சாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே!

வாக்கு வங்கி அரசியலில் இது நூதனமானது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.. அதாவது தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறை வழிபாடுகளில் தீவிர நம்பிக்கை வைத்திருப்பவர்கள், சென்டிமென்ட் பார்ப்பவர்கள், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள்.. இவர்களை ஒரு வாக்கு வங்கியாக மாற்றும் வித்தியாசமான முயற்சி நடப்பது கிட்டத்தட்ட தெளிவாகியுள்ளது.

இதுவரை ஜாதியை வைத்துத்தான் அரசியல்வாதிகள் விளையாடி வந்தனர். மதம் எல்லாம் கூட பின்னால்தான். ஜாதிதான் தமிழக அரசியலில் (அதை ஒழிப்போம் என்று நாடி நரம்பு புடைக்க கத்தி கூப்பாடு போட்டாலும் கூட.. அதை வைத்துத்தான் ஒவ்வொரு கட்சியும் இது நாள் வரை பிழைத்துக் கொண்டுள்ளது) முக்கியமான விஷயமாக உள்ளது.

அதை அப்படியே புரட்டிப் போடும் முயற்சியைத்தான் இந்துத்துவ அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது இன்று நேற்றல்ல.. பல வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை வலிமையாக இருப்பது திராவிட சித்தாந்தம், மதச்சார்பின்மை மற்றும் பகுத்தறிவு. இதை உடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல.

எனவேதான் மாற்று வழி குறித்த யோசித்த இந்துத்தவ கட்சிகள், அமைப்புகள் ஆன்மீகத்தை கையில் எடுத்தன. இது மிக மிக சுலபமானது கூட. இந்துக்களின் வாக்குகளை மிகப் பெரிய அளவில் ஒன்று திரட்டினாலே போதும் மிகப் பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்த முடியும் என்பதே அவர்களின் நம்பிக்கை.

இதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம்தான் கடவுள் நம்பிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சி. இதுதொடர்பாக பலமுறை செய்திகள் வந்தபோதும் கூட திராவிட இயக்கங்களை இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதெப்படி நம்மைத் தாண்டி யாரும் வந்து விட முடியும் என்ற மிதப்பு இன்று வரை அவர்களிடம் உள்ளது. ஆனால் அவர்களின் அடித்தளத்தை ஆட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டன இந்துத்தவ கட்சிகள் அமைப்புகள் என்பதை அவர்கள் சுலபமாக மறந்து விட்டனர்.

இன்று பாஜக கொடி பல கிராமங்களில் பறப்பதை பார்க்க முடிகிறது. பாஜக மட்டுமல்லாமல் இந்து முன்னணி, இந்து மகா சபா என இதுவரை கிராமங்களை எட்டிப் பார்க்காத அமைப்புகள் கூட இன்று தங்களது கொடிகளை அங்கு பறக்க விட்டுள்ளன. உறுப்பினராக இருப்பது நாலு பேரோ அல்லது 40 பேரோ.. அது மேட்டர் அல்ல.. அவர்கள் அங்கு வந்து விட்டனர் என்பதுதான் மெசேஜ்.

முன்பெல்லாம் கன்னியாகுமரி, கோவை என விரல் விட்டு எண்ணும் மாவட்டங்களில்தான் பாஜகவின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இன்று பல மாவட்டங்களில் அவர்கள் அடித்தளம் அமைத்து விட்டனர். ரொம்ப சிம்பிளான முறையில் அவர்கள் ஆதரவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். ஆத்திகர்களை தம் பக்கம் கொண்டு வருகிறார்கள். இந்து பாரம்பரியத்திற்கு எதிரான திமுக, திக இன்னும் உங்களுக்கு வேண்டுமா என்று அவர்கள் செய்த பிரச்சாரம் பலரை அவர்கள் பக்கம் கொண்டு போயுள்ளது. இது மறுக்க முடியாத உண்மை.

அதேசமயம், மோடி தலைமையின் கீழ் பாஜக கொடியின் கீழ் அனைத்து இந்துக்களையும் கொண்டு வர முடியாது என்பதால்தான் ரஜினி என்ற புதிய பிராண்ட் களம் இறக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். நிச்சயம் ரஜினி பின்பு கூடுதல் இந்துக்களை அணி திரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. நான் இறை நம்பிக்கைக்கு ஆதரவானவன், ஆன்மீகவாதிகளின் மனதை புண்படுத்தும் செயல்களைச் செய்ய மாட்டேன். அதற்கு மதிப்பு கொடுப்பேன். இந்து தர்மத்தைக் காப்பேன், திமுக, திக போல மத நம்பிக்கையை இழிவுபடுத்த மாட்டேன் என்ற மறைமுக செய்தியைத்தான் நேற்றைய பேட்டி மூலம் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது நிச்சயம் தீவிர இந்துக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் (அதெல்லாம் இருக்காது என்று பிடிவாதமாக சொன்னால் அது முட்டாள்தனமாகவே இருக்கும்.. நமது நம்பிக்கையை சீர்குலைக்காத ஒருவர் வந்து விட்டதாகவே கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருப்பவர்கள் நிச்சயம் ரஜினியைப் பார்ப்பார்கள் என்பதே எதார்த்தம்)

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவை விட திகவைப் பிடிக்காதவர்கள் அதிகமாகவே உண்டு. காரணம் அவர்களின் முரண்பாடு நிறைந்த செயல்பாடுகள். அதனால்தான் திகவை திமுகவே கூட சற்று தூரமாகவை வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இன்று ரஜினிக்கு எதிராக திகவே கூட விஸ்வரூபம் எடுத்து செயல்படாமல் அமைதியாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள், கட்சிகளின்

திட்டமிட்ட செயல்பாடுகள் அவர்கள் எதிர்பார்த்த திசையில் நகர்வதாகவே தெரிகிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் இதை எப்படி அணுகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக மக்கள் எப்போதுமே வித்தியாசமான முடிவுகளைக் கொடுக்கக் கூடியவர்கள். அவர்கள் ரஜினிக்கும், அவரது ஆதரவு தளத்திற்கும் என்ன மாதிரியான டிரீட்டை வைக்கப் போகிறார்கள் என்பது காத்திருந்து காண வேண்டிய சுவாரஸ்யம் ஆகும். இது நிச்சயமாக ஒரு பொளேர் திட்டம்தான்.. அதாவது.. ரஜினியை வைத்து செம கேமுக்குத் திட்டம் சென்டிமென்ட்டில் அடித்து வாக்குகளை அள்ள திட்டம்!!

%d bloggers like this: