்லங்க விவகாரங்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள் மற்றும் சில நிர்வாகிகள் எல்லோரும், பா.ஜ.க-வைவிட்டு விலகினால் விலங்கு மாட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் உள்ளனர்.’’

‘‘நியாயமான பயம்தானே!’’

‘‘மற்றவர்களோ… ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் தோல்வியைத் தழுவுவது நிச்சயம். எதற்காக அவர்களை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும்? கழகத்தில் இதுபோன்ற சிக்கல்கள் வந்துவிடக் கூடாது என்பதற்குத்தானே, 11 நபர்களைக்கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கலாம் என்று சொன்னோம். அதையும் அமைக்கவில்லை. சில அமைச் சர்கள் செய்த தவற்றை மறைப்பதற்காக, அவர்களைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க-வுடன் இணக்கமாகப்போவது சரியில்லை. மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலையாட்டுவது எந்த வகையில் நியாயம்? இதே நிலை தொடர்ந்தால் கட்சிக்குள் தனியாக மோடி அணி, லேடி அணி என்று இரண்டு அணிகள் உருவாகிவிடும்’ என்று எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.’’

‘‘மோடி அணி… லேடி அணி… சுவாரஸ்யமாக இருக்கிறதே!”

‘‘முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி, பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசிவருகிறாராம். அவர்தான், ‘மோடியுடன் கூட்டணி தொடர்ந்தால் கட்சி காணாமல்போய்விடும். அதற்கு எதிராகக் குரல்கொடுங்கள்’ என்று அணி திரட்டிவருகிறார். இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குத் தெரிந்து, கே.சி.பழனிசாமியைச் சமாதானப்படுத்தத் திட்டமிட்டுவருகிறார்களாம்.”

‘‘அப்படியென்றால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பா.ஜ.க கூட்டணியைத் தொடர நினைக்கிறார்களா?’’

‘‘அப்படியும் சொல்லிவிட முடியாது. இப்போதைக்கு எதிர்ப்புக்காட்டி தாமரையைக் கழற்றிவிட்டால் பஞ்சாயத்து பெரிதாகிவிடும். தேர்தல் நெருக்கத்தில் கழற்றிவிடலாம். அப்போது, அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராக மத்தியில் ஆளும் பி.ஜே.பி நடவடிக்கை எடுத்தால், ‘கூட்டணியில் சேர்க்கவில்லை என்பதால்தான் இதெல்லாம்’ என்று பிரசாரத்தை ஆரம்பித்துவிடலாம் என்பதுதான் அவர்களின் கணக்கு என்கிறார்கள்.’’

‘‘எத்தனுக்கு எத்தன்! சரி, தி.மு.க கூட்டணியிலும் கலகம்தானே?”

‘‘சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சில கட்சிகள் கழன்றுகொள்ளும் வாய்ப்பு உள்ளது. முதல் அறிகுறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிக்கை. ‘தி.மு.க-வின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்துக்கு எதிராக இருக்கின்றன’ என்று அவர் சொல்லியதும், தி.மு.க தரப்பு ஏகத்துக்கும் டென்ஷனாகியது. மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் அழகிரியின் கருத்தை ஆமோதித்தது, இரண்டு கட்சிகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியிருக்கிறது.”

“ஓஹோ!”

‘‘மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தரப்பு கடுப்பில் இருந்தது. தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் முடிந்த அன்று கே.எஸ்.அழகிரியைத் தொடர்புகொண்ட கார்த்தி சிதம்பரம் தரப்பினர், ‘சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நம்மை தி.மு.க முற்றிலும் புறக்கணித்து விட்டது. அவர்களுக்கு எதிராக அறிக்கையைத் தயார்செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கின்றனர். அழகிரி தயக்கம்காட்டவே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமியை சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பி, அழகிரி மூலமாக அறிக்கையை வெளியிடச் செய்திருக்கின்றனர்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘ஏற்கெனவே, ஸ்டாலினுக்கும் சிதம்பரத்துக்கும் ஆகாது என்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் சிதம்பரமே பேசியும் தி.மு.க மாவட்டச் செயலா ளர்கள் பல இடங்களில் காங்கிரஸைப் புறக்கணித் திருக்கின்றனர். சென்னையில் தி.மு.க நடத்திய சி.ஏ.ஏ-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேச சிதம்பரம் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஸ்டாலின் பேசியதோடு பேரணியை முடித்து விட்டார்கள். இதில் சிதம்பரம் மிகவும் அப்செட்டாம்.’’

‘‘சிதம்பரம் தரப்பினரின் திட்டம்தான் என்னவாம்?’’

‘‘வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வேறு முடிவு எடுக்கவேண்டும் என நினைக்கி றார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பாலானவை மோடிக்கு எதிரானவைதான். அவற்றை நாமே ஏன் அறுவடை செய்யக் கூடாது என்று சிதம்பரம் தரப்பினர் திட்டமிடுகிறார்கள்.’’

‘‘என்ன செய்யப்போகிறார்களாம்?’’

‘‘அவர்களின் சாய்ஸ் ரஜினிதான். ரஜினியும் சிதம்பரமும் நீண்டநாள் நண்பர்கள். ரஜினியை பி.ஜே.பி தரப்பு வளைக்க முயன்று இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. அதை சிதம்பரம் தரப்பு எடுக்கிறது. ரஜினி கட்சி தொடங்கினால், அவருடன் காங்கிரஸையும் கமலையும் சேர்த்து கூட்டணியை பலமாக்கலாம் என, டெல்லி தலைமையிடமும்கூட ஆலோசித்தாக கேள்வி. தி.மு.க தலைமைமீது ஏற்கெனவே மனவருத்தத்தில் இருக்கும் திருமாவளவனையும் இதில் இணைப்பார்களாம்.’’

‘‘ரஜினி தரப்பு என்ன நினைக்கிறதாம்?’’

‘‘பா.ஜ.க ஆயிரம் முறை வலை வீசியும் பிடிகொடுக்கவில்லைதான். அதற்காக காங்கிரஸ் பக்கம் சாய்ந்து, பா.ஜ.க-வின் கோபத்துக்கும் ஆளாக விரும்ப மாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற வகையில் கடைசியில் எதுவும் நடக்கலாம்.’’

“இந்தத் திட்டங்களெல்லாம் தி.மு.க-வுக்குத் தெரியாதா?”

“எல்லாம் தெரிந்ததால்தானே கோபத்தைப் பெரிதாக வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தி.மு.க புறக்கணித்து அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. ‘அழகிரியின் அறிக்கைதான் இதற்குக் காரணம். பழையபடி கூட்டணி இருக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்’ என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு சொல்லி யிருப்பது விரிசலை இன்னும் அதிகரித்துள்ளது.’’

‘‘தி.மு.க தரப்பில் காங்கிரஸை ஒரு பொருட்டாகவே மதிக்காததுதானே இதற்கெல் லாம் காரணம்?’’

‘‘உண்மைதான். ஆனால், காங்கிரஸ் தரப்பில் ரஜினியிடம் நெருக்கமாக இருப்பது தெரிந்துதான் இந்தச் சந்தர்ப்பத்தை தி.மு.க பயன்படுத்திக் கொள்கிறது என்கிறார்கள். குறிப்பாக, சிதம்பரத் துக்கு நெருக்கமான கராத்தே தியாகராஜன், அடிக்கடி மு.க.ஸ்டாலினைச் சீண்டிக் கொண் டிருக்கிறார். ரஜினியையும் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். தற்போதைக்கு காங்கிரஸில் கராத்தே இல்லை என்றாலும், கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரத் துடன் நெருக்கமாகவே இருக்கிறார். அதனால்தான் ஸ்டாலினை விமர்சிக்கும் அவருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை என்கிற கோபம் தி.மு.க-வுக்கு உண்டு.’’

‘‘இருக்கட்டும்…’’

‘‘அதனால், காங்கிரஸைக் கழற்றிவிட்டால்கூட தவறில்லை என்ற முடிவுக்கு தி.மு.க தரப்பில் வந்துவிட்டார்கள். அடுத்தகட்ட உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிடுவதே சந்தேகம் என்கிறார்கள்’’ என்ற கழுகார் சட்டென்று பறந்தார்.

ருப்பசாமி பாண்டியனைத் தொடர்ந்து தென்மாவட்டம் மற்றும் வடமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தி.மு.க மா.செ-க்கள் அணிமாறத் தயாராக இருக்கிறார்கள். இந்த இருவரையும் மூத்த அமைச்சர்கள் இருவர் வசப்படுத்திவிட்டார்களாம்!

மிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைகள் திட்டத்துக்கான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்மீது, துறைரீதியான புகார் கிளம்பியுள்ளது. விரைவில் அவர்மீது நடவடிக்கை பாயலாம் என்கிறது கோட்டை வட்டாராம்.

ன் கல்லூரி, பங்களாவுக்காக கடன் வாங்கியதில் ஏக சிக்கலில் இருக்கிறாராம் கதர் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர். பழைய தாமரை பழக்கத்தில் டெல்லியில் பேசி, பிரச்னைக்கு தற்காலிகமாக அணை போட்டிருக்கிறாராம்.

மரணங்களின் மர்மம் என்ன?

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜனவரி 11-ம் தேதி இரவு திருச்சியிலிருந்து விமானத்தில் பயணித்தார். வழியனுப்பிவிட்டு ஊர் திரும்பியபோது வீரபெருமாள்பட்டி அருகே புளியமரத்தில் அவரின் கார் மோதி விபத்துக்குள்ளானது. அமைச்சரின் உதவியாளரும் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளருமான வெங்கடேசன், டிரைவர் செல்வம் இருவரும் பலியானார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இரவு, விராலிமலை தாசில்தார் பார்த்திபனும் இதேபோல்தான் புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு சம்பவங்களும் ஒரே பாணியில் நடந்திருப்பதைவைத்து, இந்த விபத்துகளில் மர்மங்கள் இருப்பதாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

%d bloggers like this: